அப்பா
எட்டா உயரத்தில்
உனை வைத்து
ஏக்கமுடன் நோக்கிய காலங்கள்
என் ஏணிப்படியாய்
என் படிக்காட்டாய் - நீ
நிமிர்ந்த சூழல்கள்
உன் கடைசி நிமிட
கனவுகளுக்கு - நான்
விடையா...?
விடுகதையா..?
உணர்வுகளின் ஏக்கத்தில்
எங்கோ நான்
உயிர் துடிப்பை பிடித்தபடி
நீ அங்கே..
விடைதான் கிடைத்திடுமோ
உன் உணர்வுக்கு...
ஊன்றுகோலாய் இருந்த நீ
ஊன்றுகோல் உதவியுடன்
ஊன்றுகோலும் உன்னை
தாங்கவில்லையோ இன்று...?
கைபேசி செய்தி
அமைதி இழக்கச் செய்தது
ஆனாலும் உன் குரல் கேட்க
அதுதானே எனக்கு...
முயலுகின்றேன் நான்
ஏதாவது ஒரு
வார்த்தை உன் உதடுகள்
உச்சரிக்கும் என்று...
உன் இருமலே விடையாக...
உள்ளத்தை எங்கு திறப்பேன்
நீ தான் என் கடவுள் என்று..
என்றுதான் சந்திப்போம்
எப்படி சந்திப்போம்
கேள்விகளுடன் நான்
மௌனமாய் நீ..
அப்பா உன் கடைசி நிமிட கனவினை
உணர்த்திடுவாயா எனக்கு
கனவிலாவது....?