நெருப்பு நிலா நூல் விமர்சனம் --- முஹம்மத் ஸர்பான்

'நெருப்பு நிலா' தமிழுக்குப் புதிது. 'கேப்டன் யாசின்' கவிதையில் இனிது.

சின்னச் சின்ன மழைத்துளிகளை டம்ளருக்குள் கடலாக ஒளித்து வைக்கிறேன். நீல நிற நட்சத்திரங்களை மின்னல் கத்தியால் வெட்டிப் பார்க்கிறேன். மூங்கில் காட்டுக்கு பூக்களின் சுவாசங்களால் வேலிகள் கட்டுகிறேன். பாற்கடலின் கரையில் அமர்ந்து கொண்டு 'நெருப்பு நிலா' வாசிக்கிறேன்.

பட்டாம் பூச்சிகளின் சிறகுகளில் டாவின்சி ஓவியங்கள். குறிஞ்சிப் பூக்களின் காதுகளில் கன்னியின் ரகசியங்கள். இமய மலையின் உச்சியில் 'மொட்டை நிலா', தமிழின் பிரசவத்தில் குழந்தை போல் பிறக்கிறது 'நெருப்பு நிலா'.

காலை, மாலை நான் போகும் சாலை எங்கும் அவளது ஞாபகங்கள். பைத்தியக்காரன் போல காற்றின் காதுகளில் பேசுகிறேன். காளான்கள் மேலே கானல் நீரால் வீடுகள் கட்டுகிறேன். சுவாசக் காற்றால் புல்லாங்குழல்கள் செய்கிறேன். என்னவள் பெயரை மட்டும் பாடுகிறேன். அந்த உயிர் என்ற வீட்டை உனக்கு உயிலாக எழுதிக் கொடுத்து விட்டேன். சிற்பிக்குள் தமிழ் முத்தாய்,

'அவளின் முகத்தை
என் இதயச் சிற்பிக்குள்
பொத்தி வைக்கிறேன்'

'தேர்ந்த சிற்பி
நேர்த்தியாய் வடித்த
உயிர்ச் சிற்பம்
என்னவள்'

'என் நாடி நரம்புகளில்
காதல் நினைவுகளாய்
ஓடிக் கொண்டிருப்பவள் நீ!'

நதிகள் ஓடும் பூமியில் முகம் பார்க்கும் வானவில் போல இக்கவிதைகள் பறைசாற்றுகின்றது.

நானும் அந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். தரையில் கால்கள் உள்ள போதும் வானத்தில் பறக்கிறேன். சிட்டுக் குருவியின் கூட்டுக்குள் மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடுகிறேன். கடவுச் சொல்லை மறந்து விட்டேன்; கடவுச் சீட்டை தொலைத்து விட்டேன். எனது வீட்டில் அகதி போல் வாழ்கிறேன். உன் வீட்டுக் காவலாளியாகி ராஜா போல் நடக்கிறேன். வைத்தியனை தேடிப் போகிறேன். அறிகுறிகளை சொல்கிறேன்; அவன் எழுதிக் கொடுத்த மாத்திரையை அவளிடம் வாங்குகிறேன். இன்று நான், நாளை நீங்கள் இந்த வியாதிக்கு ஆளாகலாம். 'காதல் ஒரு வைரஸ்' அதனது பரிசுத்தத்தை,

'காதல்
பூமியின் ஆன்மா
பிரபஞ்சத்தின் மையம்
உயிரின் கர்ப்பப்பை
விஞ்ஞானத்தின் பிரவசக்களம்
காற்றின் சுவாசம்
இதயத்தின் லப்டப்'

'காற்றும் காதலும்
ஒன்று தான்
இந்த இரண்டும்
எந்த ஜீவனையும்
விட்டு வைத்ததில்லை
அது அவனையும்
தொற்றிக் கொண்டது'

குடைகள் இருந்தும் அடைமழையில் நனையும் ஆனந்தம் போல இக்கவிதைகள் இனிப்பைத் தருகிறது.

போர்க்களத்தில் வெள்ளைக் கொடிகளை மட்டும் ஏந்திக் கொண்டிருந்தேன். துப்பாக்கிகள் என்னைச் சுட்டது. இதயத்தில் மட்டும் காயப்பட்டேன். அதிகாரப் பார்வைகளை செங்கற்களாக வைத்து ஒரு நூலகம் கட்டுகிறேன். அங்கே போர்க் கைதியாய் தனிமைப்படுத்தப் படுகிறேன். ஒரு கவிஞனாகிறேன். என்பதை,

'விரித்து வைத்த
புத்தகத்தில்
காதலைப் படித்து
கொண்டு இருந்தேன்'.

இக்கவிதை வரிகள் எளிமையாக உணர்த்துகின்றது.

வாழ்க்கை என்பது பலருக்கு போராட்டம்; சிலருக்கு அஹிம்சை. எண்ணங்கள் போல் யாவும் வசப்படும். உனக்காக விடியும் வரை கண்ணீர்த்துளிகளால் கனவுகளுக்கு வட்டி கட்டு; காயங்களுக்கு காயங்களால் மருந்து போடு; உனக்கான ஆயுதத்தை நீயே தெரிவு செய், அதற்காக அடுத்தவனிடம் உன் தலையை அடகு வைக்காதே! முடியும் என்று நம்பு, உலகம் ஒரு நாள் உனக்காக கைகள் தட்டும். என் மனம் தொட்ட கீழுள்ள கவிவரிகள் இதனை எடுத்துரைக்கிறது.

