நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்
மதிப்புரை
ஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன.
ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து நோக்குவோமானால் அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பிரதிகள் பிரச்சார நெடி நிறைந்தவையாகவும் போரினால் பொதுமக்கள் இழந்தவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்ற பாடுகளாகவுமே காணப்பட்டிருக்கின்றன. அதிலும், இன்னும் சொல்லப்போனால், இவ்வாறு எழுதிய பிரதிகளில் அதிகம் பேசப்பட்டவை இந்தப் போரினால் நேரடியாக பாதிக்கப்படாதவர்களால் எழுதப்பட்டவையாகவும் களத்தில் அந்தப் போரின் போது இல்லாதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்தப் போர் பிரதிகளில் சில, செயற்கையான உள்ளுணர்வை சித்திரிக்கும் உபாதை நிறைந்தவையாகவும் அதற்கும் அப்பால் முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானவையாகவும் கூட இருந்திருக்கின்றன. சில படைப்புக்கள் இன்னமும்கூட “டுமீல்” என்று வெடித்த துப்பாக்கியை நோக்கி, எதிரணியினர் “ரட் ரட்” என்று வேட்டுக்களை தீர்த்தனர் என்ற ரீதியில் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது பெருஞ்சோகம்.
இதுபோன்ற பின்னணியில், ஈழத்தில் போர் ஏற்படுத்திச் சென்ற தாக்கங்களை ஒரு கொதிபுள்ளியில் நின்று – அதன் கனபரிமாணத்தை சரியாக உள்வாங்கி – இலக்கியமாக்குவதென்பது மிகுந்த சிரமம் நிறைந்ததும் மிகப்பெரிய சமூகப்பொறுப்பு வாய்ந்ததும் என்பது பல படைப்பாளிகளால் புரிந்துகொள்ளப்படாத – சிலரால் அபூர்வமாக புரிந்து கொள்ளப்பட்ட – அறமாகும்.
ஈழத்தில் விழுந்து வெடித்த ஒவ்வொரு ஆட்லறி குண்டிற்குப் பின்னாலும் ஒரு கதையிருக்கிறது. தாகம் தீர்த்துக் கொண்ட ஒவ்வொரு துப்பாக்கி சன்னத்திற்கு பின்னாலும்கூட பெருங்காதை விரிந்து கிடக்கிறது. கந்தகச் சன்னங்களும் உயிர்குடித்த குண்டுகளும் மனிதர்களில் மாத்திரமல்ல, உயிரற்ற பொருட்களின் மீது விழுந்து வெடித்த சம்பவங்களின் பின்னணியிலும்கூட அடர் கதைகள் மண்டிப்போயிருக்கின்றன. இன்னும் இன்னும் நொதித்துப் போய் எழுதப்படாத கதைகளாக அவை இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் கூட பரவிக் கிடக்கின்றன.
இந்தப் பின்னணியில், நடேசனின் “கானல் தேசம்” என்ற நாவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக சேர்ந்திருக்கிறது.
அறம் சார்ந்த பரிதிப் பார்வையின் முன்னால் போர் என்பது முற்றிலும் வேறு பரிமாணமுடையதாகவே இருக்கும். அது வெளிப்படுத்தும் கசப்பான உண்மைகளுக்காக அவற்றை ஒதுக்கிவிட முடியாது. போர் நிலத்தில் வெளித்தள்ளிக் கிடக்கும் கூரான அனைத்து உண்மைகளையும் இலக்கியத்தினால் மாத்திரமே சத்தியத்தின் வழியாக எடுத்துச் செல்ல முடியும்.
ஈழப்போரில் அதற்கான சாத்தியங்களை திறப்பதற்கு நடேசன் போன்றவர்கள் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்பது தமிழ் இலக்கிய உலகத்தில் ஒரு எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது.
