சிரித்து வாழ வேண்டும் கவிஞர் இரா இரவி

சிரித்து வாழ வேண்டும்!



கவிஞர் இரா. இரவி.
“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிடில் எப்போதே தற்கொலை செய்திருப்பேன்” என்றார் காந்தியடிகள். நகைச்சுவை உணர்வு மிக்கவர் காந்தியடிகள். காந்தியடிகளை திட்டி ஒருவர் மடல் அனுப்பி இருந்தார். அதனைப் படித்துப்பார்த்து காந்தியடிகள் கோபம் கொள்ளவில்லை. அம்மடலை கிழித்து விட்டு, அதில் இணைத்திருந்த பின்னை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டார். இது மட்டுமே எனக்கு பயன்படும் என்றார். ஆம், சினம் காத்திட, சண்டை தகர்த்திட மனநிம்மதி கிடைத்திட உதவுவது நகைச்சுவை உணர்வு.

கல்வி அதிகாரி, பள்ளிக்கு ஆய்வுக்கு சென்று இருந்தார். ஒரு மாணவனைப் பார்த்து ஜனகனின் வில்லை உடைத்தது யார்? என்றார். நான் உடைக்கவில்லை என்று அழுதான் மாணவன். அருகிலிருந்த ஆசிரியரிடம் கேட்டார் என்ன இது? என்று. கோபி நல்லவன் உடைத்து இருக்க மாட்டான். முனியாண்டி வரவில்லை இன்று. அவன் உடைத்து இருப்பான் என்றார் ஆசிரியர்.



தலைமையாசிரியர் அறைக்குச் சென்று நடந்ததைக் கூறினார் கல்வி அதிகாரி. நான் ஓய்வு பெற இரண்டு மாதங்களே உள்ளன. அந்த ஜனகன் வில் எவ்வளவு என்று சொல்லுங்கள். நான் வாங்கித் தந்து விடுகிறேன் என்றார். சிரித்துக் கொண்டே சென்று வீட்டில் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி சிரித்தார். கடைசி வரை ஜனகனின் வில்லை உடைத்தது லட்சுமணன் என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை என்றார். உடன் மனைவி நீங்களும் தப்பா சொல்றீங்க, ஜனகனின் வில்லை உடைத்தது அனுமன் அல்லவா? என்றார். கடைசி வரை இராமன் என்பதை யாருமே சொல்லவில்லை.



சாக்ரடீஸ் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது அவரைத் திட்டிக் கொண்டே இருந்தார். அவரது மனைவி . திடீரென கோபம் அதிகமாகி மேலே இருந்து தண்ணீரை ஊற்றினார். சாக்ரடீஸ் கோபம் கொள்ளாமல் சொன்னார். இதுவரை இடி இடித்தது இப்போது மழை பொழிகின்றது என்றார்.



சைவ விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு முடித்தப்பின் சர்வர் கேட்டார். சாப்பாடு எப்படி இருந்தது என்று. இதுவரை இப்படி ஒரு முருங்கைக்காய் சாப்பிட்டதே இல்லை. சாம்பாரில் இருந்த முருங்கைக்காய் சூப்பர் என்றார். என் காதிலிருந்து தவறி விழுந்த பென்சில் அது, முருங்கைக்காய் அல்ல என்றார் சர்வர்.



அசைவ விடுதிக்கு சாப்பிடச் சென்றனர். நண்பனிடம் சொன்னான். சர்வரை கிண்டல் செய்கிறேன் பார் என்று சொல்லி விட்டு, மூளை இருக்கா? என்றான். இதற்குமுன் வந்தவர்களுக்கு எல்லாம் இருந்தது. உங்களுக்குத்தான் இல்லை. தீர்ந்து விட்டது என்றார் சர்வர்.



அமெரிக்கன் ஒருவர் கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ ஊசி ஒன்று கண்டுபிடித்துக் கொடுத்தார். அதனை ரசியனிடம் தந்தனர். அவர் அதில் சிறு துளையிட்டுத் தந்தார். அதனை இந்தியரிடம் தந்தனர். அவர் அதில் ‘MADE IN INDIA’ என்று அச்சிட்டுக் கொடுத்தார். இது நகைச்சுவை தான் என்றாலும் மைக்ரோ ஊசியில் அச்சிடுவதும் திறமை தானே.



