இது என்ன காலம்

பொன்னி அரிசியில் செய்த சாப்பாடு வாழை இலையில் காத்திருக்கும் அன்னதானத்தை வாங்க ஆளில்லை

கோவில் வாசலில் மறந்து விட்டு சென்ற செருப்பு இன்னும் அதே இடத்தில் ஜோடியாய் கிடக்கிறது

ஊரிலிருந்து வராத அப்பாவின் குழந்தைகள் புது பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அன்றாடங்காய்ச்சியும் இன்று அரசு விடுமுறை நாளென கடை போடவில்லை

மேஜிக் பென்சிலோ என்னவோ வீட்டுச் சுவரில் வரைந்த சின்னம் வீட்டுக்குள்ளேயே உயிர் பெற்று வந்துவிட்டன.

சுத்தபத்தமாய் திருடர்கள் வேலைக்கு கிளம்புகிறார்கள் ரொக்கமாய் பார்த்து வருடம் ஐந்தானது என்று சொல்லிக் கொள்கிறார்கள்

கண்டணமில்லை கட்டணம் மட்டுமே என ஒருதாய் மக்களாக கழகப் பழகப் பார்க்கிறார்கள் மாண்புமிகு வேட்பாளர்கள்

லாபக் கணக்குகளை மட்டும் ஆராய்ந்து சத்தியம் தவறாத உத்தமராய் விரல் மையிட காத்திருக்கின்றனர் வாக்காள பெருமக்கள்

இழப்புகளுக்கெல்லாம் ஈடு கிடைக்கா கணக்கில்லாத மக்கள் வாக்கு வங்கிகளில் தங்களின் பெயர்களையும் இழக்கின்றனர்

வேலை நிமித்தமாய் வேண்டியவருக்கு தந்தையும்

வரவு நிமித்தமாய் வாசல் வந்து வணங்கியவருக்கு தாயும்

மன்றம் நிமித்தமாய் ரசிகனாய் தலைவருக்கு அண்ணனும்

இனம் சாரும் இனமே என்று மாமனும் தங்கள் மக்களாட்சி கடமையை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள்

ஏனென்றால் இது தேர்தல் காலம்.......

ம.வினு மணிகண்டன்

எழுதியவர் : (28-Feb-19, 11:21 am)
சேர்த்தது : வினு மணிகண்டன்
Tanglish : ithu yenna kaalam
பார்வை : 592

மேலே