இயற்கை
செந்நெல் முதிர் கதிர்கள்
தென்றலில் அசைந்து சதிராட
தங்கவயலாய் மாறியதே வயலெல்லாம்
அந்திசாய் வேளைக் கதிரவன்
கிரணங்கள் குடையாய்ப் பரவிட
தங்க வயல்களூடே பாய்ந்தோடியது
சிற்றோடை சல் சல் என்ற சப்தம் பரப்பி
நடனமாது சதங்கையில் ஜதிக்கு ஆடுவதொப்ப
ஓடும் ஓடை நீரில் கயல்கள் துள்ளி விளையாட
காத்திருந்த கொக்கும் கயலை பசி தீர்க்க
அலகால் கவ்விக்கொள்ள அங்கோர்
வெப்பமரக் கிளையில் மரங்கொத்தி
தன் உணவைத்தேடி கொத்த அந்த
சப்தமும் காதிற்கிதமாய் இசைத்திட பறையாய்
வீடு நோக்கி போகும் உழவர் பெருமக்கள்
வரும் நல்ல அறுவடையை எண்ணி எண்ணி
மனதில் இன்பம் பொங்க இன்பப்பள்ளு ஒன்று
பாடி போக அப்பாட்டிற்கு பெண்டிர் கூத்தாடினார்
பாங்காய் ......அந்தி சாய தங்கவயலை விட்டு
கிளி,குருவி,மைனா, என்று பறவைகளும்
தங்கள் கூடு நோக்கி பறக்க வானில் இந்த
பாடும் பறவைகளின் இசை நிறைந்திருக்க
இவற்றை எல்லாம் கண்ட என் மனதில்
இயற்கையின் எழில் இன்பம் நிறைத்தது