விழித்தெழு தமிழா...

விழித்தெழு தமிழா...

காக்கிநிறம் காக்குமென்று என்றிருந்தோம்,
இல்லை இல்லை இது தாக்கும்நிறம்...

சட்டத்திற்காய் இலத்தியை மணந்துகொண்டவர்களே...!
புத்தியை ஏன் அடகுவைத்தீர்கள்...?

சமயக் குறிகளைக்கூட சம்மதிக்காதவர்கள் மத்தியில்
துப்புக்கெட்டவர்களின் துப்பாக்கிக்குறி...

துளைத்தபோது தோட்டாக்களே அலறியிருக்குமே...! அய்யா இது தப்பான முகவரியென்று...

முத்துவிளையும் முத்துநகரம் செத்துவிடக்கூடாது என்று

ஆலையை காலிசெய்யச் சொன்னார்கள்
ஆளையே காலிசெய்துவிட்டீர்களே...!

உங்களை
வேலிகள் என்றிருந்தோம்
கூலிகள் நீங்கள் கூறுகிறோம்...

தலைமை இனி தலைக்குத் தலா இவ்வளவு என்று நிவாரணம் அறிவிக்கும்...

இன்று நிர்வாணப் படுத்திவிட்டு நாளை ஆடையைத் தருவாய்
மானத்தை யாரடா மீட்டுத்தருவார்...?

தமிழா...?
உன் உணர்வென்ன தண்ணீரின் குமிழா...?

இறந்தவர்கள் எல்லாம் நம் சகோதர சகோதரிகள்

அவர்கள் ஒன்றும் நாய்க்கு நாயாய் பிறந்தவர்களல்ல
நம்மைப் போல தாய்க்கு சேயாய் பிறந்தவர்கள்...

ஒரு தமிழனின் கைநின்று பிறக்கும் டப் டப் தோட்டாவால்
இன்னொரு தமிழனின் லப்டப் இதயம் கிழிவதைப் பார்க்கவா கண்ணெடுத்தோம்...

உப்பு விளையும் மண்டலத்தில் தப்பு விளைந்திருக்கிறது,
உப்பிட்டுத்தானே உண்கிறோம் நாம்...?

இந்தச் சூட்டைப்பார்த்தும் நாம் சூடாகாமல் விட்டால்
நம் வீட்டைப் பார்த்தும் சூடு வரும்...

நமக்குச் சூடு வரும்போது நமக்காய் சூடாவதற்கு
சில சுடுகாடுகள் மட்டுமே பிழைத்திருக்கும்...

போராடு...!
போர்க்களம் பயமென்றால் வலைதளத்திலாவது போராடு...!!

சகத்தமிழனுக்காய் சிந்திக்காத மண்டையை விட பாறை பரவாயில்லை
தன் இனத்திற்காய் பேசாத தொண்டையைவிட மரணம் மலிவேயில்லை...

குரல் கொடுப்போம்...

தலையில் வெயில் தாங்கி
தமிழுக்கு நிழல் கொடுப்போம்...

அகிம்சைவாதிகளாய் அமர்ந்துவிட்டால் காந்தி ஆன்மா சாந்தி அடையும்
நம் போராளிகளின் ஆன்மா சாந்தி அடையாது...

எம்மால் முடிந்தது இது...
உம்மால் முடிந்தது எது...?

காந்திதான் சொன்னார் இதுவும்...
"செய் அல்லது செத்து மடி"

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (23-May-18, 8:30 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : vizhithelu thamila
பார்வை : 372

மேலே