அவனும் நானும்-அத்தியாயம்-11

....அவனும் நானும்....

அத்தியாயம் : 11

அதிகாலை மூன்று மணியிருக்கும்...தண்ணீர்த்தாகம் எடுக்கவே,அறையைவிட்டு வெளியே வந்தான் ஆனந்...அப்போது அங்கே வெளிப்புறமாய் இருந்த பல்கனியில் கீர்த்தனா அங்குமிங்குமாய் உலாவிக் கொண்டிருப்பதைக் கண்டவன்,

"இவள் இன்னும் தூங்காமல் இங்க என்ன பண்ணிட்டிருக்காள்.."..என்ற கேள்வியோடே அவளை நோக்கிச் சென்றான்...

"கீர்த்து.."என்று அவன் அழைத்ததும் திரும்பிப் பார்த்தவள்,எந்த பதிலுமின்றி மீண்டும் அவளது சிந்தைக்குள்ளேயே மூழ்கிக் கொண்டாள்...

"என்னாச்சு இவளுக்கு என்னமோ மந்திரிச்சு விட்ட மாதிரி நிற்குறாள்..."என்ற குழப்பத்தோடே அவள் முன்னே போய் நின்று கொண்டான்...ஆனால் அப்போதும் அவள் எதையோ யோசித்த வண்ணமாகவே இருந்தாள்..

"ஹேய் கீர்த்து..என்னடி ஆச்சு..??..இன்னும் தூங்காமல் என்ன பண்ணிட்டிருக்க...??.."

அவன் கேட்டதும் சில மணித்துளிகளிற்கு மௌனம் சாதித்துக் கொண்டவள்,பெருமூச்சொன்றினை வெளிவிட்டவாறே மெதுவாய் தொடர்ந்தாள்...

"ஹ்ம்...நான்தான் என்னோட காதலை அண்ணாகிட்டயிருந்து மறைச்சன்னா...அவனும் என்னை மாதிரியே அவனோட காதலை என்கிட்டயிருந்து மறைச்சிட்டான் ஆனந்..."

"என்னடி சொல்லுற...அஸ்வின் லவ் பண்றானா...??..

"ம்ம்...உனக்கு அவனோட ப்ரண்ட் ஸ்ருதியைத் தெரியும் ல..??.."

"ம்ம்...தெரியும்...ஏன் அஸ்வின் ஸ்ருதியைத்தான் காதலிக்குறானா..??.."

"ம்ம்...காலேஜ்ல படிச்ச காலத்தில இருந்தே ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சிட்டிருக்காங்க.."

"ஆனால் உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்..??.."

"இன்னைக்கு பீச்சுக்குப் போனப்போ...அங்க அவங்களைப் பார்த்தேன்...எதேட்சையா அவங்க இரண்டு பேரும் பேசிட்டிருந்ததை கேட்ட போதுதான் எல்லாத்தையுமே தெரிஞ்சுக்க முடிஞ்சுது..."

"ஆனால் அவன் ஏன் இதைப்பத்தி எங்ககிட்ட எதுவுமே சொல்லல...??.."

"ஹ்ம்...அதுக்கும் நான்தான் காரணம் ஆனந்...நான் மட்டுமேதான் காரணம்.."

"என்னடி சொல்லுற...எனக்கொன்னுமே புரியலை...அவன் அவனோட காதலை மறைச்சதுக்கு நீ எப்படிடீ காரணமாக முடியும்...??.."

"நான் கல்யாணம் பண்ணிக்கலைன்னா தானும் இப்படியே இருந்திடுறேன்னு அவன் சொன்னப்போ,என் மனசை மாத்துறதுக்காக இப்படி சொல்றான்னு மட்டும்தான் நினைச்சேன்...ஆனால் இன்னைக்குத்தான் தெரிஞ்சுது..தன்னோட காதலையே எனக்காகத் தியாகம் பண்றதுக்கு தயாராய் இருந்துகிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கான்னு..."

ஆனந்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...அவன் இது எதையுமே எதிர்பார்த்திருக்கவில்லை...

"..எந்தக் காதல் என்னோட மனசை ஒன்னுமேயில்லாமல் ஆக்கிச்சோ,இன்னைக்கு மறுபடியும் அதே காதல் என் மனசை மொத்தமாகவே திருப்பிப் போட்டிடுச்சு..."

