528 நல்லோர் இன்சொல் மழைபோல் நவில்வர் – பன்னெறி 8

அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

உருமைமின் னினைத்தன் பாற்கொண்(டு)
உதகமன் னுயிர்க்கு நல்குங்
கருமுகி லெனக்கண் ணாலென்
காணினுங் கேட்பி னுஞ்சூழ்
பருவர லேதி லார்க்குப்
பயக்கும்வன் சொல்லை நீத்து
மருவிய நலங் கலந்த
வசனமே பகர்வர் நல்லோர். 8

– பன்னெறி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கைம்மாறு வேண்டாக் கடப்பாடுள்ள கரிய பெரிய மழை உயிர்களுக்குத் தீங்கு பயப்பதாகிய இடியையும் மின்னலையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு, நன்மை பயப்பதாகிய தண்ணீரையே தருகின்றது.

அதுபோன்று நல்லவர்களும் கண்டதும் கேட்டதும் அவ்வாறே கூறிவிடாது, பிறருக்குத் துன்பந்தரும் வன்சொல் நீக்கி நன்மைதரும் இன்சொல்லையே சொல்லுவர்.

உரும்-இடி. மின்-மின்னல். உதகம்-தண்ணீர். பருவரல்-துன்பம். வசனம்-சொல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-18, 11:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே