தாமரைக் குளம்
ஊரின் எல்லையிலிருந்தது அந்தப் பாழடைந்த தாமரைக் குளம். உடனே உங்களின் கற்பனையில் பாசி படர்ந்து, இடிபாடுகளுடன் கூடிய படிக்கட்டுப் பிளவுகளிலிருந்து வெளியேறும் சிறு சிறு மீன்களின் தற்காலிகத் துள்ளளில் பாசி விலகத் தெரியும் சிதைந்த நீர்க்கோடுகளை உடைய குளமாகத் தெரிந்தால் என்னை தயவுசெய்து மன்னிக்கவும். ஐந்து தலைமுறைகளாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து போன குளம்தான் அந்த தாமரைக்குளம். மழை பொழியும் காலங்களில் சிறிது நேர ஓய்வுடன் தேங்கியிருக்கும் நீரினை சில நிமிடங்களுக்குள் பசியுடன் காத்திருக்கும், இதிகாச அரக்கன் போல அவ்வளவையும் உறிஞ்சிக்குடித்துவிட்டு தணியாத தாகத்துடன் வாய் பிளந்து காத்திருப்பதாக நமக்குத் தோன்றும். திருமறையூர் கிராமத்தின் முதல் அடையாள வழிகாட்டியான அந்தத் தாமரைக்குளம் தன்னுள்ளில் மூன்று மர்மக் கதைகளை ஒளித்துவைத்திருந்தது.
சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு ஊரில் இப்போது இருக்கும் பெருந்தனக்காரரின் பரம்பரையில் வந்த ராமசாமி என்ற ஒருவரின் கதைதான் இது. இருக்கும் கையளவு நிலத்தில் ஏதோ விவசாயம் செய்து வாழ்க்கையை மிகவும் சிரமப்பட்டு நகர்த்திக்கொண்டிருந்தார். ஊரில் இருக்கும் ஜோசியர் ஒரு நாள் ராமசாமியைப் பார்த்து கிழக்கு மூலையில் ஒரு குளம் தோண்டினால் வறுமை நீங்கி வளம் பெறலாம் என்று குறி சொல்ல ராமசாமியும் தனி ஆளாக நின்று வேலையைத் தொடங்கினார். பத்தடிக்கு மேல் தோண்டியும் நீர் கிடைக்கவில்லை. மனைவியிடம் இதைப்பற்றிக் குறைபட்டுக்கொண்டவர் அடுத்த நாள் உற்சாகம் இல்லாமல் தோண்டும் போது மூடிய ஒரு செப்புப்பாத்திரத்தில் தங்கக் காசுகள் இருப்பதைக் கண்டவர் ஆச்சரியத்தில் செய்வதறியாது சிறிது நேரம் அப்படியே உறைந்துபோனார்.
தனக்குக் கிடைத்த புதையலின் பூர்வீகத்தை மக்களின் மனதில் இருந்து மறைக்கவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பவும் ராமசாமி ஒரு திட்டம் போட்டார். திருமறையாண்டவர் கோயில் மூலவர் தன் கனவில் அடிக்கடி தோன்றி கோயிலை நல்ல முறையில் புணரமைத்து சிறப்பாகக் கும்பாபிஷேகம் செய்ய கட்டளையிட்டதாக ஒரு வதந்தியைப் பரப்பினார். அனைத்து திருப்பணிச் செலவுகளையும் தானே தன் செந்தச் செலவில் ஏற்றுக்கொண்டு நல்ல முறையில் செய்து கொடுத்தார். பின்னாளில் தானே கோயில் நிர்வாகியாக இருந்து கூடுதல் கவனத்துடன் கோயில் திருப்பணிகளை ஆண்டு தோறும் தவறாமல் மேற்கொண்டார். கோயில் காரியம் என்பதால் இவ்வளவு பணம் ராமசாமிக்கு எப்படி வந்தது என்று யாரும் கேட்கவில்லை. இப்படியாக ராமசாமியின் புதையல் ரகசியம் மக்களின் மனதில் இருந்து நிரந்தரமாக அழிக்கப்பட்டு ஊர்ப் பெருந்தனக்காரராக மக்களின் முன் வலம் வந்தார்.
