காத்த திருடவும் வாத்த திருடவும் ஆளு உண்டு கவனி- ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் பாடல்- ஒரு பார்வை- கவிஜி

காத்த திருடவும் வாத்த திருடவும் ஆளு உண்டு கவனி- ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்... பாடல்- ஒரு பார்வை- கவிஜி
***********************************************************************************************************************************************************************

சும்மா ஜிவ்வுனு அந்த சுப்பனா ஆன மாதிரியே இருக்கு...பகடியோடு தாண்டவமாடும் ஒரு கம்பீரம். இருக்கின்ற எல்லா தலையிலும் தனி தனி மூளை இருப்பதை உணர முடிகிறது.

"ஏய் எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா
ஏய் படையல் கஞ்சி ஊத்த மண்டை ஓட்டை கொண்டா"

சுப்பன் குப்பன் கதையில் சுப்பனை இத்தனை வடிவோடு வார்த்தைகளில் வடிக்க இயலாது... ஒன்று நோட்ஸ் அதிகமாகும்.. இல்லை குறைவாகும். ஆனால் இங்கு ஆரம்பமே
செம்மையாக இருக்கிறது. வடிவத்தின் மேல் கீழ் சுதி சும்மா கிர்ர்ர்ர்ர்ர்......

திரும்ப திரும்ப வாய் விட்டு சொல்லி பார்க்கிறேன். ம்ஹும்.... பாடியே பார்க்கிறேன். கலை என்பது அடித்தட்டு மக்களுக்கும் போய் சேர வேண்டிய படைப்பு. அதை இப்போது எல்லாம் ஆடி பாடி துதி பாட முடிகிறது.

"ஏய் முரட்டு மேனியே திருட்டு ஞானியே
அரக்கு யாளியே கருப்பு ஜோதியே"

அவன் ஒரு முரடன்... ஆனால் ஞானத்தன்மையின் உள்ளும் புறமும் தன்னை கொண்டே காடு வளர்க்கும் ஞானி. கருப்பு ஜோதி..... கண்டறிந்த நாடறிந்த விஷயம். ஆனால் அரக்கு யாளி.... உங்களுக்கு புது வார்த்தையாக இருக்கலாம்... எனக்கு... ரெம்ப பழக்கம். "யாளி காண்கையில் பயமாகவும் இருக்கிறது பரவசமாகவும் இருக்கிறது நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு" என்று என் நண்பர் ஒருவர் எழுதிய கவிதையில் கண்டெடுத்த சொல்...கடைந்தெடுத்த சொல்.

"ஏய் ஆட்டு குட்டி முதல் ஏரோபிளேன் வரை
ஆட்டைய போடுவோம்ன்டா
நீங்க சட்டைய கழட்டி மாட்டும் நேரத்துல
வீட்டையே தூக்குவோம்ன்டா"

அவர்களின் வீரத்தை மார் தட்டி பறை சாட்டும் இடம் துள்ளல். செய்யும் தொழிலே தெய்வம் என்று சும்மாவா சொன்னார்கள்.
திருட்டு என்பது கலை. இன்னமும் சொல்ல போனால் இருப்போரிடம் இருந்து எடுத்து இல்லாதோருக்கு கொடுப்பதற்காகவே உருவானது தான் இந்த திருட்டு. ஆனால் இருப்பவனும் அதை செய்கையில் தான் சட்ட சிக்கல் வருகிறது. மாட்டு தீவனத்தில்.... பேருந்து கட்டணத்தில்... டாஸ்மாக்கில் ஆட்டைய போடுவதும் மார் தட்டி சொல்லும் வீரம் தான். வாழ்க அரசியல் ஓட்டைகள்.

"இங்கி பிங்கி பாங்கி போட்டு முடிச்சிட்டு பேங்கை திருடுவோம்ன்டா"

திருடுவதை ஜஸ்ட் லைக் தட் பண்ணிடுவோம் என்று பாடுகையில் அவர்கள் கொள்கையின் மீதான நம்பிக்கை துளிர் விடுகிறது. நம்மை அவர்கள் புரிந்திருக்கும் இந்த இடம் அவர்களுக்கு வலுவாக இருக்கிறது. அவர்கள் ஊரை நடத்தும் காவிய வழிமுறைகளின் கட்டுகோப்பை உணர முடிகிறது. கை நீட்டும் காவல் துறை... கெடா வெட்டும் நீதித் துறை.... ஞாபகங்கள் தாலாட்டும். தலைமை சரியான தவறாக இருக்கும் பட்சத்தில் எதுவும் சாத்தியம். அதுதான் இங்கு நடக்கிறது என்று சட்டையர் செய்கிறது வரி. இன்றைய பிரச்சினையை அடுத்த வரியில் புகுத்திய யுக்தி தான் குத்தாட்டத்திலும் சமுதாய பொறுப்பை காண முடிகிறது.

