அறுசீர் விருத்தம்-அன்னமே என் அன்பே

கவிதை எழுதக் கொடுத்த படத்தில் அன்னப்பறவையை தூது விடும் தமயந்தி. அன்னப் பறவைச் சிலையருகே, கன்னத்தில் கைவித்த பாவனையுடன் அன்னத்தை நோக்கி எதையோ சொல்வது போல் அமைகிறது இப்படம். கவிஞனின் பார்வையில் கற்பனையாக, பாவையொருவள் அன்னப் பறவையைப் பற்று கொண்டு வளர்க்கிறாள். ஒருநாள் அன்னம் அவளை விட்டுப் பிரிந்து செல்கிறது. தினமும் அன்னம் வரும் எனக்காத்திருக்கிறாள். தனது வீட்டு வாசலில் இருக்கும் அன்னப் பறவைச் சிலையிடம் அன்பாக தன் நட்பை எடுத்துச் சொல்லி மீண்டும் வந்துவிடு என்று அன்னத்தோடு பழகிய அன்பை எடுத்துச் சொல்வதாக அமைகிறது கவிதை.

====================
அன்னமே என் அன்பே
===================

அன்னமேநீ எனது கண்ணே
..........அனுதினமும் மறவேன் உன்னை.!
என்னைநீயும் நட்பால் வென்றாய்
..........என்னகோவம் என்மேல் கண்டாய்.!
என்னைவிட்டுப் பிரிந்து சென்று
..........இருந்திடவே வாழ்வும் இல்லை.!
கன்னத்தில் கைவிரல் பற்றி
..........காத்திருப்பேன் வரவு நோக்கி.!

ஏண்டிநீயும் தவிக்க விட்டு
..........எங்கேநீ சென்றாய் அன்பே.!
ஆண்டுகளாய்க் கடந்த நட்பு
..........ஆனபின்னும் என்ன குற்றம்.!
நீண்டநேரம் முடியா நிற்க
..........நெடுநேரம் கடுக்கக் கால்கள்.!
வேண்டாமே உனக்கு வீம்பு
..........வந்துவிடு மகிழ வைக்க.!


நீரினுள்பால் பிரித்து உண்ணும்
..........நீயென்ன துயரம் கொண்டாய்.!
பாரினுள்ளே பாவை எந்தன்
..........பற்றறிய முனைய மாட்டாய்.!
ஈரியநெஞ் சுனக்கும் இல்லை
..........ஓரவஞ்சம் இனியும் வேண்டாம்.!
பீரிட்டு வருமென் துக்கம்
..........பிரிவாலே தெறிக்கும் கண்ணீர்.!

==================================

அறுசீர் விருத்தம்= காய் = தேமா/புளிமா = தேமா

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (15-Jul-18, 2:14 am)
பார்வை : 137

மேலே