பெண்ணும் பென்னும்

இவளை தமிழில் பெண் என்று
அழைக்கிறோம்
இதனை ஆங்கிலத்தில் பென் என்று
அழைக்கிறோம்

இருவருமே பிறர் தலை நிமிர
தன் தலை குனிபவர்கள்
இவள் தாலிக்கு
இது தாளுக்கு

இருவருக்கும் மை தேவை
இவளுக்கோ கண் மை
இதற்கோ பேனா மை

துணையின் கரம் பிடித்தே
இருவரின் வாழ்க்கையும் நகர்கிறது

பேனாமை குறைந்தால்
இருவரும் அழிகின்றனர்

இருவருமே ஆண்களின் நெஞ்சில்
இருப்பவர்கள்
பயன்படாத பொது இருவருமே
தூக்கி எறியப்படுகிறார்கள்

குழந்தை வளர்ந்து ஆகிறது பெண்சிலை
பேனாவின் குழந்தைதான்
என்று மழலையிடம் கொடுப்பது
பென்சிலை

அன்று அருக்காணி என்று அழைக்கப்பட்டவள்
அன்று எழுத்தாணி என்று
அழைக்கப்பட்டது

இருவரும் பிறர் எண்ணங்களை
பிரதிபலிக்க காட்டயப் படுத்தப்படுகின்றனர்

இருவரும் வாய் இருந்தும்
சமூகத்தில் ஊமைகளே
ஆண்களின் கைப் பாவைகளே

இவள் நா பா நா
இதன் நா பேனா

இவள் கழுத்து தாழ குனிபவள்
இதன் எழுத்து வாழ குனிகிறது

வறுமை என்றால் இவளும்
வரும் மை நின்றால் இதுவும்
குப்பையிலே வீசப்படுவர்

பெருமை என்றால் இவளும்
பெரும் மை என்றால் இதுவும்
நல்ல பெண் என்று பேசப்படுவர்

வயிறு கர்பம் அடைந்தால்தான் இருவருக்குமே மதிப்பு

இருவரும் வீட்டிற்குள்
மூடியே வைக்கப்படுகின்றனர்

இருவருமே பூ தான்
முள் இருப்பதால்

இவள் இதழ்களால் படைப்பவள்
இது இதழ்களைப் படைப்பது

பேனா எழுத்தால் வாழ்கிறது
இவள் எழுந்தாலும் வாழ முடிவதில்லை

கவிஞர் புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (24-Sep-18, 2:47 pm)
பார்வை : 89

மேலே