நாட்டுப்புறப் பாடல்கள் ------------------- சிவா

முன்னுரை


நாட்டுப்புறப் பாடல்கள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டுப்புறப் பாடலைக் கேட்டு மயங்கும் சூழல் அமைந்துள்ளது. நாட்டுப்புறப் பாடலின் இன்ப இசை எல்லா மக்களாலும் வெகுவாகச் சுவைக்கப்படுகின்றது. பாரதியார் கூட,


ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்


நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாடுகின்றார்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பியல்புகளை அறியும் வண்ணம் இப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.


நாட்டுப்புற இலக்கியங்கள் பற்றிய முந்தைய பாடத்தில் பாடல்கள் உள்ளிட்ட அனைத்து வகை நாட்டுப்புற இலக்கியங்களின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டது. நாட்டுப்புற இலக்கியத்தின் ஓர் அங்கமான நாட்டுப்புறப் பாடல்களுக்கும் அந்தத் தன்மைகள் அப்படியே பொருந்தும். இந்தப் பகுதியில் நாட்டுப்புறப் பாடல் பற்றிய வரையறைகள், அவற்றை வகைப்படுத்துதல், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் உத்திகள், தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு ஆகியவை பற்றி விளக்கமாகக் காணலாம். தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் எனும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.


நாட்டுப்புறப் பாடல் - வரையறைகள்


நாட்டுப்புறப் பாடல்கள் எவை என்பதை அவற்றைக் கேட்கும் போதோ படிக்கும் போதோ கண்டுபிடித்துச் சொல்லி விடலாம். எதைக் கொண்டு அவ்வாறு சொல்ல முடிகிறது? அவற்றின் தன்மைகள் கேட்டுப் படித்த அனுபவத்தில் உங்களுக்குள் பதிவாகியிருக்கின்றன. அவற்றின் வரையறைகளை விளக்கிச் சொல்ல முடியுமா? அறிஞர் பலர் நாட்டுப்புறப் பாடல்களுக்கான வரையறைகளைத் தெரிவித்துள்ளனர். அவற்றை இங்குக் காண்போம்.


நாட்டுப்புறப் பாடல்களை - நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். (சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புறவியல், பக். 186)


"புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்கள். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள். இலக்கிய வரலாறு என்னும் கடலில் சங்கமம் ஆகும் ஆறுகளில் நாட்டுப்புறப் பாடல் என்னும் ஆறு ஒன்றாகும்" என்கிறார் ஆறு. அழகப்பன்.


நாட்டுப்புறப் பாடல் பற்றி விளக்கும்போது சு. சண்முக சுந்தரம் பின் வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார். " நாட்டுப்புறம் என்பது கிராமமும் கிராமீயம் சார்ந்த இடங்களும் ஆகும். இவ்விடங்களில் பாடப்பட்டு வருகின்ற பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இப் பாடல்கள் எளியவை; இனியவை; எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் உலவிக் காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இவை தனி உரிமை, உடைமை உள்ளவையல்ல. பொது உரிமையும், உடைமையும் கொண்டவை. என்று பிறந்தவை, எவரால் பிறந்தவை என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் இவற்றுக்கு உண்டு."


நாட்டுப்புறப் பாடல்களின் தன்மைகள் பற்றி அவர் மேலும் கூறுகிறார்.


"நாட்டுப்புறப் பாடல்களின் சொற்கள் எளியவை, எங்கும் தேடிப் பெறாதவை; அன்றாட வாழ்வில் புழங்குபவை; கொச்சையானவை. நாட்டுப்புறப் பாடல்களில் அடிகளைத் திரும்பப் பாடும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. மாறாக, சொன்னதையே சொல்வதன் மூலம் அக்கருத்து வலுப் பெறுகிறது. கேட்கவும் இனிமை பயக்கிறது".

எழுதியவர் : (11-Apr-18, 5:17 pm)
பார்வை : 327

மேலே