கடவுளை தொலைத்தக் குடும்பத்தின் பசி
=======================================
புற்றைவிட்டு தலையைநீட்டி
மெல்ல மெல்ல வெளியேறுகின்றன
பாம்புகள்
0
உயிரைக் கையில் பிடித்துக்கொண்ட
தவளைகள் எலிகள் சிற்றுயிர்கள் யாவும்
தங்கள் குலதெய்வத்தைப் பிரார்த்தித்தபடி
இருப்பிடத்தைவிட்டு நகராமல்
நடக்கப்போவதை எண்ணி
அங்கலாய்த்துக் கொள்கின்றன
0
பாம்புகளைக் கொல்லக் கூடாதெனும்
அரசாங்க உத்தரவை தளர்த்தியபடி
தயார்நிலையில் பிரம்புகளை
காவலுக்கு வைத்தபடி
ஊர்மக்கள் கண்ணயர்கிறார்கள்
0
முத்தக்காரனை இழந்த வேதனையில்
முகாரி இசைத்துக் கொண்டே
சோர்ந்து போயிருந்த மகுடிகளுக்குள்
இளைப்பாறிக் கொள்கின்றன
குட்டிப்பாம்புகள்
0
தேடித்திரியாமல் எப்பாம்பையும்
விழுங்கும் மகிழ்ச்சியுடன்
பாம்புப் பண்டிகை வாரம்
கொண்டாடத் தீர்மானிக்கின்றன
கழுகுகள்.
0
சொல்லொணா துயரத்தில்
மகுடியின்றி மயங்கிக்கிடப்பதைக்
கவனிக்காத ஊரை
கழுகாய் மாறி கொத்தித்தின்னும்
அளவிற்கு பசியோடிருக்கிறது
படியளக்கும் கடவுளைத் தொலைத்தப்
பாம்பாட்டியின் குடும்பம்
௦௦
**மெய்யன் நடராஜ்