'கடலில் செல்ல
கப்பல் எதற்கு
அலை போதும் என
அடம் பிடிப்பவன்'.

என்புகள் உடைந்த பின்னும் எழுந்து நிற்க மறுக்கவில்லை. பாதையை மறந்த போதும் பயணத்தை நிறுத்தவில்லை. உதயம் என்ற சொல்லில் அஸ்தமனத்தை கண்டு ஏமாந்த உள்ளங்களின் வேதனையை,

'இதயத்தை தொலைத்த அந்த
இந்தியக் குடிமகன்
ஆதவன்'

இக்கவிதை வரிகள் பறைசாற்றுகின்றது.

தன்னந்தனியாக பூங்காவில் அமர்ந்திருந்தேன். பூக்களுக்கு காதல் கடிதங்கள் எழுதினேன். வாலியின் மூன்று லட்சம் சொற்களை திருடி வந்து உன் அழகென்ற கடலில் கொட்டுகிறேன். வைரமுத்துவின் கையொப்பம் போல அவளது உள்ளங்கைக்குள் புத்தகங்கள் பிறக்கிறது. ஒளிந்திருந்து அவள் குறும்புகளை ரசிக்கிறேன், நிச்சயம் அவள் தேவதை தான். அருகில் வந்து அவைகளை பரிசாகக் கேட்கிறேன். முறைத்துக் கொள்கிறாள். உன் கண்களில் என் நாட்குறிப்பு படாத வரை நான் குளிர் காய்ந்து கொள்வேன்; அது போல் உன் நாட்குறிப்பு என் கண்களில் பட்டால் நீ குளிர்காயும் விறகாவேன். என்பதை,

'கிட்டப் போனால்
சுட்டுப் பொசுக்குதவற்கு
அவள் என்ன
சூரியனா?'

'உன் பார்வை
என்ன கத்தியா
மென்மையாய்க் குத்தினாலும்
கடுமையாக வலிக்கிறதே!'

பனித்துளிகள் சிந்தப்பட்ட ரோஜாவின் மேல் இதயம் உறங்குவதைப் போல இக்கவிதைகள் ஸ்பரிசம் தந்தது.

தமிழனை வீழ்த்த நினைத்தாய். எங்கள் ஒற்றுமைக்கு முன் தோற்றுப் போனாய். ஜல்லிக்கட்டை நிறுத்தினாய்; சாலையில் வேங்கையாய் காளைக்காக போராடினோம். தமிழனின் நெஞ்சில் குத்தியவர்களை விட முதுகில் குத்தியவர்களே அதிகம். இனி, சிப்பாய்களுக்கும் அஞ்ச மாட்டோம், போர்க்களங்கள் எங்களுக்கு புதிதில்லை. களை எடுக்க வா, நாளை அரசியலில் கலை நடுவதற்கு வா, குடிசைகளுக்கு கல் வீட்டால் கூரைகள் போடு. துன்பத்தை கல்லறையில் புதைத்து விட்டு இன்பத்தை கருவறையில் இருந்து கொண்ட தொடங்கு! என்பதை,

'இளைஞனே!
தோல்வியைத் துரத்தி
விரக்தியை விரட்டி
பூமியைப் புரட்டும்
புதிய அணிக்குத்
தலைமை ஏற்கா வா'

நெஞ்சில் ஆணி அடித்தாற் போல் வீரியமாய் முரசொலிக்கிறது.

மீண்டும் பேசுகிறேன்.

பட்டாம் பூச்சிகளின் சிறகுகளில் டாவின்சி ஓவியங்கள். குறிஞ்சிப் பூக்களின் காதுகளில் கன்னியின் ரகசியங்கள். இமய மலையின் உச்சியில் 'மொட்டை நிலா', தமிழின் பிரசவத்தில் குழந்தை போல் பிறக்கிறது 'நெருப்பு நிலா'.

சின்னச் சின்ன மழைத்துளிகளை டம்ளருக்குள் கடலாக ஒளித்து வைக்கிறேன். நீல நிற நட்சத்திரங்களை மின்னல் கத்தியால் வெட்டிப் பார்க்கிறேன். மூங்கில் காட்டுக்கு பூக்களின் சுவாசங்களால் வேலிகள் கட்டுகிறேன். பாற்கடலின் கரையில் அமர்ந்து கொண்டு 'நெருப்பு நிலா' வாசிக்கிறேன்.

'நெருப்பு நிலா' தமிழுக்குப் புதிது. 'கேப்டன் யாசின்' கவிதையில் இனிது.

வாய்ப்புக்கள் உள்ளவர்கள் நேரடியாக அணுகியோ இல்லை அஞ்சல்கள் மூலமோ வாங்கி வாசியுங்கள்.

9500699024
9942052069

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Apr-18, 9:34 am)
பார்வை : 171

மேலே