வாழ்வின் அனுபவம்

======================
அனுபவம் கற்றுக் கொடுக்கும்
=அதியுயர் பாடம் போன்று
மனுகுலம் கற்றுத் தெளிய
=மண்ணிலோர் பாட முண்டோ?
மினுங்குவ தெல்லா மந்த
=மின்மினிப் பூச்சு மல்ல
வெனுமொரு உண்மைக் காண
வேண்டும னுபவப் பாடம்.
௦௦௦
பள்ளியில் படிக்கும் பாடம்
=பதவியில் அமர வைக்கும்
புள்ளியை வைத்துக் கொண்டு
=போட்டிடும் கோலம் கூட
வெள்ளிபோல் மின்னக் கூடும்
=விரும்பியே பார்க்கத் தூண்டும்
கள்ளிலே உள்ள போதை
=காணவோ குடிக்க வேண்டும்
௦௦௦
முள்ளிலே பூக்கும் ரோசா
=முறுவலும் செய்யக் கூடும்
முள்ளென ரோசா குத்தும்
=முன்னனு பவத்தைக் காண
அள்ளியே அணைக்கத் தூண்டி
=ஆசையை விதைத்தக் காதல்
எள்ளியே நகைக்குங் காலம்
=இயம்புமே அனுபவ உண்மை
௦௦௦
ஆயிரம் படிப்புப் படித்தும்
=ஆகாது வேலைக் கிங்கு
போயுன தனுபவ காலப்
=பத்திர மெடுத்து வாவென
நாயென அலைய வைக்கும்
=நடப்பது நாட்டி லுண்டு.
தீயெனில் சுடுவ தில்லை
=தீண்டதை அனுபவ மாகும்
௦௦௦
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jul-18, 10:18 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vaazhvin anupavam
பார்வை : 366

மேலே