ஏனெனில், ஈழப்போர் குறித்து தமிழர்கள் கொண்டுள்ள பொதுப்பார்வையிலிருந்து எதிர்நிலையிலிருந்து கொண்டு அதை அணுகுபவராகவும் போருக்கும் போரின் பின்னணியிலிருந்த தமிழர் தரப்பு காரணங்களாக காட்டப்படுகின்ற அர்த்தம், லட்சியம் மற்றும் அரூப விடயங்களை நிராகரிப்பவராகவும் நடேசன் இருந்திருக்கிறார். போர் குறித்த மதிப்பீடு அவரது பார்வையில் தூர நோக்கம் கொண்டதாகவும் அகன்ற சமூகத்தின் பல்வேறு சமன்பாடுகளின் ஊடாக அதற்கு விடை தேட முயற்சி செய்வதாகவும் இருந்திருக்கிறது.
தனது தொழில் சார்ந்து நடேசன் போருக்கு முற்றிலும் வேறு களத்தில் இயங்குபவராக இருந்தாலும் அவர் போருக்கு சமாந்தரமாக நெடுங்காலம் பயணித்திருக்கிறார். இயன்றளவு தன்னை இந்தப் போருக்கு மிக அருகில் நிலை நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். ஈழத்தில் போர் முகிழ்ந்த எண்பதுகளில் தமிழ் இயக்கமொன்றின் முக்கிய வேலைகளில் தன்னை ஈடுபத்திக் கொண்டவர். அந்த இயக்கத்தின் அபிமானியாகவும் ஆதரவாளனாகவும் இன்றுவரை தன்னை பதிவு செய்து வருபவர். போரின் விளைவுகளால் பல லட்சக்கணக்கான தமிழ்மக்கள் போல தானும் புலம்பெயர்ந்தவர். ஆஸ்திரேலியா வந்த பின்னரும் பத்திரிக்கை ஒன்றை நடத்தியவர். அதன் ஊடாக தனது அரசியல் கருத்துகளை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தவர். அதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட தனது மக்களுக்கு ஈழத்தில் சென்று பெருமளவில் உதவிகளை செய்து வந்தவர்.
நடேசன் எழுதிய “கானல் தேசம்” என்ற நாவல் குறித்த பார்வையைத் தான் இங்கு பதிவு செய்வது முக்கியம் என்றாலும் இந்த நாவல் முழுக்க முழுக்க அரசியலால் நிறைந்தது என்ற காரணத்தினால் நடேசனின் அரசியலில் இருக்கக்கூடிய செறிவு – செறிவின்மை போன்ற விடயங்கள் இந்த நாவலில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன என்பதை பதிவு செய்வதற்கு அவர் குறித்த பார்வையும் அவரது அரசியல் குறித்தும் இங்கும் உரையாட வேண்டியது கட்டாயமாகவுள்ளது.
பெரும்பான்மை தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கின்ற போர் குறித்த லட்சியப் பார்வையிலிருந்து முரண்டுபட்டு நிற்பது மாத்திரமல்லாமல் வேறு வழியை நோக்கி அந்தரித்து நிற்பவராக நடேசன் தன்னை தமிழ்ச் சமூகத்துக்கு ஒப்புக்கொடுத்துக் கொண்டிருப்பதால், இந்த நாவலுக்கும் அதேயளவிலான விசித்திரமானதொரு எதிர்பார்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
“கானல் தேசம்” ஈழப்போர் நிகழ்த்திய பரந்துபட்ட காயங்களையும் அவை சமூக வேறுபாடுகள் பாராமல் – தமிழ் – சிங்கள – முஸ்லிம் மக்களில் – ஆழக்கீறிச் சென்றுள்ள ஆறாத வடுக்களைப் பற்றியும் பேச விழைந்திருக்கிறது.
