சிவா ஒரு புதிய மனிதன்

சிவராமகிருஷ்ணன் இந்தியாவில் ஒரு பிளாஸ்டிக் தொழில்கூடத்தின் மேல் அதிகாரியாக பதவி ஏற்ற பின் அந்த நிறுவனம் வெகு வேகமாக வளர்த்து இந்தியாவின் பல பிளாஸ்டிக் பொருள்களை உருவாக்கியது.குறைந்த விலையும், அழகிய தோற்றமும், மிகுந்த வலிமையையும் இந்த பொருள்களை சிறு சிறு கிராமங்களுக்கும் கொண்டுசென்றது.அதன் லேசான எடையும், பலவித வர்ணமும்,எந்த பொருளின் வடிவத்தையும் உருவாக்கக்கூடிய தன்மையும் மனிதனுக்கு கைகொடுக்க இரும்பினால் செய்த பொருள்கள் இல்லாமல் போகும் அளவிற்கு பிளாஸ்டிக் வளர்ந்தது.
அந்த நிறுவனத்தின் பெயர் அது உருவாக்கிய பொருள்களின் பெயரை கொண்டே அழைக்கும் அளவிற்கு பிரசித்தி பெற்று விளங்கியது.
அந்த நிறுவனம் பிரபலமாக காரணமான சிவராமகிருஷ்ணனை எல்லோரும் பாராட்டினர். அவருக்கு சிறந்த தொழில் அதிபர் விருதும் வழங்கப்பட்டது.அவர் குடும்பமும் அவர் உயர்வதை கண்டு மகிழ்ச்சி அடைத்தது.
வெளி உலகத்திற்கு சிவராமகிருஷ்ணன் மிகவும் அபிமானமுள்ளவராக இருந்தாலும்,வீட்டில் குழந்தைகளிடமும் மனைவியிடமும் பொறுமையில்லாதவராக இருந்தார்.
எப்பொழுதும் எதையோ நினைத்து கொண்டும்,தன்னை விட பெரிதாக வளர்த்தவர்களை கண்டு பொறாமை கொண்டு தன்னால் அவர்கள் அளவுக்கு வளரமுடியவில்லை என்பதை நினைத்து நினைத்து, குடும்ப இன்பங்களை தொலைத்து சிறு விஷயங்களுக்குக் கூட கோபப்பட்டு வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தார்.

சிவராமகிருஷ்ணனுக்கு எல்லா வசதியும் இருந்தது. ஆனாலும், இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அவனை அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியது. மனஅமைதி பாதித்தது. மனஅமைதி பாதித்த பிறகு தான் மனிதனுக்கு தெய்வம், சாதுக்களின் நினைப்பு வரும். அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். அவரை நாடிச்சென்றார்.

ஐயா! என்னிடம் செல்வம் ஏராளமாக இருக்கிறது. இருப்பினும், அது போதாது என்பதால் இன்னும் சேர்க்கிறேன். நான் அனுபவிக்காத வசதிகள் இல்லை. இருப்பினும் ஆசை விடவில்லை. என்னிலும் வசதியானவர்கள் அனுபவிப்பதைப் பார்க்கும்போது, அவர்களையெல்லாம்விட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால் கோபம் கொப்பளிக்கிறது. அதை என் மனைவி, குழந்தை, வேலைக்காரர்கள்மீதும் காட்டி விடுகிறேன். உங்களிடம் எதுவுமே இல்லை. ஆனால், உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறது.

நிம்மதியாக இருக்கிறீர்கள். இது எப்படி ஐயா சாத்தியம்! உங்களைப் போல எனக்கும் அமைதி கிடைக்க வழி சொல்லுங்களேன், என்றான். துறவி அவனை அமைதியாக பார்த்தார். மகனே! இன்னும் ஏழே நாள் தான் இந்த துன்பமெல்லாம்! அதன்பிறகு உனக்கு நிரந்தர அமைதி கிடைக்கும், நான் சொல்வது புரிகிறதா! என்றார். அவன் புரிந்தும் புரியாமலும் அவரைப் பார்க்கவே,
சிவராமகிருஷ்ணா! அடுத்தவாரம் நீ இறந்து விடுவாய். அதன்பின் உனக்கு நிரந்தர அமைதி தானே! என்றார்.

