தேக்கிய நினைவு

நெருப்பு பற்றியெரிந்து
சுடர்பரவிய அடர்காட்டில்
பெருந்தீயின்
நடுவிலொருப் போர்,

உந்தன் நினைவுகளின்
கனத்தை என்னுள்ளே
சுமந்துகொண்டே வெப்பக்காற்றும் எனைச்சுட ஓடுகிறேன்,

மாய்ந்தெரியும் மரங்களும்
பறவைகளும் நமைக்கொல்ல
விடமனம் கொண்டு
வீழ்ந்து பிரயத்திக்க,

தெறித்தோடும் செந்தணல்
பாதையில் பரிதவிக்கும்
விலங்குகளின்
அழுகிய வாசத்தையும் அவற்றின்
எலும்புக் கூடுகளையும் காண,
குருதியோடும் ஆற்றோட்டத்தை என் இதயத்தில் உணர்ந்து,

தீமைக்குறி கண்டதால்
புத்தி பேதலித்து
தெக்கறியா வனாந்திரத்தில்,
களிறு பிளிறி
என்னுயிரைக் காவுதேட,
வாயிலைத்தேடி தோலெரிந்து
உலாவுகிறேன்

நினைவிட்டுப் பிரிந்த
கணமுதலே நான்
என்னுள் தேக்கிய
உந்தன் நினைவுகளைச்
சேர்ப்பேனென்ற
அகந்தையில்!

எழுதியவர் : தமிழினியன் (7-Jul-18, 11:21 am)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 1035

மேலே