அவள் பேச்சிலிருந்து அவனுக்கு எதுவோ புரிவது போலிருந்தது...ஆனாலும் அவளிற்கு பேசுவதற்கான இடைவெளியைக் கொடுத்து அவன் அமைதியாகவே இருந்தான்..

"காதல் தோத்துப் போறதோட வலி எப்படியிருக்கும்னு என்னைவிட யாராலையுமே அதை உணர்ந்திருக்க முடியாது...அந்த வலியையும் வேதனையையும் அண்ணாவும் ஸ்ருதியும் அனுபவிக்குறதுக்கு நானே ஒரு தடையாய் இருக்க விரும்பலை ஆனந்.."

"என்னோட வாழ்க்கையில எது என்னைக்குமே இல்லை என்கிற ஒரு முடிவோட இருந்தேனோ...அந்த முடிவு,என்னோட பிடிவாதம் எல்லாமே அண்ணா என் மேல வைத்திருக்கிற அன்பிற்கு முன்னால் இன்னைக்கு மொத்தாமாவே தோத்துப் போயிடிச்சு.."

"அவன் என்னோட வாழ்க்கை நல்லாய் இருக்கனும் என்றதுக்காக தன்னோட காதலையே விட்டுக் கொடுக்கத் தயாராகிட்டான் ஆனந்...ஒரு பக்கம் அவன் உயிருக்கு உயிராய் நேசிக்குற பொண்ணு...இன்னொரு பக்கம் அவனோட அன்புக்குரிய தங்கைன்னு அவன் மனசுக்குள்ளேயே என்ன பண்றதுன்னு தெரியாமல் போராடிட்டு இருந்திருக்குறான்..."

"இதில ஒரு விசயத்தைக் கவனிச்சியா ஆனந்...நான் அவன் மனசு கஸ்டப்படக் கூடாதின்னு என்னோட காதலை அவன்கிட்டயிருந்து மறைச்சேன்...ஆனால் அவன் நான் எந்தக் கஸ்டமுமே இல்லாமல் சந்தோசமாய் வாழனும்னு தன்னோட காதலையே மொத்தமாய் சாகடிக்கத் துணிஞ்சிட்டான்..."

"இப்பேற்றப்பட்ட அண்ணனுக்காக நான் என்ன பெரிசா செய்திட முடியும்...?நான்...நான்...கல்யாணம் பண்ணிக்கிறதை தவிர..."

அவளின் இந்த முடிவினை ஆனந் எதிர்பார்த்திருந்தாலும்,அப்போதைய நிலையில் அவள் சொன்னதை அவனின் மனம் ஏற்றுக்கொள்ள சில விநாடிகள் பிடித்தது...அவளது ஐந்து வருடத் தவத்தையும் இந்த ஓர் நாள் மாற்றிவிட்டதென்பதை அவனால் நம்பவே முடியவில்லை...

இந்தக் காதல் செய்யும் மாயம்தான் எத்தகையதென்று யோசிக்கையில் அவனிற்கு மிகவும் வியப்பாக இருந்தது...ஐந்து வருடங்களிற்கு முன்னால் அவளின் மொத்த வாழ்க்கையையுமே தொலையக் காரணமாய் இருந்தற்கு முழுக் காரணமுமே அவளது காதல்தான்...ஆனால் இன்று அஸ்வினிற்கும் ஸ்ருதிக்குமிடையில் இருந்த காதல் அவளின் வாழ்க்கையையே மொத்தமாய் திருப்பிப் போட்டுவிட்டது...

"கேட்கவே ரொம்ப சந்தோசமாய் இருக்குடி...இந்த வார்த்தைகள் உன் வாயில இருந்து ஓர் நாள் வந்திடாதா என்றுதான் இத்தனை வருடங்களாய் காத்திட்டிருந்தேன்...இன்னைக்குத்தான் என்னோட அந்தக் காத்திருப்புக்கே புதிதாய் ஓர் அர்த்தம் கிடைச்ச மாதிரி இருக்கு..."

