மரணம் தின்ற ரோஜாச்செடி

கன்னித் தமிழின் வசிப்பிடம்
கண்ணாடிப் பேழை ஆனதென்ன?
அன்னைத் தமிழை அள்ளித் தந்த
அண்ணன் உயிர் போனதென்ன?

தமிழ் மணக்கும் இதயம்தான்
நோய் கொண்டு நோவதென்ன?
காலன் அவனைக் கவர்ந்தபின்பு
கதறித் துடித்து ஆவதென்ன?

நாங்கள் உன்னை
இழந்த தருணத்தில்தான்
தாய்மொழி தன்னையே

இழந்ததை உணர்ந்தோம்
நடைவண்டியாய் நீ கொடுத்த

தமிழ்ப் பற்றி நடந்தோம்
உடைமனமாய் உன் உடல் பார்த்து
நடைபிணமாய்க் கிடந்தோம்

திரை இயக்கம் கற்கத்தான்
பயிற்சி கண்ட பகலவனே?
உடலியக்கம் நிற்கத்தான்
நீ செய்த பாவமென்ன?

வழியின்றித் தவிக்கிறோம்
விழித்திருக்க வேண்டித்தான்

மௌனம் களைத்து மீண்டு வா

எங்கள் மீது கோபமென்ன?


பலநூறு ராகங்கள்
பல்லவிக்குத் தவிக்கையிலே

சரணம் தரும் சங்கத்தமிழன்
மரண உடை தரிக்கலாமோ?
பல்லாயிரம் மனங்கள்
பாடலுக்குத் தவமிருக்க
உன்தமிழை உறங்கவைத்து
உள்ளங்கை விரிக்கலாமோ?



கண் மூடாது எழுதிக்கொண்டே
காலத்தைக் கண்டவன்
ஞாலத்தை வெற்றிகொண்டு
கண் மூடிக் கிடக்கின்றான்
சோகத்திற்கும், பசிக்கும்.
சொற்களையே உண்டவன்
சொந்தங்களைத் துறந்துவிட்டு
சொர்க்கத்தில் நடக்கின்றான்

முத்துக்குமார் என்பது பெயரா
தியாகத்தின் சுடரா?
அன்றொருவன் - அங்கே

தமிழர் தான் வாழ
தன் உடலில் தீவைத்தான்

இன்றொருவன் - இங்கே
பாலை மனங்களில்
பாடல் பூ வைத்தான்
பூ வைத்த உள்ளங்களில்
தன் பிரிவால் தீவைத்தான்

அன்று நீ சொன்னாய்
அன்பின் விழியில்
எல்லாம் அழகென்றோம்
இன்று நீ சென்றாய்
அன்பின் விழி மூடியதால்
எல்லோரும் அழுகின்றோம்

இனியவனே நீ திரும்பிட
இதயம் திறந்து வைத்து
இறைவனைத் தொழுகின்றோம்



சூழலுக்குப் பாடல் தந்த
புலவனல்ல நீ - எமது
சூழ்நிலையை மாற்றி வைத்த
சுந்தரக் கவிஞன் நீ
சங்கதிக்கு வார்த்தை தந்த
சாமான்யனல்ல நீ - எங்கள்

சந்ததிக்கு வாழ்க்கை தந்த
சாதனைத் தமிழன் நீ

காஞ்சிமண் பெற்றடுத்த

கவிதைப் பூங்குயிலே
உன் வார்த்தைக்கும். பார்வைக்கும்

உள்ளங்கள் ஏங்கயிலே
உன் உயிரை ஏன் கொடுத்தாய்

இரக்கமற்ற எமன் கையிலே



அளவுக்கு மிஞ்சினால்
அமுதமும் நஞ்சு -
நீ
தமிழைத் தான் உண்டாய்

அது கூட நஞ்சா?


கவிதைக் கருவூலம் ஒன்று
கல்லறைக்குப் போனதே
வார்த்தைப் பசி வாட்டினால்
பாமரனுக்கு எதை ஊட்ட?
தன் உடல் பேணாது
தமிழ் உடல் வளர்த்தவனே
நாங்கள் செய்த பாவமென்ன
உன் உடலுக்கு சிதை மூட்ட?


அறிவுமதி கூடத்தில்
அபிபுல்லா சாலையில்
பாடல் புனையக் கற்றவன்
கனவு பூத்த வேளையில்
கவிதைப் பூஞ்சோலையில்
பட்டாம்பூச்சி விற்றவன்

மந்திரக் கவி பொழியும்
மகத்தான மன்னவன்
காதலர் மனவலியைக்
கருத்தோடு சொன்னவன்

அணிலாடும் முன்றோடு
அழகிய உறவுகளை
வேடிக்கை பார்த்தவன்
படிக்காத பாமரனை
பாடல் மொழி கொண்டு
தமிழோடு சேர்த்தவன்

பாரதியார், பட்டுக்கோட்டையார்
முத்துக்குமார் - மூவருமே
மூத்த மொழி நமக்களித்த
முத்தான முக்கனிகள்
கர்ப்பத்தில் கவி பேணி
அற்பத்தில் ஆயுள் துறந்த
நயமான நன்மணிகள்

நீ கொடுத்த கவிநிழலில்
இளைப்பாறும் உயிர்களெல்லாம்
கடவுளிடம் வேண்டுகிறோம்
உன் ஜீவன் இளைப்பாற

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (15-Feb-19, 10:53 pm)
பார்வை : 1136

மேலே