அய்யா வல்லிக்கண்ணன் அவர்களின் அணிந்துரை

டாக்டர் ஆ.ச கந்தன் என்கின்ற நான் 2000 ஆம் ஆண்டில் நையாண்டி மேளம் என்ற கவிதை நூலை வெளியீடு செய்தேன் . புதுக்கவிதை எழுதுபவர்களுக்கு வழிகாட்டியாகவும் , முன்னோடிகளை அறிமுகம் செய்வதுமான புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலைப் படைத்த தமிழறிஞர் வல்லிக் கண்ணன் அவர்களிடமிருந்து அணிந்துரை பெற்றது எனது பேறு என்று கருதுகிறேன் .இதை இங்கே பதிவு செய்வதில் பெருமைப்படுகிறேன்





அணிந்துரை

உள்ளத்தில் உள்ளது கவிதை: உண்மை தெரிந்து சொல்வது கவிதை . இப்படி ஒரு கவிஞர் சொல்லியிருக்கிறார்

ஊருக்கு நல்லது சொல்வேன்; உண்மை தெரிந்தது சொல்வேன் என்று நாவலித்தார் மகாகவி பாரதியார்

இயற்கை அழகுகளையும் வாழ்வின் வளங்களையும் வனப்புகளையும் வியந்து பாடுவது தான் கவிதை என்று எண்ணிச் செயல்புரிவோர் பலர்

இயற்கை அழகுகளையும் வாழ்க்கைச் சிறப்புகளையும் மனிதரின் மாண்புகளையும் மட்டுமே
பாடிப்புகழ்ந்து கொண்டிருப்பது கவிதையின் இயல்பு ஆகிவிடாது.

இயற்கையின் குறைபாடுகளையும்
வாழ்வின் அவலங்களையும் சமூகத்தின் சீர்கேடுகளையும் மனிதரின் குணக்கேடுகளையும் கட்டிக் காட்ட
வேண்டியதும் கவிதையின் கடமையாகும் என்று நம்பிச் செயல்புரிவோரின் எண்ணிக்கையும் அதிகமே.

எழுதுகிறவர்களின் தனித்த பார்வையும். வாழ்க்கை பற்றிய அவர்களது கருத்துக்களும் சிந்தனைத்
தெளிவும், சொல்லாட்சியும் கற்பனை வளமும் கவிதையை வளம் செய்கின்றன: கவிதைக்கு வனப்பும் வலிமையும் சேர்க்கின்றன.

இத்தன்மைகளோடு அங்கதச்சுவையும் பரிகசிக்கும் பார்வையும் இணைகிறபோது கவிதை தனிச்சிறப்பு பெறுகிறது.

இவ்விதம் தனிச்சிறப்புடன் கவிதை எழுதக் கூடியவர்கள் அணியில் பாக்டர் ஆச.கந்தன் அவர்களும் சேர்கிறார்

டாக்டர் கந்தன்
அவர்களின் நோக்கு மரபுகளில் இருந்து மாறுபட்ட தன்மை கொண்டதாக
இருக்கிறது. ஆங்கித்தில் ஸட்டயர் என்று சொல்லப்படுகின்ற தன்மையை அவரது எழுத்து பெற்றிருக்கிறது

இது நையாண்டி என்று தமிழில் குறிக்கப்படும் ;அங்கதம் என்றும் சொல்லப்படுகிறது

மரபுரீதியாக வீடுஎன்பதும் குடும்பம் என்பதும் எழுப்பக் கூடிய சித்திரம் பலவகையாக இருக்கும்
ஆனால் கவிஞர் கந்தன் காட்டுகிற சித்திரம் தனிரகமானது.

"கணவனின் கண்ணுக்கு மனைவி
அகங்காரப் பேயானாள்!

மனைவியின் கண்ணுக்குக் கணவன்
கிராதகப் பூதமானான்

மருமகள் கண்ணுக்கு மாமியார்
கிழட்டுப் பேயானாள்

மாமியார் கண்ணுக்கு மருமகள்
மோகினிப் பிசாசானாள்

எல்லோர் கண்ணுக்கும் பிள்ளைகள்
குட்டிச் சாத்தான் ஆனார்

உறவுகள் கொண்டு
உருவங்கள் நடமாடும்

இது ஒரு பேய் வீடு"

என்று விவரிக்கிறது டாக்டர் கந்தன் கவிதை

இருளை இன்னொரு சூரியனாக யாரும் வியந்து பாராட்டியதில்லை. கந்தன் இருட்டுக்கிரணங்களைப்
பரப்பி இருள் என்னும் இன்னொரு சூரியன் செய்கிற பணிகளை வியந்து ரசிக்க வேண்டிய விதத்தில் ஒரு
கவிதையாக்கியிருக்கிறார்

வயது முதிர்ந்தவருக்கு மனைவி இறந்த பிறகு நாய்தான் நல்ல துணை என்று வர்ணிக்கிறது ஒரு கவிதை

யுவனும் யுவதியும் தாங்களே தீர்மானித்து எங்கோ மூலையில்
சார்பதிவாளர் ஏட்டினில்
கையெழுத்திட்டு பிரகடனம் செய்து விடுகிறார்கள் தம்பதியென்று.

