மாடியில் மடிக்கணினியில்

மங்கையவள் நாற்று நட
மணந்தவன் கண்டு மகிழ
வளர்க்கும் செல்லங்கள் வலம்வர
காட்சியிது மாட்சியே மறுப்பேது
பசுமை புரட்சிக்கு சாட்சியிது
உழுதவனின் அன்றைய நிலையது !

விரக்தியின் விளிம்பில் நிற்கிறான்
விடிந்திடா இருளில் வாழ்கிறான்
நொடிந்த மனதால் வெறுக்கிறான்
மடிந்திடும் முடிவை எடுக்கிறான்
விளைந்த நிலத்தை விற்கிறான்
அரங்கேறும் அவலநிலை இன்று !

பசுமை மறைகின்ற பூமியானது
நிலையிது இதுவும் ஆபத்தானது
வளர்ச்சி நிச்சயம் தேவையானது
நிலங்களை அழிப்பது தவறானது
தீட்டிடும் திட்டங்கள் குறையானது
அழிக்காது காத்தலே முறையானது !

அடுத்த தலைமுறையும் தேடுவான்
அகராதியில் கண்டு அறிந்திடுவான்
விவாசாயம் நாட்டில் இருந்ததென
விவசாயி என்பவன் வாழ்ந்தானென
பார்த்து ரசிப்பான் வலைத்தளத்தில்
பத்தாவது மாடியில் மடிக்கணினியில்

பழனி குமார்
23.02.2019

எழுதியவர் : பழனி குமார் (23-Feb-19, 3:01 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 1190

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே