வானவில் ஊஞ்சலும் வண்ணத்துப்பூச்சிக் கனவுகளும்

===============================

பேரூந்து கட்டணங்களையும்
வாகன நெரிசல்களையும்
பொருட்படுத்தாத நடை மூலம்
நகரின் எல்லா இடங்களையும்
சுற்றிப் பார்க்கும் இவர்களை
நகரம் பார்ப்பதாய் இல்லை.
*
வேலை காலியில்லை என்ற
வாசகத்தை வாசிப்பதற்காக
நாயாய் அலைகையில்
தெருவோர குழாய் நீருடன்
பேரூந்து நிழற்குடைக்குள்
இலவச ஆசுவாசம் கொள்ளும்
இவர்களில் எவருக்கும்
விசுவாசம் இருப்பதில்லை...
*
குடற்பாம்பைக்
கொத்திக்கொத்தித்
தின்னும் பசிக்கழுகு.
**
வாங்கிய காலம்தொட்டு
நிறம் மாறி மாறியே
சுயரூபம் மறந்துவிட்ட
அந்த ஒரு சோடி
சட்டை, காற்சட்டை
மரண வாக்குமூலத்தை
எழுதிவிட்டு மரணிக்கத்
தயாராகிவிட்டிருக்கும் .
**
என்ன பாவம் செய்தேனோ
இவன் காலுக்கு பாதணியானேன்
என்று இனி தேய்வதற்கு
முடியாத பாதணி அழுதிருக்கும்
**
வியர்வை படிந்து அழுக்கான
சான்றிதழ்கள் அடங்கிய கோப்பின்
ஓரங்கள் கைரேகைப் பட்டே
மாய்ந்திருக்கும்
**
விழித்திரையின் உட்புரத்தில்
கடன்காரனின் அழகிய முகம்
கோரமாய் கொல்ல வரும்
**
வறுமைக் கொடியில்
காயப்போட்ட எதிர்பார்ப்புத் துணியில்
எப்போதும்போல ஏமாற்ற மழைபெய்து
நனைத்திருக்கும்
**
மண்வெட்டிகளை சிந்திய
உதிரம் கொடுத்து வாங்கிய
பட்டங்களில் ஒட்டாத
கிராமிய மணம்
நகரத்தின் அழுக்குகளை சுமந்த
நரகத்தின் துர்மணமாய் எஞ்சுகின்ற
போராட்டத்தில் ஒவ்வொரு விடியலும்
வழங்கும் நம்பிக்கையில்
சுழலும் உயிரின் சக்கரம்
*
வயல்களை பட்டினிபோட்டுவிட்டு
வசதிகளை நாடிச் செல்லும்
வாலிபங்களுக்கு தண்டனையாய்
பட்டினியை பரிசளிக்கும்
வேலையில்லாத் திண்டாட்டத்தில்
வீதிகளில் வீழ்ந்து விட்ட
கிராமத்து வீணைகள்
நகரத்துக் குப்பைகளாய் நிரம்பிக்கிடக்கிறது
**
பந்தயமில்லாமல் ஓடும்
வாழ்க்கை குதிரைக்கு இலக்கு
வெற்றியல்ல இப்போதைக்கு
வயிற்றுப் பசிக்கு ஒரு பிடி
சோறு என்ற நிலையில்
பசியின் மயக்கத்தில் உறங்கிப்போகும்
இவரது கனவுகளில் மட்டும் என்றும்
வானவில் ஊஞ்சலில்
வண்ணத்துப்பூச்சியாய் ஆடும்
வண்ணங்களின் வண்ணங்கள்..
**
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Oct-18, 2:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 56

மேலே