சங்கமேஸ்வரியின் லட்சியம்

சங்கமேஸ்வரியின் லட்சியம்

அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்ப்பா, சொன்ன மகளின் தலையை தடவி “ஏன் சாமி” இப்படி சொல்றே? மனதில் வந்திருந்த ஏமாற்றம் தெரியாமல் மகளிடம் அன்புடன் கேட்டான் அண்ணாமலை. அப்பா, அம்மாவும் இல்லை, நீ மட்டும் தனியா இருக்கறே, இது வரைக்கும் நான் இருந்ததினாலே நீ நிம்மதியாய் இருந்தே. இப்ப நான் உன்னைய விட்டுட்டு போயிட்டன்னா அப்ப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே?
மகளின் தலையை மெல்ல தட்டி ஏம்மா நாம என்ன பெரிய பங்களாவிலயா இருக்கோம் இந்த ரோட்டு ஓர குடிசையிலதான் இருக்கோம். நீ நாலு தெரு தள்ளி இன்னொரு குடிசைக்குத்தான போகப்போறே, அப்பப்ப என்னைய வந்து பாத்துக்கடா அது போதும்., நான் சமாளிச்சுக்குவேன்.
அண்ணாமலையும், அவன் பொண்ணும் இந்த சென்னை கார்ப்பரேசன் தெருவில் குடிசைப் பகுதியில் தங்கியிருந்தனர். அண்ணாமலையும், அவன் மனைவியும் கிராமத்தை விட்டு பஞ்சம் பிழைக்க இந்த சென்னை மாநகரத்துக்கு வந்து அவர்களால் சம்பாதிக்க முடிந்தது இந்த ஒரு குடிசைதான். அதற்குள்ளாகவே அவனுக்கு ஒரு பெண் பிறந்து அவளுக்கு அவன் ஊர் அம்மனின் பேரான சங்கமேஸ்வரி என பேர் வைத்து கார்ப்பரேசன் ஸ்கூலில் ஐந்தாவது படித்துக்கொண்டிருக்கும்போது அண்ணாமலையின் மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டாள்.
அதற்கு பின் சங்கமேஸ்வரி அவள் அப்பாவின் தேவைகளை கவனிக்க படிப்பை தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது. அண்ணாமலை எந்த வேலையானாலும் செய்ய போவான். அந்த மாபெரும் நகர்த்தில் கட்டட வேலைக்கும், தோட்ட வேலைக்கும் இவனுக்கு அழைப்புகள் வர வருமானமும் வந்து அவனும், மகள் சங்கமேஸ்வரியும் ஓரளவு நல்லபடியாகவே வாழ முடிந்தது. சங்கமேஸ்வரிக்குத்தான் ஒரே குறை. நாலு எழுத்து படிக்க முடியவில்லையே, என்று மனதுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பாள்.
அண்ணாமலைக்கு அவளின் ஏக்கங்கள் புரிபடாமலே இருந்தது. அவனை பொருத்தவரை உழைத்து களைத்து வரும்போது சமைத்து வைத்திருந்தால் சாப்பிட்டு விட்டு நன்றாக உறங்கி போவான். ஆனால் அவ்வப்போது மகளுக்கு திண்பண்டங்கள் வாங்கி தருவதோடு தன் கடமையை முடித்துக்கொள்வான். எப்பொழுதாவது தன் மகளை பக்கத்து குடிசை பெண்களோடு சினிமா பார்க்க அனுப்பி வைப்பான். அவனுக்கும் மனதில் பாசம் உண்டு, ஆனால் எப்படி எதை வைத்து வெளிப்படுத்துவது என்பதுதான் அவனுக்கு புரியவில்லை. ஒரு நாளாவது உனக்கு என்ன ஆசை? என்று வாய் விட்டு கேட்டிருந்தால், அவள் தன் படிப்பாசையை அவனிடம் கொட்டியிருப்பாள். அவனும் கேட்கவிலை, அவளுக்கும் அதை உணர்த்த தெரியவில்லை.
இந்த மாப்பிள்ளை விசயம் கூட அவன் கூட கட்டட வேலை செய்யும் மாரியப்பன்தான் இந்த யோசனையையும், அவனே தன் குடிசைக்கு பக்கத்தில் இருக்கும் குடும்பத்தில் ஒரு பையன் இருப்பதாகவும் அதையே பேசிடலாம் என முடிவு செய்து கல்யாணத்திற்கு நாள் குறித்து வைக்கவும் ஏற்பாடு செய்து விட்டான். இப்பொழுது இவளின் பேச்சு இவனுக்கு ஏமாற்றத்தை தோற்றுவித்தது என்றாலும் சரியாகி விடும் என்று தோன்றியது. எதற்கும் நண்பனிடம் சொல்லி வைக்கலாம் என்று சொல்லி வைத்தான்.
