கல்யாணம்
கல்யாணம்
ராம் காஞ்சனாவின் கையை பிடித்துக்கொண்டு கண்களில் அன்பு மிளிர “காஞ்சனா” நீ ஏன் என்னை புரிந்து கொள்ள மறுக்கிறாய்? அவளின் குனிந்த தலையை நிமிர்த்தி அவள் கண்களை கூர்ந்து பார்த்து என்ன சொல்ல நினைக்கின்றன உன் கண்கள், தயவு செய்து சொல்லி விடு. மயக்கத்துடன் சொன்னான். நிமிர்த்திய காஞ்சனாவின் கண்கள் கலங்கி இருந்தன. “ப்ளீஸ்” நான் திருமணம் செய்யக்கூடிய நிலையில் இப்பொழுது இல்லை. நான்..நான்..கேவினாள்
“கட்” டைரக்டர் சங்கர் கத்தினான், என்னம்மா நீ இந்த வசனத்தை எமோசனலா சொல்லணும், இதோட ஏழு டேக் எடுத்திட்டே, என்னாச்சு உனக்கு? ராம் இயல்பு நிலைக்கு வந்திருந்தான். என்ன பிரச்சினை உனக்கு காஞ்சனா? ஏன் நெர்வசா இருக்கே, எனி திங்க் ராங்க், ஏதாவது உடம்பு சரியில்லையா? அக்கறையுடன் கேட்டான். ஐ.ஆம்.சாரி ராம், என்னால இன்னைக்கு ஒரு நிலையில இருக்க முடியலை. சந்தோசமா",துக்கமா அப்படீன்னு சொல்ல தெரியலை விளக்கினாள். அதற்குள் டைரக்டர் சங்கர் அருகில் வந்தான். ராம் ஏதாவது பிரச்சினையா காஞ்சனாவுக்கு, இன்னைக்கு “ரொமான்ஸ்” சீன்ல இத்தனை டேக் வாங்கறா? அதுதான் தெரியலைடா. எதுக்கும் இவளுக்கு பத்து நிமிசம் ரெஸ்ட் கொடேன். அவளுக்காக கேட்டுக்கொண்டான்.
ஓகே ‘பேக்கப்’ ஒரு அரை மணி நேரம் கழிச்சு மத்ததை வச்சுக்கலாம் என்றவன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து, ராமின் கையில் ஒன்றை கொடுத்தான். ராம் காஞ்சனாவை பார்த்து இன்னைக்கு ரொமான்ஸ் சீன் மட்டும் இல்லையின்னா இந் நேரம் இரண்டு சிகரெட் பிடிச்சிருப்பேன், சொல்லிவிட்டு அந்த சிகரெட்டை சங்கரின் கையில் திணித்தான்.
சரி இப்ப என்னாச்சு உனக்கு சிகரெட்டை கையில் வைத்தவாறு காஞ்சனாவிடம் கேட்டான் சங்கர். தெரியலை சங்கர் ஆனா….நான் உங்க இரண்டு பேர் கிட்ட ஒரு உதவி கேட்பேன், நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது, பீடிகையுடன் கேட்டாள். தாராளமா செய்யறேன் என்ன உதவின்னு சொல்லு, இங்கே வேண்டாமே என்னுடைய கேரவானுக்குள்ள போயிடலாம், சொல்லிவிட்டு தன்னுடைய ஓய்வு அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
ராம் சங்கர், காஞ்சனா மூவரும் ஒரே கால கட்டத்தில் வேறு வேறு துறைகளில் சினிமா உலகத்துக்குள் புகுந்து போராடி ஓரளவுக்கு பெயர் சொல்லக்கூடிய நாயகன், நாயகி, டைரக்டர் என்ற அந்தஸ்துக்கு வந்துள்ளனர். மூவரும் ஏறக்குறைய ஒரே வயதுடையவர்களாய் இருப்பதால் நல்ல நண்பர்களாகவும் இருக்க முடிகிறது.
“நாளை நான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்”
சங்கர் “வாட்” என்ன சொல்றே? நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா அப்புறம் ஷூட்டிங்க் என்னாகிறது? அதுதான் எனக்கு டென்சனா இருக்குது. “ப்ளீஸ்” இரண்டு நாள் லீவு கொடு.இந்த கல்யாணம் யாருக்கும் தெரியாம செய்யற கல்யாணம், இரண்டு நாள்ல பிரச்சினை எல்லாம் முடிச்சுட்டு வந்துடறேன், கெஞ்சினாள் காஞ்சனா.
சங்கர் ராமின் முகத்தை பார்த்தான். நீ என்ன சொல்றே? என்பது போல பார்த்தான். ராம் காஞ்சனாவை பார்த்து நம்ம மாதிரி தொழில்ல இருக்கறவங்களுக்கு இந்த மாதிரி கல்யாணம் சரிபட்டு வருமா அப்படீங்கறதை யோசிச்சுகிட்டு செய்! மத்தபடி ஏதாவது உதவி வேணுமின்னா தயங்காம எங்க கிட்டே கேளு செய்யறோம்.
சங்கரும் சரி உனக்கு இரண்டு நாள் லீவு தரேன். நான் மத்த பார்ட் எல்லாம் எடுத்துடறேன். நீ சிக்கிரமா வர பார். ராம் உடனே மதியானமே அவளை அனுப்பி வையப்பா, நாளைக்கு கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்வாயில்லே.