"இனி இவர்கள்
சுதந்திரப் பறவைகள்தான்

தாய் தந்தையர் தான் பாவம்
ஆயுள் கைதிகள்

அவமானத் தளை கொண்டு
ஊரின் கண் எப்போதும் "

என்று ஒரு மாறுபட்ட கோணத்தில் உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார் கந்தன்


மகிழ்ச்சியோடு மகளை மணம் புரியச் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பிய வயோதிகப் பெற்றோர்

"மாதந்தோறும் முதல்தேதி
கண்ணீர் உகுக்கின்றார்
மகளையும்
மகளோடு போன
சம்பளப் பணத்தையும்
நினைத்து "

என்றொரு வாழ்க்கை உண்மையையும் சுட்டுகிறது கந்தன் கவிதை.
காலை முதல் மாலை வரை,
சிரிக்கும் தேவதைகளாக அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சிலரதுவீட்டு வாழ்க்கையின்
சோகநிலையை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது ஒரு கவிதை.

அலுவலகப் பெண்களுக்கு அராஜகச் சிறைகள்ஆக அவர்கள் வீடுகள் அமைந்துள்ளதை கவிதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது

அறிவியல் கண்டுபிடிப்புகளினாலும் பல்வேறு சாதனங்கள் காரணமாகவும்

"ஐந்து விரலில் அடங்கிப்
போனது உலகம்-

மனவளியில் எங்கோ
விலகிப் போகுது பந்தம் "

என்ற தெளிவுபடுத்துகிறது "உலகம்
கையில், உறவோ இல்லை "என்ற கவிதை

நடுத்தர வர்க்கதினர் எத்தகைய போலிகள் என்று விவரிக்கிறது ஒரு கவிதை. மழலை பூக்காத
வயிறு மலடல்ல உண்மையில் எவை எவை மலடுகள் என் ஒரு கவிதை உணர்த்துகிறது;

உண்மையானசெல்லாக் காசு, எது என்று அறிமுகப்படுத்துகிறது மற்றொரு கவிதை.
மனித இயல்புகளை டாக்டர் கந்தன் பல கவிதைகளில் உள்ளது உள்ளபடி படம் பிடித்திருக்கிறார்
படித்துச் சுவைக்கவும் உலகநிலை பற்றி சிந்தித்துத் தெளிவு பெறவும் உதவக்கூடிய படைப்புகள் அவை

"உழும் வரை வயல் கூட
வெறும் மண்தான்

கண்டெடுக்கும் வரை
கோலார் கூட
வெறும் வயல்தான்

நீகூட ஏன்
தோண்டிப் பார்க்ககூடாது
உன்னைத்தான்! "

என்று ஞானத் தூண்டுதல் தருகிறது கந்தன் கவிதை

வாழக்கை வழிகள் குழப்பம் தரக்கூடியவைதான். அவற்றினுடே மன அமைதி பெறவும் ஒரு வழி
இருக்கிறது என்று டாக்டர் கந்தன் உணர்த்த முயல்கிறார் கவிதையின் வாயிலாக. ஆசைவழி, அறிவு வழி,
ஆணவ வழி, மனம் போன வழி எனப் பல வழிகளில் நடந்து கண்டனவற்றைக் கூறும் கவிஞர் இறுதியாக

"அன்பு வழி நடந்தேன்
குண்டும் குழி இரைச்சல் சாலை

ஆனாலும் பயணத்தில்
தொய்வில்லை "

என்று அறிவுறுத்துகிறார்
.
எதையும் புதுமையாகச் சொல்லும் திறமை கவிஞருக்கு இருக்கிறது. வெளி நடப்பு என்ற கவிதை
இதற்கு நல்ல சான்று

"ஐதீகமாய் வளர்ந்த வயிற்றுச் சட்டசபையில்

புதிய சாராய உறுப்பினர்
கலாட்டா

மனம் குமட்டி
வெளிநடப்பு செய்தது-

தயிர் சாதம் வேகமாக "

டாக்டர் கந்தன் தமது கவிதைத் தொகுப்புக்கு நையாண்டி மேளம் என்று பெயர் சூட்டியிருப்பதே
அவரது மாறுபட்ட நோக்கிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
அவருடைய வாழ்க்கை நோக்கையும், சிந்தனை வீச்சையும், கவிதையாற்றலையும் முழுதும் புரிந்து
கொள்வதற்கு இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் உதவுகின்றன. டாக்டர் கந்தன் அவர்களின் கவிதையாற்றல்
மேலும் மேலும் ஒளிர்வதற்குக் காலம் உதவட்டும் என் வாழ்த்துக்கள்.
சென்னை
6-11-99
வல்லிக்கண்ணன்

எழுதியவர் : வல்லிக்கண்ணனார் உரையைச் (28-Nov-18, 9:48 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 193

மேலே