ஷாக்கிங் தகவல் தூத்துக்குடி துப்பாக்கிசூடுக்கு உத்தரவிட்ட துணை தாசில்தார்கள் அங்கு பணியிலேயே இல்லை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22, 23ம் தேதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன. அப்போது கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அண்ணாநகர் ஆகிய 3 இடங்களில் இரு நாட்களும் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

போலீஸ் எப்ஐஆர்

13 பேர் கொலைக்கு காரணமான துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது யார் என்பது மர்மமாக இருந்து வந்தது. ஆனால் தூத்துக்குடி காவல்துறை பதிவு செய்துள்ள எப்ஐஆர் எனப்படும், முதல் தகவல் அறிக்கையில், துப்பாக்கி சூடுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் துணைதாசில்தார்களான கண்ணன், சேகர், சந்திரன் ஆகிய மூவர் உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

3 துணை தாசில்தார்கள்

மே 22ம் தேதி திரேஸ்புரம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்த துணை தாசில்தார் கண்ணன், கலெக்டர் அலுவலகம் அருகில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு துணை தாசில்தார் சேகர், 2ம் தேதி அண்ணா நகரில் துப்பாக்கி சூடு நடத்த துணை தாசில்தார் சந்திரன் உத்தரவிட்டதாக அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பல கி.மீ தூரத்தில் பணியில்

ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய புலன் விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திரேஸ்புரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கண்ணன் பணியில் இருந்ததாகவும், சேகர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாத்திமா நகர், லயன்டவுன் பகுதியில் இருந்ததாகவும், 23ம் தேதி அண்ணா நகரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது, பழைய பஸ் நிலையம் அருகில் பணியில் இருந்துள்ளார்.

காவல்துறை கட்டுப்பாடு

இதுகுறித்து, சென்னை ஹைகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறுகையில், "துணை தாசில்தார்கள் சம்பவ இடத்தில் இல்லாத நிலையில் அங்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட முடியாது" என்று பேட்டியொன்றில் தெரிவித்தார். எனவே, இந்த சம்பவம் புதிய பரபரப்புகளுக்கு காரணமாகியுள்ளது. முதல்வரே டிவியில் பார்த்துதான் துப்பாக்கி சூடு பற்றி அறிந்து கொண்டதாக கூறிவிட்ட நிலையில், காவல்துறையை கட்டுப்படுத்தியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

---------------------
சென்னை : தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், போராட்டக்காரர்களை குறிவைத்து திட்டமிட்டு சுட்டுக்கொன்று விட்டு, அதிகாரிகளை ஆள்மாறாட்டம் செய்து இருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனியார் நிறுவனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக முதல்வர், காவல்துறை டிஜிபி, அதிகாரிகள் துணைபோய் இருப்பதாலேயே, துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அதை மறைப்பதற்காகவே கண் துடைப்புகாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் . எங்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு நாங்கள் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.




tamil.oneindia.

எழுதியவர் : (8-Jun-18, 4:26 am)
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே