முதுமொழிக் காஞ்சி 58
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
இசையிற் பெரியதோர் எச்சம் இல்லை. 8
- இல்லைப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை.
எச்சம் - (எஞ்சல் - மிஞ்சல்) - மிஞ்சியிருப்பது: மிச்சமாக இருப்பது.
தந்தை முதலியோர் இறக்கும்போது மிச்சமாக வைத்த பொருள்.
அதை உரையாசிரியர் ‘பிறர் பயப்பதோ ராக்கம்' என்றார்: ஆஸ்தி: செல்வம்.
பதவுரை: இசையின் - கீர்த்தியைக் காட்டிலும், பெரியது - சிறந்ததாகிய, ஓர் எச்சம் - ஒப்பற்ற ஆஸ்தி, இல்லை - வேறில்லை.
வசையென்ப வையத்தார்க் கெல்லாம்இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். 238 புகழ்
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
கீர்த்தியைப்போல் சிறந்த செல்வம் இல்லை.