நாவலில் வருகின்ற பெரியப்பா என்ற கதாபாத்திம் ஈழத்தின் அரசியல் பிரக்ஞை கொண்ட எல்லா முதியவர்கள் போலவும் ஒரு மார்க்ஸியவாதியாக காணப்படுகிறார். அவரது அரசியல் எவ்வாறு தமிழ் ஆயுதக் குழுக்களின் வன்முறைக் கலாச்சாரத்துக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதை பேசத் தொடங்கியதிலிருந்து ஈழத்திலும் ஈழத்திற்கு வெளியில் இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இந்தியாவிலும் கூட பரந்து செல்கின்ற போர் அதிர்வுகளை நடேசன் ஒவ்வொரு கதாபாத்திரமாக நாவலுக்குள் நுழைக்கிறார்.
நாவலின் ஆரம்பம் மிகத் தரமான பாத்திரப் படைப்புக்களின் வழியாக உள்நுழைகிறது. அசோகன் என்ற நாவலின் கதாநாயகன் இந்தியப் பாலைவனத்தில் ஒரு ஜிப்ஸி பெண்ணைப் பார்த்து சபலம் கொள்வதாக தொடங்கும் கதை, ஒவ்வொரு முடிச்சுக்களின் வழியாக கதையின் பிரதான புள்ளியை நோக்கி நகர்கிறது.
ஆனால், நாவல் தொடங்கும் வேகமும் – செறிவும் – சிறிது நேரத்திலேயே விழுந்து அதுபாட்டுக்கு அரசியல் பிரச்சாரமாக ஆரம்பித்து, நாவலின் கடைசிவரை – ஒரு சில இடங்களைத் தவிர்த்து – மிகத் தொய்வானதொரு புள்ளியில் கடைசியில் சென்று முடிகிறது.
நாவலின் மிக முக்கியமான பின்னடைவாகக் காணப்படுவது நடேசன் பிரதி முழுவதும் காண்பித்திருக்கும் காழ்ப்பும் கசப்பும் தான்.
தமக்கு எதிரான அரசியல் மேலாதிக்கத்தின் வலியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக ஆயுதமேந்திய தமிழர்கள் எவ்வாறு அந்தப் போராட்டத்தை மேற்கொண்டார்கள் என்பதில் யாருக்கும் விமர்சனம் இருக்கலாம். அந்த வகையில், மக்கள் முகங்கொடுத்த – போராளிக் குழுக்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளை – இதுவரை பேசப்படாத பல விடயங்களை நடேசன் நாவலுக்குள் கொண்டு வந்திருக்கலாம். அது நிச்சயம் பேசப்பட வேண்டியவையும் கூட.
ஆனால், நடேசன் நாவலுக்குள் வரிக்கு வரி இறக்கி வைப்பது ஒரு குறிப்பிட்ட இயக்கம் மேற்கொண்ட போராட்டத்தின் மீது சேறடிப்பும் தமிழர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் வன்முறையை தேர்ந்ததெடுத்த இரத்த வெறிபிடித்தவர்கள் போன்ற சித்தரிப்பும்தான். அதுவும், அவற்றை நிரூபணம் செய்வதற்காக – சுவாரஸ்யம் என்று அவர் கருதி – நாவலுக்குள் கொண்டு வந்திருக்கும் சில சம்பவங்கள் சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டவையாக காணப்படுகின்றன.
அவற்றில், மிக முக்கியமானது, போராளிப்பெண் ஒருத்தியை கர்ப்பிணியாக்கி அவளை தற்கொலைத் தாக்குலுக்கு அனுப்புவதாக சொல்லப்படுகிறது.
அதனை அவர் தனது முன்னுரையில் குறிப்பிடும்போது –
“விடுதலைப்புலிகள் பெண்ணை கர்ப்பிணியாக்கி அதன் பின் அந்தப் பெண்ணை தொடர்ச்சியாக இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி, பின்னர் தற்கொலைக் குண்டுதாரியாக இராணுவ தளபதிக்கு எதிராக பாவித்தது போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை வேறு வரலாறுகளில் நான் படித்ததில்லை. மனித சமூகத்தில் மட்டுமல்ல மிருகங்கள் மத்தியிலும் நம்மால் பேசப்படும் தாய்மை என்ற கருத்தாக்கத்தை அத்தகைய செயல் தகர்க்கிறது. இத்தகைய செயலை எப்படி புரிந்து கொள்வது?” – என்கிறார்.