என்னடா இது! ஏதோ, மன அமைதிக்காக குறி கேட்க வந்த இடத்தில், துறவி இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டாரே! என விதியை நொந்தவனாய் வீட்டுக்கு திரும்பினார். மனைவியை அணைத்தபடியே, என் அன்பே! என் ஆயுள் அடுத்த வாரம் முடிகிறது. உன்னிடம் நான் பலமுறை கோபித்திருக்கிறேன். அதற்காக என்னை மன்னித்துக் கொள், என்றார்.

பிள்ளைகளையும் தன் மடியில் படுக்க வைத்து, அவர்கள் தேவையில்லாமல் கோபித்ததற்காக வருந்தினார். வேலைக்காரர்களை அழைத்து, உங்கள் மூலம் நான் அதிக லாபம் பெற்றாலும், நீங்கள் சம்பள உயர்வு, கடனுதவி கேட்கும் போதெல்லாம் எரிந்து விழுந்திருக்கிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இன்று நீங்கள் கேட்ட தொகையை கணக்குப்பிள்ளையிடம் போய் பெற்றுக் கொள்ளுங்கள், என்றார்.

தன் உறவுக்காரர்கள், நண்பர்கள் பகைவர்களாக இருந்தாலும் அவர்கள் இல்லங்களுக்குச் சென்று, நடந்த செயலுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டார். இப்படியே ஆறுநாட்கள் ஓடிப் போய் விட்டது. மறுநாள் விடிந்ததும், ரொம்பவே ஆடிப்போயிருந்தார். அவனைச் சுற்றி உறவினர்கள் ஆறுதல் சொல்லியபடியே இருந்தனர். அந்நேரத்தில், அந்த துறவி அந்தப் பக்கமாக வந்தார். அவர் காலில் விழுந்த சிவராமகிருஷ்ணன், சுவாமி! என் மரணமாவது அமைதியாக இருக்குமா? என்றான். துறவி அவனிடம் சிவகிருஷ்ணா! மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை தான், மனித மனத்தை அமைதியின்மைக்குள் தள்ளுகிறது.

அதே நேரம், மரணத்தை நினைப்பவன் வேறு எந்த சிந்தனையுமின்றி, அதையே எதிர்பார்க்கிறான். மேலும், மரணத்துக்கு முன்பாவது ஏதாவது நன்மை செய்வோமே என, நற்செயல்களைச் செய்கிறான்.

ஒருவன் இல்லறத்தில் இருந்தாலும், துறவியாய் இருந்தாலும் மரணத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திப்பவனுக்கு நியாயமான தேவைகளை நிறைவேற்றுவதை தவிர, அதிக ஆசை தோன்றுவதில்லை. ஆசையின்மையே மனஅமைதியைத் தரும். உன் மரணநாள் எனக்கு தெரியாது. உன்னைத் திருத்தவே உனக்கு மரணம் வரப்போவதாகச் சொன்னேன், என சிரித்துக்கொண்டே கூறினார்.இனியாவது ஆண்டவனிடத்தில் ஆசைகளையும், கர்வமின்மையும்,தயையையும் வேண்டிக்கொள்.இறைவன் உனக்கு அவைகளை கொடுத்து உனக்கு மன நிம்மதியையும் அருள்வான் என்று கூறி வந்த வழியே நடந்தார். சிவராமகிருஷ்ணன் அவர் சென்ற திசையை நோக்கி தன் கைகளால் நமஸ்கரித்து ஒரு புதிய மனிதனாக நின்றான்.

எழுதியவர் : கே என் ராம் (7-Jan-19, 5:25 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 164

மேலே