ஆங்கிலமும் இந்தியாவும்

அன்புள்ள ஜெமோ,

என் பெயர் ஸ்வேதா. கோவையில் பிறந்து வளர்ந்தவள். பொறியியல் முடித்துவிட்டு மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் IT வாசியாக உள்ளேன். புத்தகங்களின் மேல் உள்ள ஈர்ப்பால் தொலைதூர கல்வி வழியே MA ஆங்கில இலக்கியம் பயின்றேன். பதினான்கு வயது வரையில் எனிட் ப்ளிட்டன், ரோல்டு டால், ஜெ கே ரெளலிங், ஜேன் ஆஸ்டன், ப்ராண்டே சகோதரிகள் என இங்கிலாந்து எழுத்தாளர்களின் வாயிலாகவே இலக்கியம் கண்டறிந்தேன். என் பதினைந்து வயதில் ஒரு நாள், ஆங்கில பேராசிரியையான என் அம்மா வங்காள பூர்விகம் கொண்ட எழுத்தாளர் அமிதாவ் கோஷின் “Sea of Poppies” நூலை ஆய்விற்காக வீட்டிற்கு எடுத்து வந்தார். அந்த நூல் என் இலக்கிய பார்வையை முற்றிலுமாக மாற்றியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய- பர்மா- சீனா வில் அபினிற்காக (Opium) நடந்த வர்த்தக யுத்தத்தை பின்னணியாக கொண்ட அந்த ஆங்கில புனைவு எனக்கு ஓர் இனம்புரியாத உணர்வையளித்தது. அதன் பின்னர் நான் படிக்க தேர்ந்தெடுத்த நூல்கள் (ஆங்கிலம்) பெரும்பாலும் இந்தியர் அல்லது இந்திய பூர்வீகம் கொண்ட எழுத்தாளர்களிள் படைப்புகளாகவே அமைந்தன. நான் என்னையறிமாலே ஒரு சுதேசி வாசகியானேன். அரவிந்த் அடிகா, அனிதா தேசாய், சல்மான் ருஷ்டீ, ஜும்பா லஹிரி, சித்ரா பேனர்ஜி திவகுரினி, அனிதா நாயர் – இந்திய சூழலை மையம் கொண்ட, அந்நிய மொழியில் மண் மணம் மாறாமல் அமைந்த அவர்களின் எழுத்து என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.

என் இலக்கிய பயணம் இவ்வாறு சலனமில்லாமல் நகர, சென்ற ஆண்டு நடந்த ஒரு சம்பவம் என் பாதையை மீண்டும் மாற்றியமைத்தது. பெங்களூரு இலக்கிய விழா (Bengaluru Literary Fest) 2017 டிசெம்பரில் ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நானும் என்னை போலவே வாசிக்கும் என் தோழி ஹரிணியும் ராமச்சந்திர குஹா, கிரிஷ் கர்ணட், அனில் கும்ப்லே போன்ற பிரபலங்களை காண; முடிந்தால் அடித்துப்பிடித்து ஒரு கையெழுத்தையாவது வாங்க ஆவலுடன் சென்றோம். பெருமாள் முருகன் தொகுத்த “சாதியும் நானும்” நூலை, “Caste and I” என்ற பெயரில் தமிழ்/ஆங்கில எழுத்தாளார் அம்பை அவர்கள் மொழிப்பெயர்த்திருந்தார். நூல் அறிமுக நிகழ்வு நிறைவடைந்து அம்பை மேடையிறங்கி செல்கையில் அவரிடம் இருவரும் ஆசிர்வாதம் பெற்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இதற்கு முன் அவருடைய நூல்களை வாசிக்காத காரணத்தால் அவரிடம் எங்கள் பெயர், ஊர் இன்ன என்ற அறிமுகம் மட்டுமே அளித்தோம். அவரும் கோவையில் தன்னுடைய சொந்தகள் இருப்பதாக கூறி புன்சிரிப்புடன் விடைப்பெற்றார். நானும் என் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம் – ‘என்ன படித்து என்ன பயன்? தாய்மொழியில் எழுதும் எழுத்தாளரை அடையாளம் கூட காணமுடியாமல் நிற்கிறோமே!’ என்பது போல.

அந்நேரம், சிறு வயதில் அந்நியன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் “கடவுளே! நான் இனி எந்த தப்பும் செய்ய மாட்டேன். நரகத்துக்கெல்லாம் அனுப்பி விடாதே!” என்று எழுந்த குற்றவுணர்ச்சி அடுத்த பரிணாமத்திற்கு சென்றதாகத் தோன்றியது. தமிழில் பொன்னியின் செல்வன், ஜெயகாந்தன் சிறுகதைகள், ஆனந்த விகடனில் பிரசுரமாகிய நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள், தங்களுடைய “அறம்” என விரல் விட்டு எண்ண கூடிய அளவே அதுவரை படித்திருந்தேன். இலக்கியம் ஒரு மொழிக்கு உரியதன்று என மனதறியும். எனினும் வாடகை மொழியில் புலமை பெற்று தாய் மொழியை தவற விட்டு விட்டோமே என்ற எண்ணம் வாட்டிய நிலையில் நல்லதொரு நட்பு வட்டம் உருவாகியது.

உங்கள் இலக்கிய வாசகர் கூட்டங்களால் புத்துயிர் பெற்ற என் அலுவலகத் தோழர் GSSV நவின் எனக்கு தங்களுடைய “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” நூலை பரிந்துரைச்செய்தார். என் அனைத்து வேண்டுதல்களையும் அந்நூல் பூர்த்தி செய்தது. எங்கேத் தொடங்க வேண்டும் என தெளிவாக அந்நூலும், தொடர்ந்து தங்கள் வலைதளப் பதிவுகளும் வழிக்காட்டுகின்றன. இவ்வருடம் தொடங்கி ஆங்கில நாவல்களில் எவ்வளவு நாட்டம் செலுத்தினேனோ அதே அளவு நாட்டம் தமிழிலும் செலுத்த விழைகிறேன். விசும்பு, ரப்பர், அம்மா வந்தாள், திருச்சாழல், அம்புப்படுக்கை என என் பயணம் இனிதே தொடங்கிற்று. தமிழை விட ஆங்கிலத்தில் எழுத்துத் திறன் அதிகம் கொண்ட என்னை போன்ற தமிழிலக்கிய முனைப்புள்ள வாசகர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன? தமிழ் இலக்கியச்சூழலில் எங்கள் பங்களிப்பு எத்தகைய வண்ணம் இருக்கலாம்?

உங்கள் வலைதளத்தில் இந்திய எழுத்தாளர்கள் பற்றிய விவாதம் எழுகையில் பெரும்பாலும் இந்திய மொழிகளில் எழுதுவோரின் படைப்புகள் விவாதிக்கபடுகின்றன. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பற்றி தங்கள் கருத்து யாது?

தங்கள் வழிக்காட்டுதலுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஸ்வேதா


ஜெ மின்னஞ்சல்

எழுதியவர் : (28-Jul-18, 7:55 pm)
பார்வை : 121

சிறந்த கட்டுரைகள்

மேலே