மாரியப்பன் சங்கமேஸ்வரியிடம் வந்து ஏம்மா இப்படி சொல்றே? நீ உங்கப்பனை பத்தி கவலை படாதே நாங்க எல்லாம் பாத்துக்கறோம், சமாதானப்படுத்தினான். உண்மையில் சங்கமேஸ்வரி கவலைப்பட்டது, அதற்கல்ல, தனக்கு வரும் புருசனும் கட்டட வேலைக்கு செல்பவனாக இருக்கிறானே என்ற கவலைதான். அவனாவது நாலெழுத்து படித்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமே, என்ற நினைப்புதான் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதை சொன்னால் அப்பன் மனம் சங்கடப்படும், என்றுதான் கல்யாணமே வேண்டாமென்று சொன்னாள். அதற்கே ஆளாளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
கல்யாணம் முடிந்து விட்ட்து. அவளது வாழ்க்கையில் எந்த முன்னேற்றமுமில்லை. அப்பனுக்கு சோறாக்கி போட்டது போல கணவனுக்கு சமைத்து போட்டுக்கொண்டிருந்தாள். அவ்வளவுதான், அப்பனாவது எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்ததால் வீடு அமைதியாக இருக்கும். இவனோ தினமும் குடிதான், வீட்டில் ஒரே ரகளை, அவளுக்கு ஒரு மாதத்திலேயே வெறுத்து போய் விட்டது. தகப்பனிடம் புகார் சொன்னால் எடுபடாது என்பது தெரியும். நேராக மாரியப்பனிடம் சென்றாள், நீங்கள் பாத்து வச்ச கல்யாணம்தானே, இவன் செய்யும் அட்டகாசத்துக்கு ஒரு முடிவு சொல்லுங்கள், என்று கேட்கவும், மாரியப்பன் இவள் புருசனிடம் சென்று நியாயம் கேட்டான். அவன் மாரியப்பனை வாயில் வந்தபடி பேசி விட்டான். அவன் மனம் வெறுத்து அம்மா என்னை மன்னிச்சுடு, நான் இவன் இப்படி இருப்பான்னு நினைக்கவே இல்லை. வேற உதவி வேணுமனாலும் எங்கிட்ட கேளும்மா என்றான்.
இப்படியே ஆறு மாதங்கள் ஓடியிருக்கும், ஒரு நாள் சங்கமேஸ்வரியின் கணவன் குடிசைக்கு போதையில் வந்தவன் சங்கமேஸ்வரியை காணாமல் திகைத்து நின்றான். கூப்பிட்டு பார்த்தான். அந்த குடிசையில் சங்கமேஸ்வரியின் எந்த பொருட்களும் காணவில்லை. நேரே அண்ணாமலையின் குடிசைக்கு போய் வாசலில் நின்று கத்தினான். வெளியே வந்த அண்ணாமலை என்னவென்று விசாரிக்க சங்கமேஸ்கவரி இங்கு வந்தாளா? கேட்டான். அவள் இங்கே வரவேயில்லை, சங்கமேஸ்வரிக்கு என்னாச்சு? பதற்றத்துடன் கேட்க உன் ஓடுகாலி மகள் எங்கே போனாளோ, என்று வசவுகளாக பேச ஆரம்பித்தான், போதை குறைய குறைய திரும்பி குடிசைக்கு நடக்க ஆரம்பித்தான்.
அதன் பின் சங்கமேஸ்வரியை பார்க்கவே முடியவில்லை, அவள் கணவன் தற்பொழுது வேறொரு பெண்ணை மணந்து கொண்டு விட்டான். மனமொடிந்து போன அண்ணாமலையை மாரியப்பன்தான் தேற்றினான்.
ஊராரை பொருத்தவரை சங்கமேஸ்வரி ஓடிப்போனவள், சங்கமேஸ்வரியோ தற்பொழுது கோயமுத்தூரிலிலுள்ள ஒரு பள்ளியில் ஆயாவாகவும், இரவு நேர படிப்பகத்தில் படித்துக்கொண்டு எட்டாவது வகுப்புக்கான தேர்வை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறாள்.
இதற்கான புண்ணியம் மாரியப்பனைத்தான் போய் சேரும். தான் வேலை செய்து கொண்டிருந்த முதலாளியிடம் சங்கமேஸ்வரியை பற்றி சொல்லி அவளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்தவன், உன் தகப்பனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதி மொழியும் கொடுத்திருக்கிறான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Aug-18, 10:59 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 156

மேலே