கவிதைப் போட்டியில் வென்ற கவிதை

படைப்பின் அதிசயம்..!
===================

உலகம் முழுதும் உயிர்கள் படைத்தான்
உலகில் முதலாம் ஒருவனே இறைவன்.!

அண்டவுயிர்க் கெல்லாம் அறிவைக் கொடுத்து
ஆண்டுகள் பலவும் ஆயுளாய்க் கொடுத்தான்.!

இயற்கை நமக்களித்த இன்ப வாழ்க்கை
செயற்கை கலந்திடாது செலவ்ழிக்கப் பழகு.!

எத்தனை உயிர்கள் எண்ணிலா உயிர்கள்
அத்தனும் கொடுத்தான் ஆசை கொண்டே.!

அன்புடன் நடக்க அனைத்து உயிரிடம்
அன்பாய்ப் பழகும் அரிய பிறவியாம்.!

அதுதான் மனிதப் பிறவி
இதுவே நமக்கு ஈடிலா அருளே.!



குரங்கு முதல் குதிரைபோலப் பலவாக
இரக்கமிகு ஜீவியை இவ்வுலகில் காணலாம்.!

அப்பன் உதவுவார் அம்மா காப்பாளென.!
எப்பவுமே இவ்வுயிர் என்றும் வாழ்வதில்லை.!

சனனம் முதற்கொண்டு சாவு வரையில்
தனக்குதவி தன்கையில் தானேன அறியும்.!

மனிதன் போலிதற்கு மனமாசு இல்லை
தனித்தன்மை கொண்டு தானாக வாழ்ந்திடும்.!

விலங்கின வாழ்வை வைத்து மனிதனும்
உலகில் தெரிந்துலவ எத்துணையோ உளது.!

பரந்தமனம் படைத்த பகவனுமே
மரணத்தால் மனதை அறிய வைத்தானே.!

============================
நேரிசை ஆசிரியப்பா

பொருள்:: அத்தன்=இறைவன்
============================
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் எனவே குரங்குதான் மனிதனுக்கு மூலம். அதேபோல நம்முடைய மனமும் ஒரு குரங்கு போலத்தான், ஓரிடத்தில் நிலைபெறாது, நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். “மனித மனம் ஒரு குரங்கு”, என்கிற திரையிசைப் பாடல் நினைவுக்கு வருகிறதா.?

மனம் ஒரு குரங்கு..
================
மனிதனின் மூலமாம் மந்திதான் ஆகும்
மனித மனமொரு மந்தி.! - தனியாகச்
சிந்திக்கும் நம்மனது சீராக நில்லாது.!
சிந்தனை நிற்கச் சிறப்பு.!

ராமனொடு சுக்ரீவனும், அனுமனும் நண்பனானதைச் சிந்தித்தால், விலங்கும் மனிதனும் நட்புக்கு இலக்கணமாக இராமாயணத்தில் மிக உயர்வாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இது போற்றத்தக்க ஒன்று.

இராமனும் சுக்ரீவனும்
==================
மந்தியும் மாந்தரும் மாண்புமிகும் நண்பர்கள்.!
அந்தயிதி காசத்தில் அன்றைக்கே வந்தது.!
விந்தையாம் வில்ராமன் வானரரும் நண்பராம்
புந்தியில் வைத்ததைப் போற்று.!
=============================
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
=============================

கவிதைப் போட்டியின் நடுவர் உரை::
=============================

இயற்கை நமக்களித்த இன்பவாழ்வில் செயற்கைக் கலப்பைத் தவிர்த்து, மன மாசில்லாது, தன் கையே தனக்குதவி என வாழ்வும் விலங்குகள்போல் மனிதனும் புனிதனாய் வாழ வேண்டும் எனச் சாற்றியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் போற்றுகின்றேன். இக்கவிதையே அல்லாது மந்தியையும் மனிதனின் புந்தியையும் (புத்தி) ஒப்பிட்டும், மந்தியினத்தையும் அதனைத் தோழனாய் ஏற்ற சுந்தர ராமனை ஏத்தியும் மற்றுமிரு வெண்பாக்களை இயற்றியுள்ள அவருடைய கவி ஆர்வத்தையும் பாராட்டுகின்றேன்.

எனது ஏற்புரை::
=============
இந்த வாரத்தின் (09-07-18 – 15-07-18) சிறந்த கவிதையாகவும், கவிஞராகவும் தேர்ந்தெடுத்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், கவிதைக்குப் படத்தைக் கொடுத்த திருமதி ராமலஷ்மிக்கும் படக்குழுமத்தின் ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பனுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு சில பிராணிகளை நம் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதுபோல் இந்தப் பிராணிக்கு அப்பாக்கியம் கிடைக்கவில்லை, இருந்தாலும் மரியாதையாக நடத்துக்கிறோம், பழங்கள் தருகிறோம். அன்பாக நேசிக்கிறோம், ஆச்சர்யத்தோடு அதன் சேட்டையைப் பார்த்து ரசிக்கிறோம்.

இப்பிராணிகளின் ஒரு விஷேசம் என்னவென்றால், மற்ற விலங்குகள் இறந்துவிட்டால் அதன் உடல் அழுகுவதையும், அங்கேயே பலநாட்கள் கிடப்பதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் குரங்கின் இறந்த உடலை யாரும் எளிதில் காணமுடியாது. இது ஏனோ எனக்கு எப்போதும் வித்தியாசமாகவே தெரியும். நானும் பலரிடம் இது பற்றிக் கேட்டிருக்கிறேன். எவரும் இறந்த குரங்கின் உடலைப் பார்த்ததாகச் சொன்னதில்லை.

போட்டியின் வென்ற இக்கவிதையை, நாம் அன்பாக நேசிக்கும், வணங்கும் குரங்குக்கு அர்ப்பணிப்போம்.

கவிதை எழுதிய ஏனைய கவிஞர்களுக்கு நன்றி. அனைத்து வல்லமை வாசகருக்கும் நன்றி.

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (12-Jul-18, 12:03 pm)
பார்வை : 199

மேலே