வெந்ததோல் தேவதைகள்
என்னைப் பார்த்து
பரிதாபப் படுகிறது
உலகம்...
எனக்கு பழக்கமில்லாத
போதை அது...
அதை அனுமதிக்கவே மாட்டேன்...
உங்களின் உலகில்
ஒரு வேற்றுகிரக
வாசியாய் எனை
பார்ப்பதை
நிறுத்துங்கள்...
அந்த பார்வை
எனது கண்களுக்கு
உங்களை
அவலட்சணமானவர்களாக
காட்டுகிறது...
அமிலத்தால் அன்றொருவன்
அழித்துவிட்டுச் சென்றது
எனது உதடுகளை மட்டும்தான்...
எனது சிரிப்பு
எவரையும் எரிக்காமல்
ஏகாந்தத்துடனேயே
உயிர்ப்பித்திருக்கிறது....
நான் எனது முகத்திற்கு
முகமூடி அணிவது
வெக்கத்தால் அல்ல...
முள்ளெனக் காந்தும்
சூரியதேவனுக்கு
எனது கதி தெரியாமல்
இருக்கவே...
தெரிந்தால்...
அவன் தகித்து
உலகெரித்து உங்களை
சாந்தாகக் குழைத்து
எனக்கு முகம் சமைத்துச்
சென்றிடுவான்...
என்னைக் கண்டு
உச்சுக் கொட்டுவதை
விட்டு விட்டு
உங்களின் குழந்தைக்கு
வலியைக் கற்றுக் கொடுங்கள்...
அதன் வீரியத்தை காட்டாது
பொத்திப் பொத்தி
எவளோ வளர்த்த
மகனால்தான்
எனது முகத்தில்
பொத்தல்கள்
ஏற்பட்டது...
பாசமெனப் பெயரிட்டு
நீங்கள் அவர்களுக்கு
கொடுக்கும்
அதீத செல்லம்...
பாசமல்ல
பயங்கரவாதம்...
உங்களின் முந்தானைக்
குள்ளேயே பொத்தி பொத்தி
வளர்க்காதீர்கள்
குழந்தைகளை...
உங்கள் முலை சுரந்தப் பால்
அவர்களுக்குள் செறிக்க வேண்டும்...
அன்பை கொஞ்சம்
அதட்டலோடும்
சொல்லிக் கொடுங்கள்...
அவர்கள் மனிதர்களாவதற்குள்
மனிதத்தை அறிய வேண்டும்...
~☆~
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 🙏 💐 🎉