"விஜய் மல்லையா பணத்தை கொள்ளை அடிச்சு ஊருக்கு போடுவோம்ன்டா"

இந்த வரிக்கு கண்டிப்பாக ரெட் சல்யூட் எழுதிய தோழருக்கு.

செல்லையா கடன் வாங்கினா கட்டணும்.....இல்ல வெளியூர்ல சாகனும்.
மல்லையா கடன் வாங்கினா கட்ட வேண்டாம்........ கண்டிப்பா வெளி நாட்டுல வாழலாம்.

நல்லா இருக்கு... நம்ம சட்டம்.

இருப்பவன் தரமாட்டான்... இல்லாதவன் விட மாட்டான்... பட்டுகோட்டை சாட்டை வரி நினைவுக்கு வருகிறது.

"ஆபர் பல குடுத்து புடுங்கும் கார்பொரேட் திருடங்க நாங்க இல்ல
பள்ளிக்கூடம் காலேஜ்னு பேர்வெச்சு கொள்ளை அடிக்கறவங்க நாங்க இல்ல"

செருப்பால் அடிக்கிறது வரி. வீட்டுக்கு வீடு அத்தனை நெருக்கமாக இருக்கிறது. அந்த மார்க்கெட் இந்த மார்க்கெட் அங்க மார்க்கெட் இங்க மார்க்கெட் என்று திரும்பும் பக்கமெல்லாம் கடைகள். வாங்கும் சக்தி இருக்கிறதா இல்லையா என்று நம்மை யோசிக்கவே விடாமல் வாங்கும் ஆசையை தூண்டி விட்டு வேண்டுமோ வேண்டாமோ... தேவையோ இல்லையோ எப்படியாவது வாங்க வைக்கும் சக்திகளை முதல் வரியில் விளாசி விட்டு அடுத்த வரியில் நம் கனவுகளின் கோட்டையை பள்ளிக்குள்ளும் கல்லூரிக்குள்ளும் அடகு வைத்து விட்டு மொத்த வாழ்க்கையையும் இ எம் ஐ க்கு தாரை வார்க்கும் நிதர்சனத்தை இன்னொரு செருப்பால் அடிக்கிறது.

இ எம் ஐ க்கும் வழியின்று செத்து போகிறது விளிம்பு நிலை மருத்துவ கனவுகளும்...பொறியாள கனவுகளும்.

"வெள்ள வேட்டி வெள்ள சட்டை போட்டு ஓட்டு திருடற கூட்டம் இல்ல
சட்டத்துல ஓட்டைய போட்டு சொத்தை புடுங்கற கூட்டம் இல்ல"

நாங்க திருடங்க தான்... ஆனா உங்கள மாதிரி கேவலமான திருடர்கள் இல்லை என்று பாட்டு பாடி கொண்டாடி களி தீர்க்கும் இந்த மக்களின் சொல்லும் செயலும் சூடு போடுகிறது. பணம்பணம் என்று அலையும் அரசியல் கூட்டங்களுக்கு புத்தியே இருக்காதா...இந்த மானுட வாழ்வு பற்றிய முன் பின் தோரணைகள் எதுவுமே விளங்காதா....? "சட்டத்துல ஓட்டைய போட்டு சோத்த புடுங்கற கூட்டம் இல்ல..." இந்த வரி போதாதா.... இந்த மானகெட்டவர்களின் தேவைக்கு மாறும் அரசியலமைப்பின் கூறு சோரம் போவது பற்றி... புரிய.

இந்த வரி நினைவூட்டும் ஒரு வரியை இங்கே பகிர்கிறேன்...

"அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா" என்று அன்பே சிவம் படத்தில் ஒரு பாடலில் ஒரு வரி வரும்.

"நாங்க கெட்ட நல்லவனுங்க... கெட்டுப்போன நல்ல கெட்டவனுங்க
மொத்தத்துல சுத்தமான கொள்கையுள்ள நேர்மையான திருடங்கடா நாங்க"

இந்த படமே ஒருவகையான நையாண்டி கலந்த பகடி செய்யும் குறியீட்டு படைப்பு. இந்த பாடலில் இடது சாரி சிந்தனைகளின் சிவப்பு துளிகள் நிரம்பி வழிகிறது. எல்லா காலங்களிலும் ஆளும் அரசை கண்டிக்கவும்... நேர் வழி படுத்தவும்...கண்காணிக்கவும்... ஒரு சிறுபான்மை கூட்டம் போராடிக் கொண்டே தான் இருக்கும்..அவர்களின் ஆயுதமாக பாடல்களும்... கூத்துக்களும்... நாடகங்களும்.... என பல தரப்பட்ட படைப்பு வழிகள் கையாளப்படும். அப்படி இந்த பாட்டு... எளிமையாக ஆனால் மிக வன்மையாக உண்மையை உரக்க கூறுகிறது. திருட்டில் கூட ஒரு கொள்கை வேண்டும். அதற்கு கூட கொள்ளை அடிக்கும் வர்க்கத்துக்கு துப்பில்லை என்பது போல எடுத்துக் கொள்ளலாம்.

