என் ஆய்வுகளுக்கு உவேசா,வின் நூல்கள் தான் அடிப்படை தினமலர் ஆசிரியர் டாக்டர் இராகிருஷ்ணமூர்த்தி பெருமிதம்

சென்னை:
சென்னை, மாநிலக் கல்லுாரியில், காலச்சுவடு, இலக்கியவீதி இணைந்து நடத்திய, ப.சரவணன் தொகுத்த, 'சாமிநாதம்' நுால் அறிமுக விழாவில், ''புறநானுாறு தான், என் ஆய்வுகளுக்கு அடிப்படை; உ.வே.சா., தான் என் உழைப்பின் ஏணிப்படி,'' என, 'தினமலர்' ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பெருமிதத்துடன் பேசினார்.சென்னை, மாநிலக் கல்லுாரியில், நேற்று மாலை, ப.சரவணன் பதிப்பித்த, உ.வே.சா., பதிப்பித்த நுால்களில் அவர் எழுதிய முன்னுரைகள் அடங்கிய தொகுப்பான, 'சாமிநாதம்' நுால் அறிமுக விழா நடந்தது. அதில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ஆ.இரா.வேங்கடா சலபதி, தலைமை ஏற்றார். மாநிலக் கல்லுாரி முதல்வர், பிரம்மானந்த பெருமாள், முன்னிலை வகித்தார். 'தினமலர்' ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 'மொழி அறக்கட்டளை' திட்ட இயக்குனர், பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன், பக்தி இலக்கிய ஆய்வாளர், கி.சுப்பிரமணியன் ஆகியோர், 'சாமிநாதம்' நுாலை பற்றியும், உ.வே.சா.,வின் தமிழ்ப்பணிகள் பற்றியும், கருத்துரை ஆற்றினர். ஈய எழுத்துக்கள்'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தன் கருத்துரையில் பேசியதாவது: இந்த இனிய விழா, மாநிலக் கல்லுாரியில் நடைபெறுவதை அறிந்தவுடன், நான் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். நானும் இந்த கல்லுாரியின் பழைய மாணவன். இங்கு, நான், புவியியல் படித்தேன். அந்த காலத்தில், இந்த கல்லுாரியில் மட்டும் தான், அந்த படிப்பு இருந்தது. அந்த படிப்பில், நான் பல்கலைக்கழகத்திலேயே, முதல் மாணவனாக வந்தேன்.மாநிலக் கல்லுாரியில் படித்தபோது, விக்டோரியா விடுதியில் தான் தங்கி இருந்தேன். அந்த இரண்டு ஆண்டுகளும், என் வாழ்வின் பசுமையான காலங்கள். அப்போது, இந்த கல்லுாரி மாணவர்களை 'பிரின்சஸ் ஆப் பிரசிடென்சி' என்று, பெருமையாகக் கூறுவர். 'சாமிநாதம்' என்ற இந்த நுால், 1,200 பக்கங்களை கொண்ட ஒரு அற்புதமான படைப்பு. இதை பதிப்பித்ததால், 'காலச்சுவடு' பதிப்பகத்திற்கு பெருமை. இது, 1950, 70களிலேயே வந்திருக்க வேண்டும். அப்போது இருந்த மக்களுக்கு, இந்த பாக்கியம் கிடைக்கவில்லை; ப.சரவணனுக்கு கிடைத்திருக்கிறது. இந்த நுாலில், உ.வே.சா., எழுதிய முன்னுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை தொகுப்பது, மிக கடினமான பணி. காரணம், அந்த காலத்தில் உள்ள எழுத்துக்கள், ஈய எழுத்துக்களால், 'கம்போஸ்' செய்யப்பட்டு அச்சிடப்பட்டு இருக்கும். 