சிலு சிலுத்த ஏரிக்கரை
அரிதாகி போனது மழைக்காலத்தின் பெருமழையும் நீரும்
கொண்டம் கட்டிய பாய்ச்சல் வழக்கொழிந்து போனது
சிப்பியும் கிளிஞ்சலும் வாழ சிக்கல் வந்து சேர்ந்தது
மீன்கொத்தியையும் நீர் நாரையையும் பார்த்து நெடுநாள் ஆனது
தர்ப்பையும் நாணலும் வளர்ந்த இடம் தரிசாகி போனது
எப்போதும் சிலு சிலுத்த ஏரிக்கரை தென்றல் அனலாய் ஏர் மாடுகள் நீந்திய கண்மாய் வெறுமையாய்
மூன்று போகம் விளைந்த நிலத்தில் சொட்டு நீர் குழாய்
நீந்தி நீந்தி மகிழ்ந்த ஏரி நெகிழி சேர்க்கும் இடமாய்
நினைத்த நேரத்தில் கிடைத்த நீர் உணவு நிலை குலைவாய்
என்றாலும் ; இலவசமாய் அரிசி அரசு கடைகளில்
அரசு அளிக்கும் ; ஏரியை தூர்வார 100 நாள் வேலை
வயது முதிர்ந்து குடிகளுக்கு; மாதந்தோறும் அரசாங்க பணம்
அரசாங்கத்தால் வழங்கும் ஆடு மாடு கோழி
நோய் வந்தால் தீர்க்க அரசாங்க மருத்துவமனை
தமிழன் தமிழன் என்று தோள் தட்டுவோம்
இத்தரணியில் சிறந்தவர் நாம் என்று மார்தட்டும்
வறுமை நமக்கில்லை என்று தொடை தட்டுவோம்
வளமையான எதிர்காலம் உண்டு என நெஞ்சு நிமிர்த்துவோம்.
- - நன்னாடன்