வெற்றி பெறுவதன் நோக்கம்

வெற்றிடத்தில் சுற்றிடும் காற்றுக்கு வெற்றி
ஓங்கிய மலைகளை அசைத்து பிடுங்குவது!
வெற்றிலைக்கு வெற்றி சுண்ணாம்புடன் சேர்ந்து
ரத்தகறைபோல் நாக்கை சிவக்க வைப்பது!

மண்ணுக்கு வெற்றி மண்புழுவின் மண்கூடுகளோடும்
இயற்கை உரங்களோடும் இயன்றவரை வாழ்வது!
விண்ணுக்கு வெற்றி வாடிகிடக்கும் நஞ்சைகளை
புஞ்சைகளாக்கி பூமியை புண்ணகை சிந்துவதில்!
கண்ணுக்கு வெற்றி கண்ட காட்சியெல்லாம்
நினைவுகளாய் தேக்கி வைத்து ரசிப்பதில்!

உலகுக்கு வெற்றி சாதிகள் ஒழிந்து
நீதியின் பாதையில் நிலைத்து நிற்பது!
கடுகுக்கு வெற்றி கொதிக்கும் எண்ணெயில்
சட்டியில் போராடி ருசியை சேர்ப்பது!
பொடுகுக்கு வெற்றி தலைமுடிக்குள் தன்
தலைமுறையை வாழ வழிநடத்தி செல்வது!

மரத்துக்கு வெற்றி முடிந்தவரை தேடிவந்தோர்க்கு
நின்று தினமும் நிழல் தருவது!
கரத்துக்கு வெற்றி காட்டை அழித்துக்
கொன்று கோட்டை கட்டாமல் இருப்பது!
சிரத்துக்கு வெற்றி உயிர் போயினும்
என்றும் அநிதிக்கு தலைவணங்காமல் இருப்பது!

புனிதனுக்கு வெற்றி ஊர்வசி ஊர்வலம்
வந்தாலும் காமனை எதிர்த்து வெல்வது!
மனிதனுக்கு வெற்றி காலம் முழுவதும்
சோதனையிலும் நியாத்தில் நிலைத்து நில்வது!
வாழ்க்கைக்கு வெற்றி வாழும் வாழ்க்கை
வாழ வளியவனிடம் கையேந்தாமல் வாழ்வது!
நீ! காணும் வெற்றியிலும் ஒரு மெய் இருக்கவேண்டும்
இல்லையேல் மெய்யெழுத்து ஓடி வெறியாகிவிடும்
-அம்பேத் ஜோசப்

எழுதியவர் : (22-Jun-18, 2:18 pm)
பார்வை : 73

மேலே