நான் ரசிக்கும் அவள்

அப்பேருந்தின் காலதாமதம்
என் தவத்திற்கு
கடவுளின் வரம்
என்னவளே உனை ரசிக்க.

அவள்
மேகத்திரள்களின் மோகன
ஒளிக்கீற்று.
பகலவன் ஆளுகையில்
பளிச்சிடும் நிலா.

என் விழிபேசும்
மொழிகளுக்கு மறுப்புரைக்கும்
உன் காதணியே
உந்தன் உற்ற தோழி.
ஆகையாலே நித்தம்
உன் ஆடையின் நிறமேற்கும்
சலுகை போலும் அவைகளுக்கு.

உன் சொல்கேளா காதோரகேசம்,
உன் கன்னந்தனை முத்தமிட
நான் ஏவிய கரிய தூதுவன்.
உன் விரல்களால் தண்டித்து
சிறை செய்கிறாய் செவிமடலில்.
மீண்டும் படையெடுப்பான்
என் பார்வை படும் போதெல்லாம்.

யாதின் வடிவமென்று
சிந்தைதனை சிதறடிக்கும்
முகிழ்களின்றி.
கண்ணடித்து கவனந்தனை
கவரும் விண்மீன்களுமின்றி,
என்றும் முழுநில்வாய்
நான் காணும் வண்ணநிலாக்கள்
அவள் நெற்றித் திலகம்.

கருப்பு வெள்ளை மலரினில்
தேனருந்தும் வண்ணத்துப்பூச்சி
அம்மலர்களைக் காக்கும்
அரிய காட்சி
அவள் இமை விழிகளில்.

படைத்தவன் இட்ட
திருஷ்டி பொட்டு
உன் உதட்டோர மச்சம்.
அது போதாதென்று
கடைவிழிதனில் நீ சூடும் கருமைப்புள்ளி.
என் ரசிப்புக்கு முற்றுப்புள்ளி.

உன் புருவந்தனை கவணாக்கி
உன் விழிவீசும் கூரிய பார்வையே
உன் அனுமதியின்றி
உன் அழகினை ரசித்தமைக்கு
உன் தண்டனையாய் எனக்கு.

எழுதியவர் : கிருபா சாரதி (18-Oct-18, 11:51 am)
சேர்த்தது : கிருபா சாரதி
Tanglish : naan rasikkum aval
பார்வை : 181

மேலே