'கம்ப்யூட்டர் கம்போசிங்' அந்த ஈய எழுத்துக்களுக்கு பதிலாக, பெரியார் நுாற்றாண்டு விழாவில் தான், சீர்திருத்த எழுத்துக்களை அறிவித்தனர். அந்த சீர்திருத்த எழுத்துக்கள் வராவிட்டால், இந்த மாதிரி, 1,200 பக்கங்களை, 'கம்போஸ்' செய்வது கடினமாக இருந்திருக்கும். கடந்த, 1981-82ம் ஆண்டில், 'மோனோடைப் கார்ப்பரேஷன்' என்ற இங்கிலாந்து நிறுவனம், இந்தியாவிற்கு வந்து, இந்தியாவின் பழமையான ஈய எழுத்துக்களுக்கு பதிலாக, 'பிலிம் செட்டர்' என்ற முறையை அறிமுகப்படுத்தினர். அதனால், இந்தியாவிற்குள், 'கம்ப்யூட்டர் கம்போசிங்' முறை வந்தது. ஆனால், அதன் விலை, அப்போதே 50 லட்சம் ரூபாய். அதேநேரம், பூனாவில் இருந்து, 'மாடுலர் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனம், இந்திய மொழிகளுக்கான 'பிலிம் செட்டரை' உருவாக்கி தருவதாக அறிவித்தது. அப்போது, தமிழ் மொழிக்கான 'பிலிம் செட்டரை' உருவாக்கி தருவதாக, கூப்பர் என்பவர், என்னிடம் உறுதியளித்தார். அதற்காக, தமிழ் எழுத்துக்களை எளிமையாக சொல்லித்தரும்படி கேட்டுக் கொண்டார். நான், ஏற்றுக்கொண்டேன். நானும் அடிக்கடி பூனா சென்று, தமிழ் ஈய எழுத்துக்களின், 'புரூப்'களை எடுத்துக் கொடுத்தேன். அவர், கணினி திரையில் போட்டுக் காண்பிப்பார். அப்போது, தமிழ் ஈய எழுத்துக்களில் இருந்த குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கச் சொன்னேன். தமிழ் ஈய எழுத்துக்களில் 'இ'கரம், 'ஈ'காரம், சீரில்லாமல் இருந்தன. அவற்றை சீராக்கினேன். மெய்யெழுத்துகளில் உள்ள புள்ளி சில எழுத்துகளில், பக்கவாட்டிலும், சில எழுத்துகளில் நடுவிலும் இருக்கும். அதையும் சீராக்கினேன். அடுத்து, இலக்கண விதியை சுட்டிக்காட்டி, மெய்யெழுத்து துவக்கத்தில் வரக்கூடாது என்பதை, சொல்லிக் கொடுத்தேன். 'ஸ்ரீலிபி 800'அதன்பின், அவர்கள் முழுமையான, மிக அழகான கம்ப்யூட்டர் எழுத்துக்களை கொடுத்தனர். அந்த எழுத்துருக்களுக்கு, அவர்கள் 'ஸ்ரீலிபி 800' என, பெயரிட்டனர். நான் எதுவும் சொல்லவில்லை. அதற்கு எந்த உரிமையும் கோரவில்லை. தமிழுக்கு செய்கிறோம் என்ற ஒரே நோக்கத்தில் தான், எல்லாம் செய்தேன். அதனை, கூப்பர், ஜெர்மனி, இங்கிலாந்து, உள்ளிட்ட உலக நாடுகளுக்கெல்லாம் கொண்டு சென்று விற்றார். அதற்கான விசைப் பலகையையும், நான் தான் வடிவமைத்தேன். நாம் அதிகமாக பயன்படுத்தும் எழுத்துக்களின் அடிப்படையில், வரைபடம் தயாரித்து, அந்த விசைப் பலகையை உருவாக்கினேன். தட்டச்சு இயந்திரம் தான், தமிழை சீரழித்தது. அதில், 'கி'யை தட்டச்சினால் 'க' ஒரு இடத்திலும், கொக்கி ஒரு இடத்திலும் தொங்கிக் கொண்டிருக்கும். 'கம்ப்யூட்டர் கம்போசிங்' வந்தபின், அழகழகான நுால்கள் எல்லாம் வெளிவந்தன. தமிழ் பத்திரிகை உலகில், ஒரு புரட்சி ஏற்பட்டது. தமிழில் எழுத்துச்சீர்மை செய்யும் நோக்கில், நான் தமிழின் தொன்மையான எழுத்துகளை எல்லாம் படித்தேன். தமிழ் பிராமி, வட்டெழுத்து, சேரநாட்டு வட்டெழுத்து, பிற்கால வட்டெழுத்துக்களை எல்லாம் படித்தேன். உ.வே.