உலக மூளைகளை ஏலமிட்டனர். அமெரிக்கா மூளை பத்தாயிரம் டாலர். ரசியன் மூளை இருபதாயிரம் டாலர். இந்தியன் மூளை ஐம்பதாயிரம் டாலர் என்றனர். ஏன் இந்திய மூளை மட்டும் விலை அதிகம் என்று கேட்டதற்கு, மற்ற மூளையெல்லாம் பயன்படுத்தப்பட்டது, இந்திய மூளை இன்னும் பயன்படுத்தப்படாதது, புதியது, அதனால் விலை அதிகம் என்றார்களாம். இது முன்பு சொன்ன நகைச்சுவை. ஆனால் இன்று இந்திய மூளை தான் உலக அளவில் வெற்றிக்கொடியை நாட்டி உள்ளது. எடுத்துக்காட்டு மாமனிதர் கலாம்..அதனால் விலை அதிகம் என்று நாம் பொருள் கொள்ளலாம்.



ஒரு மரத்தில் சின்ன மணி, பெரிய மணி என வரிசையாக மணியாக கட்டி இருந்தன. இது என்ன என்று கேட்டதற்கு, சின்னப் பொய் சொன்னால் சின்ன மணி அடிக்கும், பெரிய பொய் சொன்னால் பெரிய மணி அடிக்கும் என்றனர். ஒரு நேரம் சின்ன மணி பெரிய மணி எல்லா மணியும் டொய் .டொய் என்று அடித்ததாம். என்ன? என்று கேட்டதற்கு மரத்தின் அடியில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அதில் ஒரு கட்சி சார்புடைய தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக் கொண்டு இருந்தார்களாம்

.

குடிகாரன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் கண்ணே உனக்கு தாஜ்மஹால் கட்டவா? வசந்த மாளிகை கட்டவா? என்றான். அதெல்லாம் வேண்டாம். முதலில் உன் இடுப்பில் வேட்டியை ஒழுங்காகக் கட்டு என்றாள் மனைவி.



குடிகாரன் சிறுவனைப் போட்டு அடித்துக் கொண்டு இருந்தான். ஏன் இவனை அடிக்கிறாய்? என்று கேட்டதற்கு சூரியனுக்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அது தான் அடித்தேன் என்றான் குடிகாரன். உன் மகனுக்கும், என் மகனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை உனக்கு, உன் மகன் அங்கு இருக்கிறான். இவன் என் மகன், இவனை விடு என்றார்.



குடிகாரன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் நான் குடிக்கவே இல்லை என்று சத்தியம் செய்து விட்டு லேப்டாப் நோண்டுவது போல நடித்தான். மனைவி சொன்னால் நெ குடித்து விட்டு வந்திருக்கிறாய் என்பது நன்றாகத் தெரிகின்றது. உன் கையில் இருப்பது லேப்டாப் அல்ல, சூட்கேஸ் என்றான்.



மற்றும் ஒரு குடிகாரன் வழியில் சென்றவரை மறித்து இது சூரியானா ? சந்திரனா ? என்று கேட்டான் .எதைச் சொன்னாலும் சண்டைக்கு வருவான் என்பதை புரிந்து கொண்டு தெரியாதுங்க நான் வெளியூர் என்று சொல்லி விட்டு தப்பி ஓடினார் .



உலக வரைபடத்தில் இந்தியா எங்கு உள்ளது? என்று கேட்டார் ஆசிரியர். அதற்கு மாணவன் மாட்டேன், மாட்டேன் என்று சொன்னான். தெரியாது என்று சொல்லு, பரவாயில்லை, மாட்டேன், மாட்டேன் என்கிறாயே ஏன்? என்றார்.' நான் என் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்', என்றான் மாணவன். வகுப்பறையே சிரித்து மகிழ்ந்தது.