நடேசன் கூறுவதைப் போலவே, இப்படியான பொய்யுரைப்புகளையும் தமிழ் வாசகர்கள் வரலாறில் மீண்டும் படித்து விடக்கூடாது என்பதற்காகவே இதன் உண்மையைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
நடேசன் குறிப்பிடுகின்ற சம்பவம், சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அந்தச் சம்பவத்தில் தற்கொலைக் குண்டுதாரியாக வெடித்துச் சிதறிய பெண், ஒரு இராணுவ கப்டனது மனைவியுடன் நெருங்கிப் பழகி, இராணுவக் கப்டனது மனைவி கர்ப்பிணியாக இருந்த போது, அதைச் சாட்டாக வைத்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவ வைத்திய சாலைக்கு அடிக்கடி போய் வந்தவர்.
அவ்வாறு போய் வந்த ஒருநாள், அங்கு வந்த இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் வாகனத்தில் பாய்ந்து தன்னை வெடிக்கச் செய்தார்.
ஆனால், அன்றைய தினம், இராணுவ தளபதியின் அதிர்ஷ்டம், வாகனத்தின் மறுபக்கத்திலிருந்து வர, இந்தப் பெண் இலக்குத் தவறி இன்னொரு இடத்திலிருந்து வெடித்துவிடப் போகிறோமே என்று அடுத்த பக்கத்துக்கு பாய்ந்து செல்ல முற்பட்டபோது பாதுகாப்புக்கு வந்த “பீல்ட் பைக்”; குழுவினரால் அவள் உதைக்கப்படுகிறாள். பதற்றத்தில் அவள் அந்த இடத்திலேயே வெடிக்கிறாள். இராணுவத் தளபதி பின்னர் காயங்களுடன் உயிர் தப்புகிறார். இது வரலாறு.
ஆனால், இராணுவக் கப்டனின் மனைவியை பார்ப்பதற்கு அடிக்கடி இராணுவ ஆஸ்பத்திரியில் மகப்பேறு பகுதிக்குச் சென்று வந்து உளவு பார்த்த காரணத்தினால், இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர், தற்கொலைக் குண்டுதாரி கர்ப்பிணியாக இருந்தவர் என்று தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் புனைந்தெழுதி தங்களது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டன.
ஆனால், ஒரு பத்திரிக்கையை நடத்திய நடேசன் இந்தச் சம்பவத்தின் உண்மை எது என்பதை மிக லாவகமாக கடந்து சென்று தனக்கு விருப்பமான உண்மை என்று கருதப்படுகின்றதொரு செய்தியை நூலின் முன்னுரையிலேயே எழுதி, வெறுங்காணியை காண்பித்து சுடுகாடு என்று கூறி கண்ணீர் வடிக்கிறார்.
மேற்படி தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்றும் கொழும்பு சிறையில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை நடேசன் அவர்கள் விசாரித்திருந்தாலே, இப்படியான மன உளைச்சல்களை தவிர்திருக்கலாம்.
இலக்கியத்தில் நேர்மை தவறிய பொய்கள் எதுவுமே புனைவாகிவிட முடியாது.