சா.,வை பொறுத்தவரை, அவரின் புறநானுாற்றுடன் தான், எனக்கு முதல் தொடர்பு ஏற்பட்டது. எனக்கு, மதுரையில் கிடைத்த ஒரு செப்பு நாணயத்தில், தமிழ் பிராமி எழுத்தில், 'பெருவழுதி' என்ற பெயர் இருப்பதைக் கண்டேன். நாணயத்தின் முன்புறத்தில் குதிரையும், பின்புறத்தில் கோட்டு வடிவ மீன் சின்னமும் இருந்தன. நான், பெருமகிழ்ச்சி அடைந்தேன். மாறியது வரலாறுஅதுவரை, சங்ககால தமிழ் மன்னர்கள், குறிப்பாக, சேர, சோழ, பாண்டியர்கள், குறுநில மன்னர்களை போல் குறிப்பிடப்பட்டு வந்தனர். 'அவர்களுக்கு நாணயம் வெளியிடும் தேவை ஏற்பட்டிருக்கவில்லை; பண்டமாற்று முறையே தமிழர்களிடம் வழக்கில் இருந்தது' என்று பலரும் சொல்லி வந்தனர். வரலாற்று ஆய்வாளர்களும், அவ்வாறே எழுதி வந்தனர். கடந்த, 1894ல், உ.வே.சா.,வால், புறநானுாறு வெளியிடப்பட்டது. அதன் முன்னுரையில், ''இந்த நுாலை படித்தால், பிற்காலத்து வரலாற்று ஆசிரியர்களுக்கு, மிகவும் பயன்படும். இதில் ஏராளமான வரலாற்று செய்திகள் உள்ளன,'' என்று, குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு கிடைத்த நாணயத்தில், துவக்கத்தில் இருந்த, இரண்டு எழுத்துக்கள், படிக்க முடியாமல் இருந்தன. 'வழுதி' என்ற எழுத்துக்கள் தான் தெரிந்தன. பின் சென்னை வந்தேன். நான் எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது, என் தமிழாசிரியர் எனக்கு கொடுத்த புறநானுாற்று நுாலை படித்தேன். அதில் தான், பெருவழுதி பெயர் இருந்தது. அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அதை அடிப்படையாக வைத்து, பெருவழுதி நாணயத்தில் இருந்தவை, தமிழ் பிராமி எழுத்துக்கள் என்ற அடிப்படையில், கட்டுரை தயாரித்தேன். இலங்கையில் 'தாம்ப்ரபர்ணி'அதை, வாரணாசியில் நடந்த, நாணயவியல் மாநாட்டில் வாசித்தேன். அவர்கள், 'அசோகர் பிராமி தான் உண்டு. தமிழ் பிராமி என்று ஒன்று இல்லை' என்றனர். நான், ''ழ, ழி, ழு போன்ற எழுத்துக்கள் தான் தமிழின் சிறப்பு எழுத்துக்கள், இதில், 'ழு' இருக்கிறது,'' என்றேன். அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதுதான், என் முதல் நாணயவியல் கட்டுரை. அதன்பின், சங்ககால சேர நாணயம், மலையமான் நாணயங்கள், சோழ நாணயங்கள், ரோமானிய, கிரேக்க நாணயங்களை ஆய்வு செய்தேன். ரோமானிய கிரேக்க நாணயங்களை கொண்டு, சங்ககால தமிழர்களின் பன்னாட்டு உறவினை வெளிப்படுத்தினேன். 'தாம்ப்ரபர்ணி' என்ற நாடு, இலங்கையில் இருப்பதாக பலர் கூறிக்கொண்டிருந்த நிலையில், சமீபத்தில், 'செழிய செழியன் நாணயங்கள்' என்ற நுாலின் வழியாக, தமிழகத்தின் தென்கோடியில் இருப்பதாக விளக்கியுள்ளேன். இப்படியாக என் ஆய்வுகளுக்கு, உ.வே.சா.,வின் நுால்கள் தான் அடிப்படை. அவை தான் என் உழைப்பின் ஏணிப்படி. தொன்மையான தமிழ் மொழிக்கு, நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார். ஆ.இரா.வேங்கடாசலபதி பேசியதாவது: உ.வே.