அதற்குப் பிறகு குளத்தை மேலும் தோண்டாமல் விட்டு விட்டார். பராமரிப்புப் பணி எதையும் மேற்கொள்ளாததால், அந்தக் குளத்தில் தேங்கிய நீரில் தாமரைச் செடிகள் வேகமாகப் பரவியது.
மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்ட ராமசாமி தன் கனவில் அந்தத் தாமரைக்குளம் அடிக்கடி வருவதாக பிதற்றிக்கொண்டேயிருந்தார். நாளடைவில் ஒரு மன நோயாளியாக மாறி கடைசிக் காலத்தில் அந்தக் குளத்தையே சுற்றிச் சுற்றி வந்தார். அவர் இறந்த பிறகு அவரை அந்தக் குளத்தின் அருகிலேயே புதைத்தவர்கள் ஒரு நடுக்கல்லையும் ஊன்றி அவரை குல சாமியாக வழிபடவும் ஆரம்பித்தார்கள். அவரின் சமாதியை இன்றளவும் அந்தக் குளம் கண்காணிப்பதாக ஊர் மக்கள் நம்பினார்கள்.
பெருந்தனக்காரர் பரம்பரையின் ஒவ்வொரு தலைமுறையிலும் இந்தக் கதை மேலும் அதிகமான புனைவுகளுடன் மெருகேற்றப்பட்டு அனைத்து பஞ்சாயத்துத் தேர்தலிலும் நிரந்தர வாக்குச் சீட்டுகளாக மாற்றிக் கொண்டார்கள்.
இந்தக் கதையை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத இருளப்பன் தனக்கான ஒரு கதையை கிராமத்தில் உலவ விட்டிருந்தார். ராமசாமியின் காலத்தில், இருளப்பன் குடும்பத்தில் வந்த மாரிசாமிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு தாமரை என்று பெயர் வைத்தார்கள். கிராமத்தையே கட்டிப்போடும் அழகுடன் வலம் வந்தாள் தாமரை. அவளின் பெற்றோர்கள் தங்களின் வசதியை மீறியபடிக்கு அவளின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி வைத்தார்கள். அப்போதுதான் ராமசாமியின் ஓரே மகன் தாமரையின் அழகில் மெய்மறந்து அவள் மேல் காதல் கொண்டான். இதை எப்படியே அறிந்த ராமசாமி கொதித்தெழுந்து கிராமத்தில் இருக்கும் திருமறையாண்டவர் கோயிலில் ஆள் வைத்து மூலவரைத் திருடச்செய்து அந்தப் பழியை மாரியப்பன் மேல் சுமத்தினார். தன்னால்தான் தன் குடும்பத்திற்கு இத்தகைய பழிச்சொல் வந்தது என்று மனம் உடைந்த தாமரை ராமசாமியின் குளத்தில் விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். இப்படித்தான் அந்தக் குளம் தாமரைக்குளமானது என்ற கதையை இருளப்பன் குடும்பத்தினர்கள் தலைமுறை தலைமுறையாக மிகுந்த அக்கரையுடன் ஊர் மக்களிடம் எடுத்துக்கொண்டு சென்றார்கள்.
இந்த இரண்டு கதைகளிற்கும் மகுடம் சூட்டுவது போல அதீத கற்பனையுடன் திருமறையாண்டவன் கோயில் பூசாரியின் கைவசம் மூன்றாவது கதை ஒன்று இருந்தது.
