நானொரு சுடுகாட்டுப் பித்தன்
நானொரு சுடுகாட்டுப் பித்தன்...
ஏய் மனமே! என்ன சொல்கிறாய் நீ?
ஆம், நானொரு சுடுகாட்டு பித்தன்.
அங்கே வெட்டியான் வேலை பார்க்கிறேன்.
என்ன உளறுகிறாய்? முன்னப்பின்ன சுடுகாட்டைப் பார்த்தாவது வது இருப்பாயா?
அட மூடனே! மனமென்னும் எனக்கு உணர்வுண்டு.
அந்த உணர்வின் ஆணைப்படி என்னில் சுடுகாடு அமைத்தேன்.
மனசாட்சி என்ற நெருப்புக் கிடங்கைத் தோண்டி அதில் அன்பென்ற எண்ணெய் ஊற்றி கருணையென்ற தீபமிட வானுயர்ந்த சோதியாய் அக்னி சுவாலை பிரகாசிக்கிறது, அணையாத எரிமேடையாய்.
அவ்வகனிச் சுவாலையில் மனக்கழிவுகள் கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
சில நிறைவேறாத ஆசைகளும், சில பல பொல்லாத ஆசைகளும் அவ்வக்னியில் ஆகுதியாக அசுத்தம் அகற்றும் பணி முடியாது தொடர்கிறது.
மயான அமைதி என்ற அனுபவம் சிறிது சிறிதாய் இதயம் புகுந்தே முக்தியளித்திடும் தருவாய் இன்னும் நெருங்கவில்லையாதலால் சுடுகாட்டுப் பித்தன் வாழ்நாள் முழுவது சுடுகாட்டுச் சுத்தமாக, பற்றி எரிந்தாலும் அக்னிபோல் பவித்திரமாக முயற்சி செய்து கொண்டே இருப்பான் மனதின் வழி.
மனதின் வழியே வாழ்க்கையின் விதியாகும் என்று கண்ட ஞானம் மெய்படவே அமைகிறது என் வாழ்க்கை.