சா.,வின், அனைத்து முன்னுரைகளையும் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கும், 'சாமிநாதம்' என்ற இந்த நுால், மிக அரிய நுால். எல்லிஸ், 39, பாரதி, 39, என, பெரும்பாலும், தமிழ் தொண்டுக்கு தன்னை ஒப்படைத்தோரின் வாழ்க்கை, மிக குறுகிய காலமே இருந்தது. ஆனால், அதற்கு மாறாக, உ.வே.சா., நிறைவாழ்வு வாழ்ந்தார். அவர், ஆசிரியர்கள், புரவலர்கள், மாணவர்கள் என, அனைவருடனும் தம் இணக்கத்தால், தமிழ் தொண்டு செய்தார். அவரை போலவே தமிழ்த்தொண்டு செய்த, சி.வை.தாமோதரம் பிள்ளையும், உ.வே.சா.,வும் எதிரும் புதிருமானவர்கள் என்ற மாயை, இங்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உ.வே.சா.,வின் முன்னுரைகளை படித்தால், அவர், அதற்கு மாறானவர் என்பது புரியும். சி.வை.தாமோதரம்பிள்ளையின் ஆளுமையையும், ஆரவாரத்தையும் வைத்துப் பார்த்தால், அவர் ஒரு இந்திரஜித் எனலாம். அமைதி, தெளிவு ஆகியவற்றை வைத்து பார்த்தால், உ.வே.சா., ஒரு ராமனாக காட்சியளிக்கிறார். உ.வே.சா.,வின், முன்னுரைகள் மட்டுமின்றி, அவரது அகராதிகள், மேற்கோள்கள், ஒப்புமைகளும் தொகுக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மொழி அறக்கட்டளை திட்ட இயக்குனர், பா.ரா.சுப்பிரமணியன் பேசியதாவது: உ.வே.சா., தன், 15 வயதில் தமிழ் இலக்கியங்களைத் தேடி அலைய துவங்கினார். 32 வயதில், சீவக சிந்தாமணியை பதிப்பித்தார். அவர், பல்வேறு இடங்களுக்கு சென்று, சோர்ந்த போதெல்லாம், அவர் சேகரித்த நுால்களில் இருந்தே, உத்வேகம் பெறும் வழியை வைத்துஇருந்தார். இந்த மாநிலக் கல்லுாரியிலும், 16 ஆண்டுகள் தமிழ் தொண்டு செய்திருக்கிறார். இவ்வாறு, அவர் பேசினார். தமிழ் படிப்போர் தேவைபக்தி இலக்கிய ஆய்வாளர், கி.சுப்பிரமணியன் பேசியதாவது: உ.வே.சா., கும்பகோணம் கல்லுாரியில் ஆசிரிய பணிக்காக சென்றபோது, ஒரு வண்டி நிறைய புத்தகங்களை கொண்டு சென்றார். அந்த புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அயராது பதிலளித்தார். அப்போது, அவர், ஒரு லட்சம் பாடல்களை மனனம் செய்திருந்தார். தமிழ் படித்து என்ன செய்ய போகிறாய் என்ற கேள்வி, அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆனால், இனி தமிழ் படிப்போர் தான் நிறைய தேவைப்படுவர். காரணம், கல்விக்கூடங்கள் என்ற பெயரில், நாடெங்கும் மனநல சிதைவு கூடங்கள் தான் இயங்கி வருகின்றன. அவற்றுக்கான மருத்துவமனைகளாக தமிழ் படித்தோர் இருப்பர். இவ்வாறு, அவர் பேசினார். பதிப்பாசிரியர், ப.சரவணன் பேசியதாவது: இந்த நுால் ஒரு கூட்டு முயற்சி. இந்த நுாலுக்கான அத்தனை செயல்பாடுகளையும், உ.வே.சா.,வே, எனக்கு தானாக முன்வந்து நிறைவேற்றியதாக நினைக்கிறேன். உழைப்பு மட்டுமே என்னுடையது. இதற்கான வித்தினை விதைத்த, எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு, அவர் பேசினார்.

எழுதியவர் : (22-Jun-18, 7:25 pm)
பார்வை : 24

மேலே