அவனும் நானும்-அத்தியாயம்-07

.....அவனும் நானும்....

அத்தியாயம் : 07

முன்னே இரு பக்கமும் அழகாய் பரமாரிக்கப்பட்டிருந்த பூந்தோட்டமும்,பின்னே மிகவும் நீளமான நீச்சல் தடாகத்தையும் கொண்டு நடுவே அந்த வீடு மிகவும் அழகாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது...அந்த வீட்டின் அனைத்து அறைகளுமே அமைதியில் நிறைந்திருக்க அவளது அறையினில் மட்டும் அலாரம் மணி ஆறு என்பதினை நினைவுபடுத்துவதாய் அலறியடித்துக் கொண்டிருந்தது...

கண்களிரண்டையும் இறுக்கமாய் மூடிக் கொண்டவாறே அலாரத்தின் ஒலியினை நிறுத்தியவள்,எழும்பும் எண்ணமேயில்லாமல் மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினாள்...

"கீர்த்துமா...எழுந்திருடா....இன்னைக்கு கல்லூரிக்கு முதல் நாள்...சீக்கிரமா எழுந்து ரெடியாகுடா..."என்றவாறே கையில் சுடசுடச் தேநீரோடு உள்நுழைந்தது கீர்த்தனாவின் தாயார் என்று நினைத்தீர்கள் என்றால் அது தவறு...வந்தது அவளின் தந்தை ராகவன்...

கீர்த்தனா எப்போதுமே அப்பா ராகவனின் செல்லம்தான்...அதே போல் அம்மா பார்வதி அஸ்வின்னின் பக்கம்...சிறுவயதிலிருந்தே அவளிற்குத் தேநீர் கொடுத்து எழுப்புவது ராகவன்தான்...இருபத்தொரு வயதாகியும் அவளாலும் அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை...அவருக்குமே அவளின் முகத்தில் விழிக்காமல் அன்றைய நாள் முழுமையடைந்ததில்லை...

தந்தையின் குரலைக் கேட்டதுமே கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தமர்ந்தவள்,கண்களை மெதுவாய் திறந்து அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்...

"குட்மார்னிங் பா.."

"வெரி குட்மோர்னிங் டா...டீ ஆறிடப் போகுது...போய் சீக்கிரம் பல்லைத் துளக்கிட்டு வந்து குடி...நான் போய் உன் சாப்பாடு ரெடியான்னு பார்க்குறேன்..."என்றவாறே அவர் வெளியேறவும் இவளும் குளியறைக்குள் புகுந்து கொண்டாள்...

கீழே வந்தவர்,சமையலறையில் அங்கும் இங்குமாய் சுழன்று கொண்டிருந்த பார்வதிக்கு உதவியாய் காய்கறிகளை எடுத்து வெட்டத் தொடங்கினார்...

"என்னடா இன்னும் ஐயாவைக் காணலையேன்னு பார்த்தேன் அதுக்குள்ள வந்தாச்சா...??..இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்குறேன்...நீங்க போய் வெளிவேலையைப் பாருங்க...போங்க.."

"என்னைத் துரத்திறதிலேயே இரு...இன்னைக்கு நம்ம பொண்ணுக்கு முதல் நாள்டி...நீ இப்படியே அசைஞ்சு அசைஞ்சு ஒவ்வொன்னையும் ஆறுதலாப் பண்ணிட்டிருந்தால்,என் பொண்ணு எப்போ சாப்பிட்டு எப்போ கிளம்புறது..??.."

"அதானே பார்த்தேன்...நான் கூட ஏதோ என் மேல உள்ள பாசத்தில துரை உதவி செய்ய வந்திட்டார்னு ஒரு நிமிசம் பூரிச்சுப்போனேன்,பார்த்தால் கதை இப்படிப் போகுதா..??என்னமோ உங்க பொண்ணு ஸ்கூலுக்கு முதல் நாள் போகப்போற மாதிரி இந்த பரபரக்குறீங்க...அவ காலேஜ்க்குத்தான் போறா என்குறது நினைவிருந்தால் சரி..."

"எங்களுக்கு நினைவிருக்குறது இருக்கட்டும்..உனக்கும் உன் பையன் இன்னும் ஒரு வருசத்தில வேலைக்கே போகப்போறான் என்றதும் நினைவிருந்தால் சரி...நீங்க இரண்டு பேரும் சேர்ந்துகிட்டு பண்ற அலம்பலை விடவா நான் பண்ணிட்டேன்..."

"ரொம்பத்தான்..."என்று நொடித்துக் கொண்டவர்,

"..இப்படியே என்கூட வாயடிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா...என்னால எப்படி சமையலைப் பார்க்க முடியும்...?அப்புறம் அடிபிடிச்ச சாப்பாட்டைத்தான் சாப்பிட வேண்டியிருக்கும்,பரவாயில்லையா..??.."

