ஆசிபாவின் அழுகுரல் - கவிஞர் புதுவைக் குமார்

கருவறையில்
கடவுளைத் தேடவேண்டியவர்கள்
கடவுளின் முன்னால்
என் கருவறையைத் தேடினார்கள்

அருகிலேயே
சிவன் இருந்தும்
எமன்தான் வந்தான்
எனைக் காக்க

என் கூக்குரல் கேட்டு
எந்தக் கடவுளும்
ஓடிவந்து காக்கவில்லை
மோடிவந்தா காக்கப்போகின்றார்

காக்க வந்தவன்கூட
பாக்கத்தான் வந்தான்
எனைத் தாக்கத்தான்
வந்தான்

இந்த ஆசிபா
உடலைத் தின்னும்
அமீபாவிற்குத் தெரியுமா
என் உடலிலுள்ள
சிவப்பு மச்சங்கள்
அவர்கள் விட்டுவைத்த மிச்சங்கள் என்று

துடைத்ததும் நின்றது
வடிந்த கண்ணீர்
நிற்காமல் ஓடியது
உடைந்த செந்நீர்

குதிரையை கொடுக்கவேண்டிய
குழந்தைக்கு குழந்தையைக்
கொடுக்க விரும்பினர்

விட்டுவிடுங்கள்
என்று கதறியது நான்
விட்டு விடுகிறேன் என்று
குதறியது நாய்

நாய்களே
என்னை மன்னித்துவிடுங்கள்
உங்களோடு அவர்களை ஒப்பிட்டதற்கு

பூப்பெய்தும் முன்பே
என் கற்பு பறிக்கப்பட்டது
மூப்பெய்தும் முன்பே
என் பூவுடல் எரிக்கப்பட்டது

நிக்கா விற்கு முன்பே
என் பெயர் நீக்கப்பட்டது
ரேஷன் அட்டையில்

மணமகனால் மூடும் முன்பே
என் உடல் மண்மகளால்
மூடப்பட்டது

விலங்கு மாட்டினாலும்
அவர்கள் விலங்கு
என்பதை விளங்கப்போவதில்லை

இறைவா
அவர்களுக்கு தண்டனையாக
மறுபிறவியில் எனக்கு
இதே தண்டையைக் கொடு
அவர்களுக்கு என்னை
மகளாகக் கொடு ...

இப்படிக்கு ஆசிபா

எழுதியவர் : குமார் (23-Apr-18, 6:24 pm)
பார்வை : 89

மேலே