சுபிட்சமுருகன் – -------------------------நாவல், -----------------------வாசகர் கடிதங்கள்

ஆசிரியருக்கு,

மிளகாயின் காரம்போல் சுருக்கென ஏறாமல் மிளகின் கார்ப்பாக மெதுவாக பரவுகிறது மனம் முழுவதும் காந்தல் , சரவண சந்திரனின் “சுபிட்ச முருகன்” வாசித்தபோது ..

உங்களின் சிலாகிப்பை படித்தபின் எதிர்பார்ப்புடன் நாவலைப் படித்தாலும்,எதிர்பார்ப்பிற்கு மேலேயே இருந்தது வாசிப்பனுபவம் .

தீவிரப்பற்றே எல்லாவித இன்பங்களுக்கும் ஊக்கமாக இருப்பதோடு எதிர்திசையின் வஞ்சங்களுக்கும் காரணமாகிறது. அதை அடைவதற்காக எத்தனை இழிவானதையும் இயற்றவைக்கும்.மலைச்சரிவில் இறங்கும்போது இரண்டடி வைத்தபின் நினைத்தாலும் நிறுத்தமுடியாமல் பிறிதொன்றின் கரம் எத்திக்கொண்டு வருவதென கீழ்மையில் வீழ்ந்து அமிழ்ந்தாக வேண்டும்.

இந்நாவலில் கீழ்மையில் வீழ்ந்த தாத்தாவை பேரன் கரையேற்றுகிறான், என்ன நடக்கிறது, எதனால் நடத்தப்படுகிறது எதுவும் புரியாமல் ஊழின் கையில் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறான், நம்மைப் போலவே.

காதலியுடன் இந்த அளவிற்கு நெருக்கமாய் இருக்கும்போதே அச்சம் ஏற்படுகிறது, இழுபடும் ஊஞ்சல் எதிர்திசைக்கு செல்லுமேயென.செல்கிறது அதன் உச்சபட்ச தூரத்திற்கு.அப்போதே தோன்றுகிறது, திரும்பித்தானே ஆகவேண்டும்.

தாத்தாவும் பேரனும் வெவ்வேறு தோற்றத்துடன் இருந்தாலும் ஒரே மாதிரிதான் தேய்க்கிறார்கள் பாவத்தை..இவர்கள் தரையைத் தேய்த்து முடிக்கையில் ஊரே மழையைப் பெறுகிறதே ,ஒவ்வொருமுறையும் வானம் பொய்ப்பது யாரோ ஒருவருடைய அடங்காத வஞ்சம் மீதமிருப்பதால்தானோ.

நம்ப முடியாத நிகழ்வுகள்போல தோன்றினாலும் நடக்கக்கூடியதுதான் என உள்ளுணர்வு சொல்லிக் கொண்டேயிருக்கிறது .

இவ்வளவு சிறிய நாவலிலும் பெரிய வாழ்வனுபவத்தை தரமுடிந்ததே இந்நாவலின் வெற்றி.எல்லாப் பாவங்களையும் தீர்க்க ஏதோவொரு பழியீடு இருக்கும் ,இருக்கக்கூடும் என்பதே வாசித்து முடிக்கையில் காரிருள் குகைக்குள் மூச்சுக்கு தவிக்கும்போது சிறு துளைவழியாக மெல்லிய காற்று மேனியை சிலிர்க்க வைப்பதுபோல, மனதிற்கு ஆசுவாசம் அளிக்கிறது.

கா.சிவா
-------------
ஜெ

சரவணன் சந்திரனின் சுபிட்சமுருகன் நாவலை வாசித்து முடித்தேன். உங்கள் முன்னுரை ஒரு நல்லவழிகாட்டி. திரிபுநிலை வழியாக ஆன்மிகம் என்னும் அந்த வழிகாட்டல் இல்லாவிட்டால் இந்நாவலை வழக்கமாக மனநிலைச் சிக்கல்களையும் வக்கிரங்களையும் சொல்லும் நாவலாக வாசித்து பாதியிலேயே கைவிட்டிருப்பேன். மனத்திரிபு என்பது வழக்கத்திற்கு மாறானது. வழக்கமான பாதையில் சிக்காத ஞானம் வழக்கம் மீறிய பாதையில் கிடைக்ககூடும். அந்தப்பாதையைச் சொல்லும் நாவல் இது

நாவல் ஆரம்பிக்கையில் குலசாபம், அதிலிருந்து வரும் குற்றவுணர்ச்சி, அதிலிருந்து வரும் திரிபு என்று செல்கிறது. ‘நான் என்ன வேணும்னா செய்கிறேன் முருகா!’ என்ற அந்த கதறல் மனதைப் பிசைந்தது. ஒரு ரங்கராட்டினத்தில் ஏறி சுற்றிச்சுற்றி வந்து நிற்பதுபோல அவன் மீண்டு வந்துவிடுகிறான். அந்த கொடூரமான ஒரு சைக்கிள்தான் இந்த நாவல். ஆழமான ஓர் அனுபவம். மீட்சி இதில் குறிப்புணர்த்தப்பட்டிருக்கிறது

ஆனால் முழுக்கமுழுக்க லௌகீகமான விஷயங்களை வாசிப்பவர்களுக்கு, சமூகவியலையும் அரசியலையும் தேடுபவர்களுக்கு உரிய நாவல் அல்ல

செல்வராஜ் மாரிமுத்து

எழுதியவர் : (10-Feb-19, 4:15 am)
பார்வை : 21

மேலே