அறம் போற்றும் மொழி

மரத்திற்கும் அறம் உரைத்த மாண்போடு
சிரம் செதுக்கும் போருக்கும் உரைத்தோம்;
சரம் சரமாய் நீதிநூல்கள் அறம்உரைத்து
துரமின்றி துளிர்த்து வளர்ந்த தூயமொழி

வரையறை வரைந்து வட்டத்தினுள் அடங்காது
கிடைவரை அச்சும் கிழித்து அறம்கூறும்;
நரைதிரைக்கும் பாற்பல்லுக்கும் நெறிமுறை வகுத்து
அடைகரை கடப்பின் அக்கரையிலும் அமுதமொழி

அறம்பொருள் இன்பமென அதனைமுத லுரைத்து
அலர்மகள் அவளுக்கும் அறத்தைப் போதிப்போம்;
கருப்பொருள் பிரித்து காதல் வளர்த்து
முதற்பொருள் அவனும் முணுமுணுக்கும் முரஞ்சுமொழி

முல்லைக்குத் தேரீந்து மூடரையும் கரைசேர்த்து
நெல்லியைப் பரிசளித்து நேர்த்தியாய் நெறியுரைத்தோம்;
மல்லையோடு மாற்றுமொழியிடம் மறந்தும் இரவாது
இல்லையென்று கவிஞர்களுக்கு உரைக்காத உயர்ந்தமொழி

இடம் மாறினும் இனிமை குன்றாது
அடம் பிடித்து அறத்தைப் போற்றினோம்;
மடம் வளர்த்து மதப்பேய் ஒழித்து
தடம் பதித்து தளைத்த தனிமொழி

குருதி இழப்பினும் கொடை மறவாது
பரிதி மரிப்பினும் அறவழி தவறோம்;
அகதி வாழ்விலும் நெறிமுறை வகுத்து
இறுதி மூச்சிலும் அறம்போற்றும் தமிழ்மொழி

எழுதியவர் : ஏ.தினபாகர் (21-Feb-19, 8:44 pm)
சேர்த்தது : தினபாகர்
பார்வை : 1362

மேலே