நிதியுங் கணவனும் தந்தம் விதியின் பயனே பயன் – மூதுரை 19
நேரிசை வெண்பா
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன். 19 - மூதுரை
பொருளுரை:
ஆழமாகிய கடலின் நீரை படியால் ஆழமாக அழுந்தும்படி அமிழ்த்தி மொண்டாலும், ஒரு படியானது நான்கு படி நீரை மொள்ளாது.
அதுபோல, தோழியே, பெண்டிர்க்கு மிகுந்த பொருளும் தக்க கணவனும் கிடைத்தாலும் அவரவருடைய ஊழின் அளவாகிய பயனளவே அனுபவிக்கப் பயன்படும்.
கருத்து:
வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும், பழ வினையின் அளவன்றி மிகுதியாய் அனுபவிக்க முடியாது.