கரப்பான்பூச்சியின் டின்னர்
அந்த ஒரு கரப்பு
எப்போதும் என் படுக்கையில்...
அயர்ந்த நடுநிசியில்
தலை ஏறி கடிக்கும்.
ஊசியாய் துளைக்கும்.
பதறி விழித்து தள்ள
தலையணை பறக்கும்.
கரப்போ யூகமற்று
பறந்து திடுமென
என் நோக்கி வரும்.
தலை தாண்டியும்
கடிக்குமோ அதுவென்
சிந்தனை பூக்களையும்...
கடிபட்ட சிந்தனைகள்
குழறி வெடிக்கும்
நூறு கனவில் ஒரு கனவென.
பார்க்கும்போதே
நொடியில் கரப்பு மறையும்
என் வீட்டில் இருக்கும்
அதன் வீட்டில்.
முகவரியற்ற அதன் வீடு
தெரியும் எனக்கு.
அந்த வாசலில்
மரணக்கோலம் போடலாம்.
போட்டால் தூங்கலாம்.
பார்த்துள்ளீரா...
கரப்பின் இறுதி நொடிகளை...
பீஷ்மனாய் படுத்து
நெஞ்சம் விரிய
உலகத்தை சுரண்டும்
வேக வேகமாக...
காலா என் காலருகே வாடா...
சூழ்ந்த எறும்புகள்
இழுக்க இழுக்க
கம்பீரமாய் போகும்
டான் குயிக்ஸாட் கவர்னராய்
தான் இனி உணவு
என அறிந்தாலும்...
போதும்...
மருந்து வைக்க
மறுத்து விடும் என்
கடிபட்ட சிந்தனைகள்.