மாரிசாமி, ராமசாமி காலத்தில் நாட்டில் எங்கும் பஞ்சம் நிலவியது. அதிகமான கள்வர்கள் பயம் வேறு இருந்தது. பலர் கிராமத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இரண்டாம் ஜாமம் விளக்குத் திரி கருகி புகை கசியும் நேரங்களில் பலர் மூடிய ஜன்னல்களிலிருந்து கள்வர்களைப் பார்த்ததாக கூறினார்கள். அந்தக் கள்வர்களின் தலைவன் போல தோற்றமளித்த ஒருவனின் வலது கண் பளிங்கை பொறுத்தியது போல பளபளப்புடன் இருந்ததாம். அவன் குதிரையின் மேல் அமர்ந்து வேகமாக செல்லும் போது அந்தப் பளிங்குக் கண்மட்டும் துருத்திக்கொண்டு வெளியே தெரியுமாம். திருமறைக்கோயிலில் இருக்கும் மூலவர் சிலையை ஒரு நாள் அந்தப் பளிங்குக் கண்ணன் திருடிக்கொண்டு குதிரையில் அமர்ந்து அந்தக் குளக்கரை வழியாகப் போகும் போது, குதிரை கால் இடறி கீழே சரிய மூலவரை குளத்தில் நழுவவிட்டான் . பிறகு எவ்வளவு தேடியும் மூலவர் சிலை அவன் கைக்குக் கிடைக்கவில்லையாம். அந்த மறைக்குளம்தான் பின்னாளில் தாமரைக்குளமானது என்று கோயில் பூசாரி தன் பங்குக்கதையை ஓரே மூச்சுடன் சொல்லித் தீர்த்தார். இந்த மூன்று கதைகளில் எது உண்மைக் கதை என்ற குழப்பத்திலேயே மக்களை வைத்திருந்தது பலருக்கு சாதகமாக இருந்தது.
ஊர்ப் பெருந்தனக்காரர் மூப்பின் இயலாமையால் படுத்த படுக்கையானார். எவ்வளவு செலவழித்தும் பெரியவரின் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் தெரியவில்லை. அடிக்கொரு தடவை “தாமரைக் குளம்” என்று மட்டும் பிதற்றிக்கொண்டேயிருந்தார். இதையறிந்த ஊர் சாமியாடி பெரியவரின் வாயிற்கருகில் காதை வைத்துக் கேட்டு “தாமரைக் குளம் தண்ணியை ஒரு சொட்டாவது முதியவரின் உதட்டை நனைத்தால்தான் உயிர் பிரியும்“ என்று அருள்வாக்களித்து மலையேறினார்.
இரண்டு மாதகாலமாக முதியவர் அசைவேதும் இல்லாமல் கட்டிலில் அப்படியே கிழிந்த பாயாகக் கிடக்க, எப்போதாவது உதடு பிரிந்து எதையோ சொல்லப் பதறும். அன்று முதியவரின் உடன் நிலை மிகவும் மோசமானது. ஊர் ஜனங்கள் அனைவரும் அவர் வீட்டிலே திரண்டிருந்தார்கள். அந்த அமைதியான சூழ்நிலையைத் தகர்த்தவாறு ஒரு சிறுவன் கத்திக்கொண்டே அங்கே ஓடிவந்தான்.
“தாமரைக் குளத்திலே கிழக்கு பக்க மூலையில் லேசா ஊத்தேடுக்குது” என்று கூற ஊரே தாமரைக்குளத்திற்கு விரைந்தது. முதியவரின் மகன் ஒரு குவளையில் உள்ளங்கையளவு நீர் பிடித்து சிறுவனுடன் வீட்டிற்கு விரைந்தான். அவனுக்கு முன்பே வீட்டிற்கு வந்த அந்தச் சிறுவனின் கிழிந்த கால் சராயில் இருந்து கீழை விழுந்த கண் போன்ற பளிங்கு ஒன்று சிறிய துள்ளளுடன் பெரியவரின் மார்பில் விழ இரண்டு மாதங்களாக ஊசலாடிக்கொண்டிருந்த உயிர் மெதுவாக அவரை விட்டுப் பிரிந்தது. நடந்த அனைத்திற்கும் ஓரே சாட்சியாக இருந்த மூலவர் பரணிலிருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார்.