"உன்னைக் கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்குறது என் பொறுப்பின்னு இன்னைக்குத்தான் அஸ்வின்கிட்ட சொன்னேன்...ஆனால் அவன் எனக்கு எந்த வேலையுமே வைக்காமல்,அவனுக்கே தெரியாமல் அவனோட காதலாலையும் அன்பாலையும் அவன் தங்கையோட மனசை மாத்திட்டான்..."

"நீ வேணும்னா பாரு கீர்த்து... எப்படி ஒவ்வொரு இரவுகளுக்குமே விடியல் என்றது நிச்சயமானதொன்றாய் இருக்குதோ,அதே மாதிரி உன் வாழ்க்கையோட இருண்ட பக்கங்களுக்கான உதயமும் இந்தப் பகலவனின் உதயம் மாதிரி ரொம்பத் தூரத்தில இல்லை..."

அவனின் வார்த்தைகளைக் கேட்டு விரக்தியாய் ஓர் புன்னகையைச் சிந்திக் கொண்டவள்,

"ஹ்ம்...இப்போ நான் கல்யாணத்திற்கு சம்திச்சது...என்னால அவங்க இரண்டு பேரோட காதலும் வாழ்க்கையும் தோத்துப் போயிடக் கூடாது என்றதுக்காக மட்டும்தான்...மத்தபடி என் மனசில இருக்கிற எந்த வலியும் மாறல ஆனந்...நான் உயிரோட இருக்கும் வரைக்கும் அந்த வலி எனக்குள்ளே இருந்திட்டேதான் இருக்கும்.."

"இரவுகளோட முடிவு வேணும்னா விடியலோட ஆரம்பத்தில இருக்கலாம்...ஆனால் என் வாழ்க்கையோட இருண்ட பக்கங்களுக்கான விடியல் எனக்குப் பக்கமாய் இல்லை என்றதுதான் உண்மை ஆனந்.."

அவளால் ஒரேயடியாக அனைத்தையும் மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட முடியாதென்பதை அவனும் அறிவான்தான்...ஆனால் அவளின் எதிர்கால வாழ்க்கை அவளின் மனதை நிச்சயம் மாற்றிவிடுமென்று நம்பினான்...அத்தகையதொரு அழகான வாழ்க்கையையும் காதலையும் அவளிற்கு இனியாவது அமைத்துக் கொடு என்று கடவுளிடம் மனதினுள் மானசீகமாய் வேண்டிக் கொள்ளவும் செய்தான்..

"எது எப்படி இருந்தாலும்,உன் மனசில இப்போ வந்திருக்கிற இந்தச் சின்ன மாற்றம்,இனி நீ வாழப் போற வாழ்க்கைக்கான ஓர் ஆரம்பம்தானே...நீ வேணும்னா பாரு கீர்த்து,இப்போ நீ எடுத்திருக்குற இந்த முடிவால..அஸ்வினோட காதல் மட்டுமல்ல...இனி உனக்கே உனக்கான காதல் கூட உன்னைத் தேடி வரப் போகுது..."

"உன்னோட கடந்த காலத்தின் கசப்பான நிகழ்வுகள் எல்லாத்தையும் விரட்டியடிக்குற மாதிரி ஓர் அற்புதமான காதலன் உன்னோட வாழ்க்கைக்குள்ள வரத்தான் போறாரு...அப்போ உன்னோட வாழ்க்கையும் இந்த அதிகாலைப் பொழுது மாதிரி அழகாய் மாறத்தான் போகுது..."

அவளது உள்ளம் கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தாலும்..அந்த நேரத்தில் அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளது மனதிற்கு ஆறுதலாகவே இருந்தன...ஆனால் காதலோ கோபமோ அவனைவிட அதிகமாய் யாராலுமே அவள் மேல் காட்ட முடியாதென்ற உண்மையில் அவள் மனம் கனக்கத்தான் செய்தது...

"இன்னும் உனக்குள்ள என்ன ஓடிட்டு இருக்கு கீர்த்து..??.."

"ஹ்ம் ஒன்னுமில்லைடா...உன்னோட வார்த்தைகளைத்தான் எனக்குள்ளே நானே இன்னொருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்..."

"நான் ஒரு விசயம் சொல்லட்டுமா ஆனந்..?.."

