கருவறை போராட்டம் --- முஹம்மத் ஸர்பான்
காட்டில் இறந்து கிடக்கும்
பட்டாம் பூச்சி யார் அம்மா
கண்களை மூடிக் கொண்டு
எதற்காக அழுகிறாள் சொல்
நட்சத்திரக் காட்டுக்குள்
சந்திரன் வாங்க வந்தவளா
கரசக் காட்டு தேள்களிடம்
பொம்மை வாங்க வந்தவளா
சின்னச் சின்ன பூக்களுக்கு
புன்னகை கற்றுத் தந்தவளா
காமன் கோயில் வாசலில்
நொந்து நொந்து செத்தவளா
பட்டுப் போன ரோஜாக்கு
முத்தம் வைக்க மறக்கிறேன்
பட்டப் பகல் சாலையில்
நடந்து போக மறுக்கிறேன்
கூட்டாஞ் சோறு கறியாக்க
சட்டி பானே வெச்சவளே
விறகு சுமக்கப் போகயிலே
மூச்சு நீங்கிப் போனவளே
மடி மேலே அவள் தூங்க
வறுமை ஓடிப் போயிடுமே
வாசல் தாண்டி ஏன் போனே
அம்மா நெஞ்சு நின்றிடுமே
சாட்சி சொன்ன காற்றுக்கு
ஆயுதம் ஏந்த கைகளில்லை
அரக்கனைக் கூட தண்டிக்க
இறைவனுக்கு நேரமில்லை
காட்டில் இறந்து கிடக்கும்
பட்டாம் பூச்சி யார் அம்மா
கண்களை மூடிக் கொண்டு
எதற்காக அழுகிறாள் சொல்