"ம்க்கும் அதைத்தான் இத்தனை வருசமாய் நானும் சாப்பிட்டிருக்கிறேன்...இதில என்னமோ புதுசா இன்னைக்குத்தான் அடிபிடிச்ச சாப்பாடு போடுற மாதிரி பேச்சைப் பாரேன்..."என்று முணுமுணுத்தவாறே அவர் தோட்டத்துப் பக்கமாய் செல்லவும்,

"என்ன அங்க முணுமுணுப்பு..??.."

"ஒன்னுமில்லை பாரு..உன் சமையல் கலையைப்பத்தி மெச்சிட்டிருந்தேன்.."

"ம்ம்...நீங்க மெச்சின வரைக்கும் போதும்...போய் தோட்டத்துக்கு தண்ணியை விடுங்க...போங்க..."

அதற்கு மேலும் அங்கே நின்று ஏதும் பேசி அவரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளாமல் சமத்துப் பிள்ளையாய் தோட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டார் ராகவன்..

அவர்கள் இருவரும் எப்போதுமே அப்படித்தான்...அணைத்துக் கொள்வதை விட அடித்துக் கொள்வதுதான் அதிகம்...ஒருவருக்கொருவர் வம்பு செய்யாவிட்டால் அவர்களுக்கு அன்று தூக்கமே வராது என்பது போல் ஒருவரை மாற்றி ஒருவர் வம்புக்கிழுத்துக் கொண்டேயிருப்பார்கள்...

இருவருமே அஸ்வின் மற்றும் கீர்த்தனா மீது அளவுக்கதிகமான அன்பினை வைத்திருப்பவர்கள்,ஆனாலும் வெளியில் ராகவன் கீர்த்தனாவின் பக்கமாயும்,பார்வதி அஸ்வின்னின் பக்கமாயும் நின்று கொண்டு யாருக்கு யார் மேல் பாசம் அதிகமென்று போட்டி போடுவார்கள்...இவர்களின் இந்த விளையாட்டுக்குள் எப்போதும் மாட்டிக் கொண்டு முழிக்கும் கீர்த்தனாவிற்கும் அஸ்வின்னிற்கும் இந்த வயதிலும் அவர்களுக்கிடையில் இருக்கும் காதலையும் ஆழமான புரிதலையும் காண்கையில்,ஆச்சரியமும் ஆனந்தமும் ஒரு சேரத் தோன்றி அவர்களைப் புன்னகையில் முழ்கடித்துச் செல்லும்...இதனாலேயே அவர்கள் வீட்டில் புன்னகைக்கு என்றுமே பஞ்சமிருந்ததில்லை...

நடைப்பயிற்சி முடித்துவிட்டு வந்த அஸ்வின்னும் ராகவனுக்கு உதவியாய் சேர்ந்து கொண்டதில்,பூங்கன்றுகளுக்கு விரைவாகவே தண்ணீரைப் பாய்ச்சி முடித்தவர்கள் ஹோலில் வந்தமர்ந்து இளைப்பாறிக் கொண்டார்கள்...அப்போது சரியாக கீர்த்தனாவும் தயாராகிக் கீழே வரவும் அவளினை வம்புக்கிழுக்கத் தொடங்கிவிட்டான் அஸ்வின்...

"இன்னைக்குத்தான்டி பார்க்குறதுக்கு பொண்ணு மாதிரி இலட்சணமாய் இருக்காய்..."

ஏற்கனவே ராக்கிங் என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருந்த டிரெஸ் கோர்ட்டில் கடுப்பாகிப் போயிருந்தவள்,அவனது கேலியான சிரிப்பில் இன்னும் கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்...

"அப்பா..இவனை பேசாமல் இருக்கச் சொல்லுங்க...அப்புறம் என்கிட்ட வாயைக் கொடுத்து செமத்தியாய் அடி வாங்க வேண்டியிருக்கும்..."என்று தமையனை முறைத்தவாறே அப்பாவிடம் சொல்லி வைத்தாள்...ஆனால் அஸ்வின்னோ அதற்கெல்லாம் நான் அசருவேனா என்று அவளை மேலும் வம்புக்கிழுத்தான்...

"அப்பா...இவனை பேசாமல் இருக்கச் சொல்லுங்க..அப்பா..."என்று கண்களிரண்டையும் கசக்கியவாறே அவளைப் போலவே செய்து காட்டி மேலும் அவளின் கோபத்திற்கு உள்ளாகிக் கொண்டான்...

அதுவரை நேரமும் கோபத்தை இயன்றவரை கட்டுப்படுத்திக் கொண்டவள்,அதற்குமேலும் பொறுக்க முடியாமல் அவனை ஒரு வழி செய்துவிடும் நோக்கில் அவன் மேல் பாய்ந்தாள்...ஆனால் அவனோ அவளது கைகளிற்கு அகப்படாமல் அங்குமிங்குமாய் ஓடி அவளிற்கு போக்குக் காட்டிக் கொண்டிருந்தான்...