இதுபோன்ற – அறம் சார்ந்த நிலைகளிலிருந்து ஒற்றைக்கு ஒற்றை பிறழ்வாகியிருக்கும் நடேசனின் அனைத்து நாவல் சம்பவங்களும் “தான் பின்பற்றும்” அரசியலுக்காக அவர் விசேடமாக இறக்குமதி செய்திருப்பவையாகவே தெரிகிறது. போராட்டம் தொடர்பாக செவிவழி பரவிய கதைகளையும் – மரத்தடி வம்புகளையும் – தனது புலியெதிர்ப்பு அரசியலுக்கான பிரதான சம்பவங்களாக வரிந்து கட்டிக்கொண்டு எழுதி, அவற்றின் மீது விழுந்து விழுந்து ஒப்பாரி வைப்பதாக பல நாவலின் பல இடங்கள் அருவருக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பை நடேசன் அவர்களுக்கு கனவிலும் காண்பிக்கக் கூடாது என்பதைத் தவிர, இந்த நாவல் பேசியிருக்கும் உச்சப்பட்ச அரசியல் வேறெதுவாகவும் இருக்க முடியாது என்பது எனது கணிப்பு.
விடுதலைப்புலிகள் என்ற அமைப்பானது எந்தப் பிரச்சினையுமே இல்லாமல், வெறுமனே வன்முறையில் தாகமெடுத்த வெறிகொண்ட மிருக அமைப்பாக – கொலையே முழுப்பணியாக – அலைந்து கொண்டு திரிந்தது என்று வரிக்கு வரி தனது கசப்பை வார்த்து வைத்திருக்கிறார் நடேசன்.
அதேவேளை மறுபுறத்தில், சிங்கள மேலாதிக்க இராணுவத்தை மிகப் புனிதர்களாக நாவலில் கட்டமைக்கிறார். இராணுவத்தினர் எதனை செய்தாலும் அதற்கொரு காரணமிருப்பதாக நாவலில் காண்பிக்க அவசரப்படுகின்ற நடேசன், புலிகள் என்று வரும்போது “வன்னியிலுள்ள நுளம்புகள் இது எங்களுடைய இடம், எங்களுடைய சட்டம் என்று ஆர்ப்பாட்டம் செய்தன” என்று எள்ளி நகையாடுமளவுக்கு காழ்ப்பை காண்பிக்கிறார்.
ஆங்காங்கே சில, சம்பவங்கள் இராணுவத்தினரின் கெடுபிடிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் விடுதலைப் புலிகளின் மீது காண்பிக்கும் வன்மத்தின் சிறுதுளியாகவே அது தெரிந்து மறைகிறது.
இதுபோன்ற அறம் தவறியதொரு பாதையில் – மக்களின் உணர்வுகளை போலியாக புரிந்துகொள்ள முற்பட்ட இலக்கிய சிந்தனையில் நின்றுகொண்டு ஒரு நாவல் எழுதுவது என்பது நாவலாசிரியருக்கு எவ்வளவு தூரம் துணிவுள்ள முயற்சியாகப்பட்டது என்பது இந்த நாவலுக்குள் உயிர்ப்புடனுள்ள பெருங்கேள்வி.
இலக்கியத்தில் அரசியல் எழுதப்படுகின்ற போது அது சார்ந்த தர்க்க நியாயங்கள் ஐயம் திரிபுற முன்வைக்கப்பட வேண்டும். சறுக்கல்களும் கிறுக்கல்களும் வரலாற்றின் குறுக்குவெட்டு முகங்கங்களாக முன்வைக்கப்படும் பிரதிகளில் மருந்துக்கும் ஆகாத ஒன்று.
உதாரணத்துக்கு –
மகாபாரத (அகன்ற இந்தியா) மனநிலையில் இருந்து கொண்டு ஜெயமோகன் முன்வைக்கும் திராவிட – பெரியாரிய எதிர்ப்புக்கெல்லாம், அவர் மிகப்பெரியதொரு தர்க்கத்தை முன்வைக்கிறார். தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறார். அது சரியா, தவறா என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறமெனும் பலிபீடத்தில் அவர் தன்னை ஒப்புக்கொடுக்கிறார்.
ஜெயமோகன் மகாபாரத மனநிலையிலிருந்து பேசுவதைப் போல நடேசன் மகாவம்ஸ மனநிலையிலிருந்து உரையாட முயற்சித்து முழுத் தோல்வியடைந்திருக்கும் நாவலாகவே “கானல் தேசம்” காணப்படுகிறது.
