ஒரு தாசியின் நியாய கண்ணாடி

தாசி
கல்யாண சந்தையில் விலைபோகா மகள்
கட்டில் சந்தையில் விலைமகள்..

தாசி
தேவனும் வேஷமிட்டு
உன்னிடம் வந்ததாலோ
"தேவதாசி " யானாயோ?..

தாசி
வயிற்றுப் பசி யார
உடல் பசி யாற்றுபவளோ?
பள்ளி செல்ல வழியின்றி
வழி தவறி பல்லி சென்றவளோ..?

குடிசையின் கெளரவம் காக்க
பல குடிசைக்குள் போனவளோ ?

குடும்ப விளக்கு சுடர் விட
பல அறை விளக்கை அணைத்தவளோ?

புருவ மையிட்டு
துருவம் தொலைத்தவளோ ?

உடற்சூடு தணியாமல்
மனச்சூடு கொண்ட
பல குடும்ப தலைவனின்
குலம் காத்த குலதெய்வமோ ?

எவ் வனுபவ மேனிக்கும்
நீ புதியவளே..!
எப் புதிய மேனிக்கும்
உன்னால் அனுபவமே..!

நீ தாளிட்டு கொண்டது
தங்கைக்கு தாலிக்கயிறு ஆனதோ ?

பிணி என்றாலும் துணிந்தாய்..
அரை மனதாய் அம்மணமானாய்..

நட்பு காதல் உனக்கும் உண்டோ ?
அவர்களும் உன்னை தாசியாய் பார்ப்பதுண்டோ ??

உன் முகவரி தேடி
பலர் முகவரி தொலைந்தது..

உன் முகவரியால்
பலர் முகமூடியும் கிழிந்தது!

உன்னை நாடும் ஆண்
ராமனென்றால்
நீயும் கண்ணகியே !!

எழுதியவர் : குணா (21-Sep-18, 10:19 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 49

மேலே