"ஹல்க்டா நாங்க ஹல்க்டா....எங்க மனசு என்னைக்கும் மில்க்டா
பார்ட்டி டா எங்க பார்ட்டிடா இது திருடர் கூட்டத்து பார்ட்டிடா
நித்திய திருடன் பத்திய திருடன் சத்திய திருடன் முக்திய திருடன்
பாட்டாளி திருடன் கூட்டாளி திருடன் இன்னைக்கு திருடன் என்னைக்கும் திருடன்
திங்கள் செவ்வா புதன் வியாழன் வெள்ளி சனி சண்டே கொள்ளை அடி நம்ம கொள்கை படி
வந்திடு வந்திடு பங்கீடு பங்கீடு கும்பிட்டு கொண்டாடிடு

எத்தனை திருடர்களால் ஆளப்படுகிறது இக்காடு என்னும் நாடு. நரியை தூக்கி போகும் திட்டங்கள் தமிழ் நாட்டை சுற்றிக் கொண்டே இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மோசமான ரெண்டுகெட்டான் அரசியலுக்கு இப்படித்தான் விளையாட்டு தனமாகவே எதிர்ப்புகள் வரும். வர வேண்டும். இதுதான் எழுத்தாளனின் கடமை. போகிற போக்கில் குட்டி விட்டு தான் போக வேண்டும். பெருத்த மண்டைகள் முழுக்க பணப்பெட்டிகளாக இருக்கும் பட்சத்தில் சாவி செய்யும் அல்லது சுத்தியல் செய்யும் போக்கு தான் இந்த மாதிரி பாடல்களின் வடிவம். மேற் சொன்ன வரிகளின் ஊடாகத்தான் எல்லையற்ற கொள்ளைகள் நடக்கின்றன. தங்களை தாங்களே திருட்டுக் கூட்டம் என்று மார் தட்டி கொள்ளும் இந்த பாடல் உச்ச பட்ச சுயம் சார்ந்த கவன ஈர்ப்புகள். காசுக்கு செத்து போன ஓட்டுக்களை கழுத்தை பிடித்து கேள்வி கேட்கும் சுய நையாண்டிகள். ஒவ்வொரு நாளும் கொள்ளையடிக்கப்பட்டு சண்டேயில் சுவிஸில் பிரிக்கப்படும் வடைகளில் நாமே ஓட்டைகள்.நாமே கருவேப்பிலைகள்.

ஏய் வட்ட நிலவுல பாட்டி சுட்ட வட தூக்கினது நரிதான்
அந்த குள்ள நரியை கொள்ளை அடிச்சது எங்களோட தல தான்

முரண் புரிந்தோர் சிரித்தும் விட்டு சிந்திக்கவும் கடவது.

இந்த பாடலுக்கு விஜய் சேதுபதியும் காயத்ரியும்.... மற்றும் அவர்கள் கூட்டமும் ஆடும் ஆட்டம்.... இந்த வாழ்வை இலகுவாக பார்க்க வைக்கிறது. அதே சமயம் கண்ணும் கருத்துமாக நோக்க வைக்கிறது. எல்லாமே ஆட்டம் தான் இந்த உலகில் என்று நம்பத் தோன்றுகிறது. தோன்றும் போது ஆடுங்கள்.... மனம் இறகாகி விடும். ஆனால் அதே சமயம் ஆட்டம் கூட உங்கள் இருத்தலின் வடிவம் தான் என்பதை மறக்காமல் இருந்தால் சரி.

ஜஸ்டின் பிரபாகரனுக்கு எழுந்து நின்று நீண்ட நேரம் கை தட்டல்கள். பாடல் எழுதிய கார்த்திக் நேதாவுக்கு ஆர தழுவும் புஜங்கள்.

ஏய் காத்த திருடவும் வாத்தை திருடவும் ஆளு உண்டு கவனி
அட போன காரியத்தை செஞ்சு முடிப்பமே நாங்க எல்லாம் ரஜினி

கடைசி ரெண்டு வரிக்கு விலக்கு. நீங்களே புரிந்து கொள்ள வீட்டுப்பாடம் தரப்படுகிறது. மீண்டும் மீண்டும் கேளுங்கள்.

கவிஜி

எழுதியவர் : கவிஜி (17-Apr-18, 1:36 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 123

மேலே