ஆசிரியர், மாணவன் சரியாக விடை சொல்லாததால் உனக்கு அறிவு இருக்கா? என்றார். என்னிடம் பணம் இல்லை என்றால் உங்களிடம் இருக்கா என்று கேட்பேன் யார் யார் கிட்டே எது இல்லையோ அதைத்தான் மற்றவரிடம் இருக்கா? என்று கேட்பார்கள் என்றான் மாணவன். அறிவு இருக்கா ? என்று கேட்ட ஆசிரியரும் சிரித்து விட்டார். சன்னலில் குரங்கு வந்து அமர்ந்தது. ஆசிரியர் கேட்டார். நியூ அட்மிசனா? என்று. மாணவர்கள் சொன்னார்கள் நியூ அப்பாயிண்ட்மென்ட் என்று.



ஆசிரியர், மாணவர்களுக்கு குடியின் கொடுமையை உணர்த்திட ஒரு கிளாசில் தண்ணீர் ஊற்றி அதில் புழுவைப் போட்டார். நெழிந்தது. மது உள்ள ஒரு கிளாசில் புழுவைப் போட்டார். புழு இறந்து விட்டது. இதிலிருந்து என்ன அறிகின்றாய் என்றார். குடித்தால் குடல் வெந்து நாமும் இறந்து விடுவோம் என்ற பதிலை எதிர்பார்த்தார். அதற்கு மாணவன் சொன்னான், குடித்தால் நம் வயிற்றில் உள்ள புழு, பூச்சி செத்து விடும் என்று அறிகிறேன் என்றான். வகுப்பறையே சிரித்தது.



கஞ்சாப்பெட்டி கருப்பட்டி மிகவும் கஞ்சத்தனமான ஆள். இன்று எல்லோருக்கும் என் செலவு. உணவகத்தில் சாப்பிடுங்கள் என்று நண்பர்களை அழைத்துச் சென்றார். எல்லோருக்கும் வியப்பு! சாப்பிட்டு முடித்தவுடன் காரணம் கேட்டார்கள். என் அண்ணனுக்கு லாட்டரிச் சீட்டில் இலட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது என்றான். அண்ணன் தம்பி பாசத்திற்கு நீயல்லவா எடுத்துக்காட்டு. அண்ணனுக்கு லாட்டரியில் இலட்சம் விழுந்ததற்கு நண்பர்களுக்கு விருந்து வைக்கிறாய், மிக நல்லவன் என்றனர். கொஞ்சம் பொறு. லாட்டரியில் இலட்சம் விழுந்தது உண்மை. அந்தச் சீட்டை அண்ணன் தொலைத்து விட்டான். அதற்குத்தான் இந்த விருந்து என்றான். இப்படியும் சில அண்ணன் தம்பிகள் நாட்டில் இருக்கவே செய்கின்றனர்.



மனைவி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தோசை ஊற்றிக் கொடுத்தாள். கணவன் தோசையைப் பார்த்துவிட்டு என்ன தோசை மிகவும் கருப்பாக உள்ளதே என்றான். பிறகுதான் தோசைக் கல்லைப் பார்த்தாள் மனைவி. கல்லை திருப்பிப் போட்டு தோசை ஊற்றியதை நினைத்து சிரித்தாள்.



தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே முறுக்கை சாப்பிட்டுக் கொண்டு எந்தக் கடையில் முறுக்கு வாங்கினீர்கள். முறுக்கு நல்லாவே இல்லை. கசக்குது என்றாள் மனைவி. எப்பவும் வாங்கும் கடையில் தான் வாங்கினேன். எங்கே முறுக்கைக் காட்டு என்றான் கணவன். மனைவி கையில் இருந்தது முறுக்கு அல்ல. கொசுவர்த்திச் சுருள். தொலைக்காட்சிச் தொடர் பார்க்கும் ஆர்வத்தில் முறுக்கு என்று தவறாகத் தின்று விட்டார்.



கணவன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். ரசம் எப்படி என்று கேட்டாள். ரசமே இல்லை அதிரசம் இது. ரசம் வைத்த கைகளுக்கு வைர வளையல் போடலாம் என்றான். இந்த ரசம் நான் வைக்கவில்லை, பக்கத்து வீடு, எதிரத்த வீடு என நான்கு வீட்டில் வாங்கிய ரசம் என்றாள்.