ஓகே..நீ கிளம்பு, எங்களோட வழ்த்துக்கள். உனக்கு கல்யாணம் முடிஞ்சு வா, இங்க பார்ட்டி கொடுத்துடலாம். ராம் சங்கரிடமிருந்து ஒரு சிகரெட்டை பிடுங்கி அப்பா இப்பத்தான் ஆனந்தமாய் இருக்கு சொல்லியவாறு புகையை ஊதினான்.இருவரும் காஞ்சாவின் கேரவானை விட்டு வெளியே வந்தனர்.
மறு நாள் காஞ்சனாவின் கேரக்டரை தவிர்த்து மற்ற காட்சிகள் எடுக்கப்பட்டன. ராமும் நடித்து கொடுத்து கொண்டிருந்தான். மதியம் மூன்று மணிக்கு மேல் சங்கருக்கு போன் வந்தது. ஹலோ..காஞ்சனாவின் குரல் கேட்டது. என்ன காஞ்சனா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா? வாழ்த்துக்கள்..சங்கரிடமிருந்து வார்த்தைகள் வந்தவண்ணம் இருந்தன. எதிர் முனையில் ஒரு நிமிட மெளனம் சங்கர் எனக்கு கல்யாணம் நடக்கலை. நாளைக்கு நான் ஷூட்டிங்க் வர்றேன். ராம்கிட்டே சொல்லிடு. மிச்சத்தை நாளைக்கு அங்க வந்து சொல்றேன்.போன் வைக்கப்பட்டு விட்டது.
அடுத்த நாள் சங்கரின் எதிர்பார்ப்புக்கு மேல் காஞ்சனா நடித்து கொடுத்தாள். உணவு இடைவேளை தாண்டியும் ஷூட்டிங்க் நடந்தது.மூன்று மணிக்கு பேக்கப் சொல்லி அனைவரும் சாப்பிட கிளம்பிய பின்பு, ராம் காஞ்சனாவையும்,சங்கரையும் தன்னுடன் சாப்பிட அழைத்தான். மூவருக்கும் சாப்பாடு வீட்டிலிருந்தே வந்திருந்தது.
மூவரும் மெளனமாய் சாப்பிட்டு முடித்தவுடன் காஞ்சனா மெல்ல கண்களை துடைத்துக்கொண்டு, நம்மளை மாதிரி தொழில் செய்யறவங்க எல்லாம் அவசரமா கல்யாணம் செஞ்சுக்க அவசரப்பட கூடாதுன்னு புரிஞ்சுகிட்டேன். நம்ம தொழிலை புரிஞ்சவங்கனால மட்டும்தான் நாம வாழ முடியும். ராமும் சங்கரும் சிகரெட்டை புகைத்தவாறு மெளனமாய் அவளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
காலையில ஒன்பது மணிக்கு கோயில்ல கல்யாணம் அப்படீன்னு முடிவு பண்ணி வச்சிருந்தோம். இவன் என்னோட பால்ய கால சிநேகிதன் வேறே. அதனால என்னை புரிஞ்சுகிட்டவன் அப்படீன்னு நம்பினேன். இவன் பத்து மணி ஆகியும் வரவேயில்லை
என்னாச்சு அப்படீன்னு போன் பண்ணினா இன்னைக்கு பேப்பரை பாரு அப்படீங்கறான். சரி பேப்பரை பார்த்தா “கேராவனுக்குள்ளே “கா” என்று ஆரம்பிக்கும் நடிகை கும்மாளம்” உடன் அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகனும், டைரக்டரும் இருந்தனர். அதன் பின் டைரக்டர் அந்த நடிகையை மதியம் மேல் ஓய்வெடுக்க அனுப்பி விட்டார், இப்படி போட்டிருந்துச்சு. இதை பார்த்துட்டு இந்த மடையன் என் மேல சந்தேகப்பட்டுகிட்டு நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம், அதற்குள் அடுத்தவங்களோட கும்மாளமான்னு கேட்டான். எனக்கு கோபம் தலைக்கு மேல வந்துடுச்சு “போடா நீயும் உன் கல்யாணமும் அப்படீன்னு போனை வச்சுட்டேன். அதுக்கு பின்னால என்னோட டென்சன் எல்லாம் காணாம போச்சு.உனக்கு போனை போட்டு நாளைக்கு வர்றேன்னு சொல்லிட்டு நிம்மதியா தூங்கினேன். சாரிப்பா உங்க இரண்டு பேருக்கும் தொந்தரவு கொடுத்துட்டேன்
உடனே ராமும் சங்கரும் ஏய்..என்ன நீ இதுக்கெல்லாம் எமோஷன் ஆகறே. டேகிட் ஈஸி ம்மா, நம்மளை மாதிரி ஆளுங்க நல்லாயிருக்கும்போதே சம்பாரிச்சுக்கணும். அதை ஞாபகம் வச்சுகிட்டு தொழில்ல கவனத்தை பண்ணு. உனக்கு நல்லது நடக்கணும்னா அது பாட்டுக்கு தானா நடக்கும், சொல்லிக்கொண்டே ஆளுக்கொரு சிகரெட்டை வாயில் வைத்து பற்றவைத்து கொண்டு வெளியே வர எழுந்தனர்..
சங்கர் “ப்ளீஸ்”எனக்கு ஒரு சிகரெட் கொடேன் கையை நீட்டினாள் காஞ்சனா.