ஏனெனில், இங்கு தனது அரசியலை நியாயப்படுத்தும் எந்த தர்க்கத்தையும் நடேசன் முன்வைக்கவில்லை. முன்வைக்க முடியவில்லையா என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளையும், கொஞ்சம் தள்ளிப்போனால், நாட்டின் அரசியல்வாதிகளும் தான் இந்தப் போருக்குக் காரணம் என்று அவ்வப்போது கூவிவிட்டு ஓடி ஒளிந்துகொள்கிறார்.
அவர்கள் எப்படி காரணமாயினர்? எண்பதுகளுக்குப் பின்னால், அந்த அரசியல் எவ்வாறு தமிழ் ஆயுதக் குழுக்களின் உருவாக்கத்துக்கு வித்திட்டன? அந்தக் குழுக்களின் வளர்ச்சி பின்னர் எவ்வாறு படுகொலைகளின் பாதையில் சென்றது?
இப்படி எத்தனையோ விடையளிக்க வேண்டிய கேள்விகள் அனைத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு இந்த நாவலை – “பெற்றோரின் அஸ்தியை கரைக்கும் போது ஏற்படும் உணர்வுடன் இந்த நாவலைப் படைத்தேன்” – என்கிறார்.
அதேபோல, நாவலின் படிமங்கள் அனைத்தும் மிகத்தொன்மையாகவும், “அவன் கூறிய வார்த்தைகள் காதுக்குள் மத்தளம் வாசித்தன” – என்கிற ரீதியில் காணப்படுவது நாவலோட்டத்தில் அசதியை ஏற்படுத்தும் இன்னொரு விடயம் என்று குறிப்பிடலாம்.
கதாபாத்திரங்களின் உணர்வுகள் நாவலின் முக்கியமான இடங்களில் எல்லாம் செயற்கையாக அடுக்கப்பட்டது போலிருப்பது நாவலின் மிகப்பெரியதொரு தோல்வி.
விடுதலைப்புலிகளுக்காக ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் அசோகனை வேவு பார்ப்பதற்காக அனுப்பப்படும் ஆஸ்திரேலிய உளவுப்பெண்மணி அவன் மீது காதல் கொள்கிறாள். அதனை அவளது அதிகாரி சுட்டிக் காட்டும்போது பொசுக்கென்று அழுது விடுகிறாள். ஆனால், அதற்குப் பிறகும் அவள் தொடர்ந்தும் வேவு பார்க்கும் வேலையை செய்து கொண்டுதானிருக்கிறாள்.
அதேபோல, புலிகளுக்கு எதிராக வேலை செய்வதற்கு இந்தியாவிலிருந்து வருகின்ற இரகசிய ஏஜெண்டுகள் இருவர், இலங்கை இராணுவத்தினருடன் பேசும்போதும் ஏதோ சொல்லிவிட, அவர்களும் பொசுக்கென்று அழுதுவிடுகிறார்கள்.
இப்படிப் பல இடங்களில், கேட்டுக் கேள்வியில்லாமல் நடேசனின் பாத்திரங்கள் அழுதுவிடுகின்றன.
அதேபோல, பெண் பாத்திரங்கள் அனைத்தும் ஏதோ ஒரு சம்பவத்தில் யாருடனாவது படுக்கையை பகிர்ந்து கொள்வதாக சித்திரிப்பது நாவலின் பலம் என்று நடேசன் நம்புவதும் புலிப் போராளிப் பெண்கள் பாலியல் வறுமையிலிருப்பது போல, ஒரு வயது சிறுவனின் விதைப்பையை பார்த்துக் கூட, அதனை நகைச்சுவையாக பேசி ஆராய்ச்சி செய்வதும் நாவலாசியிரின் ரசனையை மாத்திரமே திருப்தி செய்திருக்கின்றன.