இவர்கள் இருவரினதும் சத்தத்தைக் கேட்டவாறே சமையலை முடித்துவிட்டு வெளியே வந்த பார்வதி,

"ஏன்டி இப்படிக் காலையிலேயே அவனோட சண்டைக்கு நிக்குற..??."

"யாரு நான் அவனோட சண்டைக்கு நிக்குறனா..??..அவன்தான் சும்மா என்னை வம்புக்கிழுத்துக்கிட்டே இருக்கான்..."

"அம்மா நீங்களே சொல்லுங்க...இவளோட இந்தக் கோலத்தைப் பார்த்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது..??..."

அப்போதுதான் அவரும் மகளின் தோற்றத்தை முழுமையாகப் பார்த்தார்...பார்த்தவருக்கு சிரிப்பை எவ்வளவு முயன்றும் அடக்கி வைக்க முடியவில்லை...அதனால் அவரும் பெரிதாகவே சிரித்து வைத்து அவளின் கோபத்துக்குரியவர்களின் பட்டியலில் இணைந்து கொண்டார்....

"அம்மாமாமாமா...நீங்களுமா..??.."என்று உச்சஸ்தாதியில் கத்தினாள் அவள்...

"ஹா...ஹா...என்னடி இது கோலம்...??..கல்லூரிக்கு முதல் நாளும் அதுவுமாய் இப்படி ரெடியாகிட்டு வந்திருக்குற..??.."

"ஆமா எனக்கு மட்டும் ஆசை பாருங்க...இப்படி போகனும்னு..எல்லாம் இந்த ராக்கிங் என்ற பெயரில் சீனியர்ஸ் பண்ற கொடுமை.."என்று எரிச்சல்பட்டுக் கொண்டவள்,பாவாடை சட்டையில் தலைக்கு முழுவதுமாய் எண்ணெய் வைத்து வாரி இரண்டாகப் பின்னலிட்டிருந்தாள்...நெற்றியில் கருமைநிறச் சாந்துப் பொட்டினை பெரிதாக வைத்திருந்தாள்... அதிலும் முகம் முழுதுமாய் எண்ணெய் வழிந்து அவள் நின்ற தோற்றத்தை யார் பார்த்தாலுமே லேசாகச் சிரிப்பு வரத்தான் செய்யும்...இதில் சாதாரணமாகவே அவளை வம்பு செய்யும் அஸ்வின்னுக்கு அல்வா கிடைத்தது போலல்லவா...

ஏற்கனவே தயாராகி முடிந்ததும் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துப் பரிதாபட்டுப் போனவள்,இப்போது அம்மாவும் அண்ணனோடு சேர்ந்து சிரித்து வைத்ததில் மிகவும் நொந்து போனாள்...வேறு வழியின்றி மீண்டும் தந்தையையே தன் துணைக்கு அழைத்துக் கொண்டாள் அவள்...

"அப்பா...என்னபா நீங்க...இவங்க இரண்டு பேரும் என்னக் கேலி பண்ணி சிரிச்சிட்டிருக்காங்க...நீங்க என்னடான்னா கூலா பேப்பர் படிச்சிட்டிருக்கீங்க..??..என்றவாறே அவர் கையிலிருந்த பத்திரிகையை எடுத்தவளுக்கு,அவரும் பத்திரிகையின் மறைவிலிருந்து சிரித்துக் கொண்டிருந்தது அப்போதுதான் தெரிந்தது...

அவள் பத்திரிகையை எடுத்ததுமே என்ன செய்வதென்று தெரியாது முழித்தவர்,பின் தானும் மனைவியோடும் பையனோடும் சத்தமின்றியே சேர்ந்து கொண்டார்..

"அப்பா...நீங்க கூட அவங்க பக்கம் சேர்ந்துட்டீங்க ல..போங்க நான் உங்க மூனு பேர் கூடவும் கோபம்.."என்று சிறுபிள்ளை போல் பொய்யாக அவர்களை முறைத்தவாறே திரும்பியவளையும் ஒரு கட்டத்திற்கு மேல் புன்னகை விட்டு வைக்கவில்லை...அவளையும் புன்னகை தொற்றிக் கொண்டதில்,அங்கே நால்வரின் சிரிப்புச் சத்தமும் பேரலையாய் எழுந்து அந்த வீடு முழுவதையுமே மகிழ்ச்சியில் நிறைத்தது...

அன்றைய நாளின் நினைவில் புன்னகைக்குப் பதில் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோட,மீண்டும் என்று அந்தப் புன்னகை தன் வாழ்வில் வரும் என்ற கேள்வியோடே கண்களைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்தவளின் முன்னால் ஆனந் இரண்டு தேநீர்க் கோப்பைகளோடு வந்து நின்றான்...தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (18-May-18, 9:42 pm)
பார்வை : 381

மேலே