“எந்தன் உயிர்க் காதலியே”

வீடுகட்ட வாங்கிவைத்த மணலின்மீது,
விளையாட்டாய்க் குழிதோண்டிக் காலைமூடி,
பாதிஉடல் தானெனக்கு என்றேபேச,
மீதிஉடல் “நான்”என்று தோளில்குந்தி,
ஈருடலும் ஒருவரென்று எண்ணும்வண்ணம்,
இனிமையுடன் சிரித்தாயே சின்னஞ்சிறிசில் !
நாள்பொழுது மாதமாகி வருடங்களாச்சு,
நடந்ததெல்லாம் என்னுயிரே மறந்திடுவேனா...!

மணல்மேலே மனைபோட்டு : குடும்பம்போல,
மகிழ்ந்தோமே நான்அப்பா நீஅங்கே அம்மாவாக !
மறுபொழுது சண்டைவர : உருட்டுக்கம்பால்,
மடத்தனமாய் அடித்தேன்உன் தலையில்நானும் !
ஓடிவரும் உதிரமுடன் வீட்டுக்குஓடி,
உண்மைதன்னைச் சொல்லாமல் : “விழுந்தேன்”என்று,
ஆழ்மனதுக் காதலைநீ அறியத்தந்தாய்,
அதன்உண்மை அறியாநாம் இருந்தநாளில்!




ஆரம்பப் பள்ளியிலே சேர்ந்தபோது….,
அன்றயநாள் சம்பவங்கள் மறக்கவுண்டா?
கூடப்படிக் கின்றபயல் எந்தன்மூக்கில்,
குத்திவிட்டான் : சிறிதுரத்தம் கசிந்தபோது,
ஓடிவந்து அவனைத்தள்ளி : நகத்தால்கீறி,
உமிழ்நீரை அவன்முகத்தில் துப்பித்திட்டி,
“ஓ”என்று ஓலமிட்டு ஊரைக்க்கூட்டி,
உன்அன்பை உணர்த்தினாய் உயிரேஉயிரே…!

“கள்ளம்”என்று ஒன்றெமது கருத்தில்இல்லாக்,
காலமது : சிறுவயதுப் பள்ளிநாளில்…..,
பள்ளிக்கூடம் போகையிலே பாதையோரம்,
பருத்துநின்ற புளியமரம் : மறக்கவுண்டா….?
கொப்பின்மேல் நான்ஏறிக் குலுக்கல்செய்வேன்….
கொட்டும்புளி தனைநீயும் மடியில்சேர்ப்பாய்….,
“கட்” அடிப்போம் அப்பப்போ : பள்ளிக்குஇதனால்,
கைதவறி ஓர்நாள்நான் விழுந்தெழும்வரையில் !

“காதல்” என்று சொல்லுகின்ற ஏதோஒன்று,
கருவாகி என்நெஞ்சில் உதித்தபோது,
ஓடிவந்தும் உனைக்காண முடியாமல்த்தான்,
உள்ளறையில் உன்னைவைத்துக் கதவடைத்தார்கள்!
நாளையொரு பொழுதிலுன்னைப் “பொண்ணுபார்க்க”
நாலுபேரு வருவாராம் : அதனால்இனிமேல்,
காண்பதுவும், கதைப்பதுவும் : சிரிப்பதுமெல்லாம்,
“கட்”பண்ண வேணும்என்றார் : கல்லைப்போட்டார் !

“கலியாணம்” எனஒன்று நடந்தால்அங்கே,
கணவனென்று என்னைத்தான் வைப்பேனென்று,
பிடிவாதம் பலசெய்துன் பெற்றோறோடு,
பிரச்சினைகள் பண்ணியதை அறிந்தேன் : நன்றி!
முடியாமல் போய்விடவே : முடிவாய்வாழ்வை,
முடித்தாயே உத்தரத்தில் – சேலைமாட்டி,
இனிநானும் என்வாழ்வை முடிக்கும்நிலையில்….,
இறுதியாக உனைநினைத்தேன் எந்தன்உயிரே!

----------------------
ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை-வீரவ நல்லூர் -

எழுதியவர் : (13-Feb-19, 7:21 pm)
பார்வை : 74

மேலே