அவள்

கருமையான மையிருட்டு...பேருந்திலிருந்த ஒன்றிரண்டு பேரிலிருந்து ராஜ கீழே உதிர பேருந்து மெதுவாக ஓட்டம் எடுத்தது....

கண்களை கசக்கி கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான், இருட்டை தவிர வேறெதும் கண்களில் புலப்படவில்லை... தப்பு பண்ணிட்டோமோ.... யாரிடமும் சொல்லாம கொள்ளாமல் வந்து தப்பு பண்ணிட்டோமோ.. என்று முணுமுணுத்துக் கொண்டே தன்னுடைய கிராமத்தை நோக்கிச் செல்லும் ஒத்தையடி பாதையில் தட்டுத் தடுமாறி காலெடுத்து வைக்க ஆரம்பித்தான்...

தூரத்தில் ஏதோவொரு வெளிச்சப் புள்ளி
மெதுவாக தன்னை நோக்கி வருவதை கவனித்தான் மனதிற்குள் இலேசாக கலவரம்... உடலில் ஏதோ ஒரு பதட்டம் பரவுவதை உணர்ந்தான்.... ஆனாலும் மனதில் ஒரு குருட்டு தைரியத்தை வரழைத்துக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
வெளிச்சப்புள்ளி பெரிதாகி, பெரிதாகி மிக அருகில் வருவது போல் இருக்க உதடுகள் ஒட்டிக் கொண்டது போல் ஓர் உணர்வு.... நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது... சிறிய நடுக்கத்துடனே யாரது...? மெதுவாக மிக மெதுவாக மெல்லியதாக வார்த்தைகளை உதிர்தான்....
  மல்லிகை பூ மனம் நாசியை துளைக்க, ஹா...ஹா.. என்ற பெண்ணின் சிரிப்பொலி, மனதில் சிறு குழப்பம், சிறு சந்தோஷம் இந்த சிரிப்பொலி மாலுவுடைதே... அவ எப்படி இங்க என்று எண்ணிக்கொண்டே மாலு என்று குரல் கொடுத்தான்....
கையிலிருந்த விளக்கை தூக்கி தன் முகத்தருகே காண்பித்தான் மாலு.. இரவு நேரத்தில் தங்க பதுமையாக விளக்கொளியில் ஜொலித்தாள், அவனால் தன்னுடைய மாமன் மகளை அந்த நடுநிசியில் இரசிக்காமல் இருக்க முடியவில்லை... தேவதைபோல இருக்காளே... மனதிற்குள் நினைத்துக் கொண்டே... என்ன மாலு இந்நேரத்தில் இவ்வளவு தூரம்...?
இல்லமாமா ஏதோ ஒரு உணர்வு நீ வருவேனு, நீ வந்து பாதையில தடுமாறக்கூடாதுன்னு அதுதான் விளக்கோடு வந்தேன்...
ராஜாவிற்கு மனதெல்லாம் நிறைந்தது.. அனைத்து சொந்தங்களும் தங்களுடைய குடும்பத்தை ஜாதி மாறி கல்யாணம் செய்து கொண்டதால் ஒதுக்கி வைத்திருக்க இவள் மட்டும் நம்மீது காதல் மழை பொழிகின்றாளே..
அதுவும் இந்த இரவு நேரத்தில் அவளுடன் நடப்பது ஒரு தனிச் சுகம் தான்... கையை பிடிக்கலாம என நினைத்து இரவு நேரத்தில் கையை பிடித்தால் தப்பா நினைத்துக் கொள்வளோ என்ற எண்ணத்தில், நினைப்பை ஒத்திவைத்தபடி மாலுவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
இருவரும் பழைய கதைகள் பேசி சந்தோஷமாக ஒத்தையடி பாதையில் நடக்க, உடலில் இருந்த நடுக்கம், பயம் அனைத்தும் உடலை விட்டு நீங்கியதை உணர்ந்தான்.
அதோ ஊர் வந்துவிட்டது, அந்த ஐய்யானார் கோவிலை தாணடிவிட்டால் போதும்... யாரும் பார்க்க கூடாதே என்ற தவிப்பு இப்போது மனதிற்குள்...
மாலுவே வாயை திறந்தாள், மாமா.. என்ன மாலு... நான் இப்படியே இந்த வழியே வீட்டுக்குப் போறேன்...இந்தா இந்த விளக்க வைச்சுக்க... நீ எப்படி இந்த இருட்டுள போவே மாலு...? பழகிப் போச்சு மாமா.. நீ பார்த்து போயிட்டு வா மாமா...
அவளுடைய கண்களில் துளிர்த்த கண்ணீரை கவனிக்காமலே வீட்டை நோக்கி செல்லும் பாதையில் திரும்பினான் மனதெல்லாம் மகிழ்ச்சியோடு...
பாவம் அவனுக்கு எப்படி தெரியும் அவனுடைய மாமன் மகள் மாலு என்ற மாலினி தன்னுடைய காதல் ஜெயிக்காது என்ற எண்ணத்தில் ஒரு மாசத்திற்கு முன்னாடி தற்கொலை செய்து கொண்டது...

அப்பறம் யார் அவனுடன் வந்தது....?

யாரும் இதை அவனிடம் சொல்லிவிடாதீர்கள் இந்த நடுநிசியில்

எழுதியவர் : சா.மனுவேந்தன் (9-Feb-19, 8:15 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : aval
பார்வை : 307
மேலே