இன்றைய மிச்சம் ஒருநாள்

துளித்துளியாய் பருகியது
துயிலினை துயரம்.
தனிமைப்பெருவெளியில்
செவிக்குள் கேட்கும்
ஆழியோசையாய் மரண ஓலம்.
விடியலின் தடம் நோக்கிய
புதிய கிழக்குகள்
வெட்டிப்பிளக்கப்பட்டன.
வெறிக்கும் அச்சத்தில்
பதறிப்பாயும் வாழ்வில்
நாய்வாலாய் பிழைப்புகள்.
பசித்த கனவுகளில்
குமட்டும் அவமானம்.
நம்பும் மனதை அறைந்து கொல்லும்
பிம்பமற்ற சூழ்ச்சிகள்.
சாபம் பூத்த மணித்துளிகளில்
விஷம் நிரப்பும் துரோகம்.
வாட்டி வதைத்திடும்
கொடுக்கும் அலகும்
உயிர் அருந்தும் அமிலமாய்.
பேசிப்போகும் பிசாசுகள்
ஒளிந்து பார்க்கும்
கந்தல் இரவுகளின் மாதவிடாய்.
பகலைத்திருகிய இரவில்
கந்தகக்கனவுகள்
சாம்பலோடு அலைகிறது
தெருவிலிருந்தும் ஊரிலிருந்தும்.
ஊர்ந்து போகும் வன்மத்தில்
நொடிகளோடு நொடிகளாய்
ஒரு முழம் கயிறும்
அரை முழம் நம்பிக்கையும்
இருட்டின் முதுகில் நானும்…



நன்றி ..
Posted in இலக்கியச் சாரல்
Posted on September 9, 2018 by Postadmin-Suhi

எழுதியவர் : ஸ்பரிசன் (24-Oct-18, 12:58 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 67

மேலே