புன்னகைப் பூவே---பாடல்---

பல்லவி :

புன்னகைப் பூவே - புது
பூக்களின் தீவே
சன்னலில் வீசும் இளந் தென்றலில் வருகின்றாய்...

சந்தனத் தேரே - குளிர்
மார்கழித் தீயை
அம்புகள் பேசும் விழிப் பார்வையில் தருகின்றாய்...

புன்னகைப் பூவே...


சரணம் 1 :

சித்திரை நிலவாய் என் சிந்தையில் நுழைந்து
சித்திரம் வரைகின்றாய் நித்திரைப் பறிக்கின்றாய்...
சிற்றிதழ் அழகால் என் நெஞ்சினைக் குடைந்து
உணர்வினில் கரைகின்றாய் உயிரினைக் குடிக்கின்றாய்...

மானின் விழியாலே பரிமாறும் கடிதங்கள்
காதல் கவியாக மொழிமாற்றும் இதயங்கள்...
சாயும் நிழலாலே எனை மோதும் நிமிடங்கள்
தூங்கும் சிலையாக உடல் வாழும் தருணங்கள்...

கம்பன் வியக்கும் காவியமோ?... - நீ
கண்ணன் மயங்கும் ஓவியமோ?... (2)

பொன் விரல் தீண்டினால் என் உடல் பூக்கிறேன்
கருங்குழல் சேரதான் என் உயிர் கோர்க்கிறேன்...

புன்னகைப் பூவே...


சரணம் 2 :

செந்தமிழ் மொழியால் வெண் பூக்களில் வடியும்
செந்தேனைக் கொடுக்கின்றாய் உன் வசம் இழுக்கின்றாய்...
சிந்திடும் மழையாய் முக்கனியினில் கடையும்
அமுதினைப் பொழிகின்றாய் அன்பினில் வழிகின்றாய்...

பாத கொலுசாலே பிறந்தோடும் சந்தங்கள்
வீணை நரம்பாக எனை மீட்டும் சொந்தங்கள்...
மின்னல் ஒளிபோல முகம் தோன்றும் நாணங்கள்
பாயும் நதியாக மனம் தாக்கும் பாணங்கள்...

காற்றில் அசையும் நூலினமோ?... - நீ
மண்ணில் அழகின் நூலகமோ?... (2)

கண் இமை மூடியே ஒரு வரம் கேட்கிறேன்
கருவிழி போல தான் உன் உயிர் காக்கிறேன்...

புன்னகைப் பூவே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 1:46 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 1167

மேலே