சத்தியத் தாயின் தவமே
பல்லாண்டு காலங்களாய்
பவித்திர பூமி சொல்லும்
பழங்கதையால்ல இது...
இன்னும் கண்ணீர்
காயவில்லை - அந்தக்
காவியத்தாயின் சபதம்
எங்கெங்கோ பிறக்கின்ற
ஒவ்வொரு போர்வாளும்
தன்னுயிர் தந்துதானே
தரணியில் நிலைக்கிறது...
யாரந்தத்தாய்...!
கருப்பை கிழித்தபடி
கதறுகின்ற குழந்தைகையில்
கனவுகளைக் கொடுத்தவள்...
மனக்குடிசைக்குள் கோவில்கட்டி
தன குலவிளக்கை
மருத்துவம் பயில அனுப்பியவன்
அவள்தான்...
இன்றைய இளையதலைமுறையின்
இலக்கணம்...
புரட்சி பூப்பதற்கு - இந்த
பூமியில்
விழுந்த விதை...!
அடிப்படை ஆசைகூடத்
துறந்து - தன்
மக்களின்
மருத்துவக் கனவை மட்டும்
சுமந்து...
இன்று...
மாரடித்து அழுகிறாள்
அன்பு மக்களின்
கல்லறையில்...
அவளின் கனவுதான் என்ன....?
கண்ணுக்குப் புலப்படாத
கற்பனையோ - அவள்
காரணமில்லாமல் மரணிக்க...
நீதி கேட்டாலே
அந்த வீரத்தாய்
நீங்கள் அறிவீரோ...?
நீதி தேவதையே
இனியும் உனக்கெதுக்கு
கறுப்புக் கவசம்
சேரியில் பூத்த
செந்தாமரை ஒன்றை
வாரியெடுத்ததே உனது வார்த்தை
நல்ல மதிப்பெண் பெற்ற
நல்ல மதிப் பெண்ணவள்
நீட்ரென்ற கூர்வாளை
நீட்டிச் சாய்த்திரே...!
உறவின்றி போனாலும்
உனதுமகள்
உயிர்போன நேரத்தில்
உனது கருப்பை பிறக்காத
காளையர்கள்
நெருப்புக்குளியல் குளித்தோமே
எமதுடன் பிறப்பின்
உடல் தீயில்...
அவளின்
சாம்பலை அள்ளியள்ளி
சத்தியம் செய்கிறோம்
தாயே...!
அதற்காகவே இன்று
யுத்தங்கள் செய்கிறோம்...
அடுத்துவரும் தலைமுறைகள்
உமது வரலாற்றை
எடுத்துவரும் தாயே...!
அப்பொழுதாவது - அந்த
விண்ணிலே விண்மீனை
விதைத்தவள் நீயென்று
மண்ணில் உன் மைந்தர்கள்
மறவாமல் இருக்கட்டும்.