நாவலின் அரசியலுக்கு அப்பால் – கானல் தேசத்தின் நாவல் கட்டமைப்பு நடேசனின் “வண்ணத்திக்குளம்” எழுதப்பட்ட புள்ளியிலிருந்து கூட இம்மியும் எழுந்து நகராத நிலையில் காணப்படுவது இந்த பிரதியின் இன்னொரு பின்னடைவாகும்.
ஒரு சிறந்த கதை சொல்லியாக – கதைகளைக் கோர்த்து செல்லுகின்ற பாணியில் தேர்ந்தவராக நடேசன் முதிர்ச்சி மிக்கவராகத் தெரிகிறார். அதிக பாத்திரங்களை நாவலுக்குள் அலைய விட்டு, வரலாற்றுப் பிரதியென்றவுடன் வாசகர்களுக்கு எழுகின்ற சம்பிரதாய பூர்வமான சளைப்பை கொண்டு வந்துவிடக் கூடாது என்று முடிந்தளவு முயற்சி செய்திருக்கிறார். இருந்தாலும், நாவலின் கதைப்போக்கு நேரடியானதாகவும் கட்டமைப்பு ரீதியாக எந்த உடைவுகளையோ பரிசோதனைகளையோ நிகழ்த்தாத அலுப்புடன் நகர்கிறது.
ஒரு வாரப் பத்திரிக்கைக்கு எழுதுகின்ற தொடர் போலவும் – நீங்கள் இந்த வாரம் எழுதிய சம்பவத்தில் இப்படியும் ஒரு நிகழ்வு இடம்பெற்றது தெரியுமா என்று ஒருவர் கேட்க அதனை அடுத்த வாரத்தில் சேர்த்து எழுதியது போன்ற – தொடர்பற்ற தொங்கு கதைகளாகவும் மாத்திரமே கானல் தேசத்தின் உள்ளும் புறமும் காணப்படுகின்றன.
“கானல் தேசம்” ஒரு மித மிஞ்சிய எதிர்பார்ப்புடன் எழுதத் தொடங்கி அளவுக்கதிகமான கசப்பிற்குள் வழிதவறிய பிரதியாக முன்வைக்கப்பட்டிருந்தாலும் நடேசன் பேச விரும்பிய அரசியல், கூர்மையான இலக்கிய மொழியின் வழியாக முன்வைக்கப்படுவது காலத்தின் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது இவ்வளவு நீண்ட குற்றப்பத்திரிக்கையுடன் நாவலுக்குள் குந்தியிருக்கும் நடேசன், தான் சார்ந்திருந்த தமிழ் ஆயுதக்குழு 87-ற்குப் பின்னர் மேற்கொண்ட சித்திரவதைகள், தங்களைத் தாங்களே தின்னத்தொடங்கிய சகோதரப் படுகொலைகள் ஆகியவற்றின் உச்சங்கள் என்பவை தொடர்பாகவும் அறத்தோடு நின்று ஒரு பிரதியை எழுத வேண்டும்.
அந்தப் பிரதி – தற்போது நடேசன் கொண்டிருக்கும் அரசியல் அசமநிலை அனைத்தும் களையப்பட்டு – இலக்கியத்தின் ஆகக் குறைந்தபட்ச தேவையான – அறத்தின்பால் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது “கானல் தேசம்” நாவல் வாசித்து முடிக்கும்போது ஒரு கோரிக்கையாக எழுகிறது.
அதுவரை, நடேசன் நின்றுகொண்டிருக்கும் புள்ளிக்கு எதிரான புள்ளியிலிருந்து தமிழ் தேசியத்தின் பிரச்சார கர்த்தாக்களாக இலக்கியப் பிரதிகளை உற்பத்தி பண்ணி நடேசன்களை சமன் செய்துகொண்டிருக்கும் இலக்கியப் போக்கென்பது மறுக்க முடியாததாகவே இருக்கும்.
வெளியீடு : காலச்சுவடு
விலை : ரூ. 450
நன்றி -தமிழினி