புனிதமாகும் வாழ்வு
புனிதமாகும் வாழ்வு
===================== .
நீராடிக் கொள்பவர்கள்
மெய் அழுக்கைப் போக்கி
உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளவும் ,
படகோட்டிப் பிழைப்பவர்கள்
பயணிகளை ஏற்றி இறக்கி
வயிற்றுப்பசியைத் தீர்த்துக்கொள்ளவும்,
மணல் வாரிகள் காவலர் கண்களில்
மண்தூவி கொள்ளையிட்டுக் கொள்ளவும்,
தூண்டில்காரர்கள் பொழுதுபோக்குக்காகவும்
கொக்குகள் உயிர் வாழ்வதற்காகவும்
மீன் பிடித்துக் கொள்ளவும்
சுற்றுலாக்காரர்கள் அழகில் மயங்கி
செல்பி எடுத்துக்கொள்ளவும்
ஊர்வாசிகள் குப்பைக் கொட்டவும்
தொழிற்சாலைகள் கழிவு நீரைக் கசியவிடவும்
காட்டு விலங்கினம் தாகம் தீர்த்துக்கொள்ளவுமென
ஓடிக்கொண்டிருக்கும் நதியைப்போல
நீயும் ஓடிக்கொண்டேயிரு.
ஓடும்போதும் உலகுக்கு உதவும்
நதி தெளிந்து புனிதம்கொள்வதுபோல்
மனம் தெளிந்துன் வாழ்வும் புனிதமாகும்.
***மெய்யன் நடராஜ்