முதுமை சங்கமம்
அன்றைக்குப் பார்த்தது போலவே,
இன்றைக்கும் அதே அதீத புன்னகை.
கூடவே, ஆழமாய்க் கன்னக்குழி.
கூடவிழைந்த நாளில் நான்
குப்புற விழுந்த குறு மாயக்குழி.
அழுக்கேறிய உள்ளங்கை ரேகைகள்
முறுக்கிப் புடைத்த புறங்கை நரம்புகள்
கருப்பும் எண்ணெயும் கலவாத கூந்தல்
நெருப்பிலிட்டாலும் எரியாத கந்தல்.
பச்சரிசி பல்வரிசையில் அவள்
பாடிய பற்கள் பல இல்லை இன்று.
தேனோடிய திருத்தமான அவள் உதட்டில்
ஈயாடுது, இருபுறமும் இன்று.
சித்திரமாய் புன்னகைத்த
செவ்விதழின் ஓரத்தில்
சிற்றாறாய் உமிழ்நீர் ஊற்று.
திரவியம் தெளித்த தேகவாசனை
தெருவெங்கும் வீசியது அன்று.
மூத்திர வாசனை முகஞ்சுளிக்க வைக்கிறது இன்று.
வண்ணத்துப்பூச்சியாய் வலம்வந்த
நாள் தொலைந்து,
ஓரங்கி உடுப்பாகி,
உச்சரிப்பில் பிழையாகி,
கண்பார்வை கடுகாகி,
கால்வீக்கம் பெரிதாகி,
நடையும் நகையும் அரிதாகி,
நாளின் நீளம் நீண்டு,
நாவில் சுவை நறுங்கி,
நினைவு நீர்த்து,
நித்திரை குறைந்து,
எமன் வருகை எதிர்பார்த்த எதார்த்த வேளையில்
என்வருகை அறிவாளா என்று நான் திகைத்திருக்க,
என் கைபற்றாது, என்கைத்தடி பற்றி,
"நாற்பது வருஷமாச்சு நாம்பார்த்து"
என்றாளே பாதகத்தி நடுங்காமல் உச்சரித்து.
காதலிக்கச்சொல்லி என்றோ வரைந்த என் கவிதை ஏட்டை
கட்டிலுக்கு அடியில் கைதடவிக் கைப்பற்றி,
என்குரலில் படிக்கச்சொல்லி ஏங்கிய வார்த்தையில் எத்தனை பரவசம்.
என்மீது அது இருந்ததா இருக்கிறதா எதுநிசம்?
ச.மெய்யப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
