மௌனத்தின் அடி
==================
மௌனம்பற்றிப் பேச
மேடைக்குச் சென்ற என்னை
கரகோசக் கல்லால் அடித்துக்
காயப்படுத்தினார்கள்.
௦௦
வேதனையோடு
ஒலிவாங்கியைப் பிடித்து
மௌனத்தைப் பேச
ஒலிப்பெருக்கி எதற்கேன்றேன்
நிசப்தமானது மண்டபம்.
௦௦
அந்த நிசப்தத்தில்
என்னைப்பற்றி பேச உனக்கு
வார்த்தைகளும் தேவையில்லை
என்றே தன்னுடைய சாட்டையால்
அடித்து என்னையும் சேர்த்துக்
காயப்படுத்திய மௌனத்தை
வலி தாளாமல் முனகிய
சலசலப்பால்
வழியனுப்பிவிட்டு மேடையைவிட்டு
இறங்கி வருகிறேன்.
அதுவரை மௌனமாயிருந்த
என் பாதணி ‘சரக்’ ‘சரக்’ என்ற
தன்னுடைய வார்த்தைகளால்
வீடுவரை என்னை
அடித்துக்கொண்டே வந்தது
**மெய்யன் நடராஜ்