மனைவி சமையலைப் பாராட்ட வேண்டும் என்று நண்பர் சொல்லியதைக் கேட்டுக் கொண்டு, தங்கம், சப்பாத்தி சூப்பர், இப்படி ஒரு சப்பாத்தி நான் சாப்பிட்டதே இல்லை என்றா. ஏங்க நல்லாப் பாருங்க இது சப்பாத்தியா? தோசைங்க என்றாள் மனைவி. இதுக்கு நீங்க பாராட்டாமலே இருந்திருக்கலாம் என்றாள் மனைவி.



மருத்துவர் சொன்னார், அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக மாலை வாங்கி வாருங்கள் என்றார். எதற்கு என்றனர். நோயாளி பிழைத்து விட்டால் எனக்கு. இறந்து விட்டால் அவருக்கு என்றார். சிரித்து விட்டனர்.



தியேட்டருக்கும் ஆபரேசன் தியேட்டருக்கும் வேறுபாடு என்ன தெரியுமா? சீட்டு வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் செல்ல வேண்டும். ஆபரேசன் தியேட்டரில் இறந்தால் உள்ளே போய் சீட்டு வாங்க வேண்டும்.



மருத்துவர் சொன்னார், ஒரு மாத்திரையை கையில் எடுத்து இந்த மாத்திரையை மூன்று வேளைக்கு சாப்பிடுங்கள் என்றார். நோயாளி எள்ளல் சுவையுடன் ஒரே மாத்திரையை எப்படி மூன்று வேளை சாப்பிட முடியும் என்றார். மருத்துவருக்கு கோபம் வந்து விட்டது. ஒரே மாத்திரையை துப்பிட்டு துப்பிட்டு மூன்று வேளை சாப்பிடு என்றார்.



இந்த மருந்தை மூன்று வேளை இரண்டு ஸ்பூன் சாப்பிடுங்கள் என்றார் மருத்துவர். நோயாளி சொன்னார் எங்க வீட்டில் ஒரு ஸ்பூன் தான் இருக்கு டாக்டர் என்றார். மருத்துவரே சிரித்து விட்டார்.



உங்களுக்கு காய்ச்சலே இல்லையே? எதுக்கு வந்தீங்க என்றாள் நர்ஸ். நான் குரியர் தபால் கொடுக்க வந்தேன். அதை சொல்வதற்குள் தர்மா மீட்டரை நீங்கள் தான் வைத்து வீட்டீர்களே? என்றார்.



சென்னையில் சில நகைச்சுவைகள். ஏங்க இது தான் சைதாப்பேட்டையா? இல்லை இது என் தோள்பட்டை நேராக போங்க சைதாப்பேட்டை வரும்.



சென்னைப் பேருந்தில் மதுரைக்காரர் ரூபாய் நூறு தருகிறார். நடத்துனர் சில்லரை இல்லை அப்புறம் தருகிறேன் என்கிறார். மதுரைக்காரர் மெதுவாகத் தாருங்கள் என்ற பொருளில் பையக் கொடுங்க என்கிறார். 100 ரூபாய்க்காக பையவே கேடிகிறாயா? என்றார். பையா என்றால் பை அல்ல மெதுவாகக் கொடுங்கள் என்று பொருள் என்றார்.



சாப்பிட வந்தவர் வடையை பிய்த்துப் பார்த்தார். என்னங்க நூல் நூலாக வருதே என்றார் சர்வரிடம். அதற்கு சர்வர் சொன்னார். நீங்க தரும் அத்து ரூபாய்க்கு நூல் மட்டும் தான் வரும். ஊசி வேறு வருமா? என்றார். ஊசித்தான்பா இருக்கு என்றார் சாப்பிட வந்தவர்.



போன வருடம் தீபாவளிக்கு தந்த அல்வா மாதிரியே கொடுங்க தம்பி. கவலைப்படாதீங்க அதே அல்வாவே இன்னும் இருக்கு தாரேன் என்றார்.



இப்படி தினந்தோரும் நம் வாழ்வில் சந்திக்கும் ஆயிரம் ஆயிரம் நகைச்சுவைகளை ரசித்து வாழ்ந்தால் கவலை கொள்ளத் தேவை இல்லை. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வாழ்வில் கோபம் என்பதை அகற்றி சிரித்து வாழ வேண்டும்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (22-Jul-18, 7:28 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 241

மேலே