"என்ன..??.."

"உன்கிட்ட ஏதோவொரு மாஜிக் இருக்கு ஆனந்...எப்போ எல்லாம் என்னோட மனசு
அதோட நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்குதோ,அப்போ எல்லாம் நீ என் பக்கத்தில இருந்தாலே போதும்...நான் ரொம்பவுமே ஆறுதலாவும் நம்பிக்கையாவும் பீல் பண்றேன்..."

"அன்னைக்கு என்னோட மொத்த நம்பிக்கையுமே நான் இழந்திட்டு நின்னப்போ..உன் துணை மட்டும் எனக்கு இல்லாமல் போயிருந்தால்,இன்னைக்கு நான் இப்படி உன் பக்கத்தில நின்னு பேசிட்டிருந்திப்பேனான்னே தெரியல...நீ எனக்கு எப்பவுமே ஒரு நல்ல நண்பனாய் இருந்திருக்க என்றதை விடவும் எனக்கு நல்ல துணையாய் நீ இருந்திருக்க ஆனந்.."

"இது எல்லாத்துக்குமே சேர்த்து நன்றி என்ற ஓர் வார்த்தை போதுமான்னு தெரியலை...ஆனாலும் இதைத்தவிர வேற என்ன சொல்றதுன்னும் தெரியலை...தாங்யூடா...தாங்யூ சோ மச்.."

"ஹ்ம்...இப்போ நீ ஒரு விசயம் சொல்லு...இந்த நன்றி,மன்னிப்பு என்கிற வார்த்தை எல்லாம் நமக்குள்ள எப்போல இருந்து வந்திச்சு..ம்ம்..??..இங்க பாரு கீர்த்து..இப்போன்னு இல்லை இனி என்னைக்குமே நமக்குள்ள இந்த வோர்மாலிட்டிஸ் எல்லாம் இருக்கக்கூடாது...புரிஞ்சுதா..??.."

"ம்ம்..நல்லாவே புரிஞ்சுது மிஸ்டர் மாஜிக்.."

"அட பரவாயில்லையே...இந்தப் பெயர் கூட ரொம்ப நல்லாத்தான் இருக்கு.."என்று புன்னகைத்தவாறே அவளின் கைகளிரண்டையும் பிடித்துக் கொண்டவன்,

"இப்போ உன் முகத்தில லேசாய் தோன்றியிருக்குற இந்தப் புன்னகை எப்பவுமே உன்கிட்ட இனி நிரந்தரமாய் இருக்கனும் கீர்த்து...இதே மாதிரி நீ என்னைக்குமே சிரிச்சுக்கிட்டே இருக்கனும்.."

"நான்தான் சொன்னேனே நீ என் பக்கத்தில இருக்குற வரைக்கும்,இப்போ என் முகத்தில இருக்குற இந்தப் புன்னகையை யாராலையுமே தூக்கிட்டுப் போக முடியாது...அப்படியே யாராச்சும் என்னை அழ வைக்க முயற்சி பண்ணாங்கன்னா அவங்களைத்தான் என்னோட ஆனந் ஒருவழி பண்ணிடுவானே..இல்லையா...??..என்றவாறே அவள் புருவத்தைக் கேலியாய் உயர்த்தவும்,ஆமாம் என்பதற்கு அடையாளமாய் தலையினை அசைத்துக் கொண்டவன்,

"உண்மைதான்...ஆனால் அஞ்சு வருசத்துக்கு முன்னால எல்லாமே தெரிஞ்சும் அவனை என்னால எதுவுமே பண்ண முடியலையே கீர்த்து.."

"அவன் யாருன்னு கூட நீ இன்னைக்கு வரைக்கும் எனக்கு அடையாளம் காட்டல..."

"ஹ்ம்..ஒருவேளை நீ அவனைச் சந்திக்கனும்னு விதி இருந்தால்,கண்டிப்பாய் நீ அவனைப் பார்ப்பாய் ஆனந்...நான் அவனை எப்படி என் வாழ்க்கையில சந்திச்சனோ,அதே மாதிரியே.."என்றவளின் குரலோடு இணைந்து மனமும் கலங்கியது..


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (19-Jun-18, 12:21 pm)
பார்வை : 623

மேலே